முக்கொம்பு மேலணை பாலம் உடைந்தது: 110 மீட்டருக்கு தற்காலிக தடுப்பு
முக்கொம்பு மேலணையில் உடைந்த 110 மீட்டர் தொலைவுக்கு மூன்று நிலைகளில் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக பிரத்யேக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.


முக்கொம்பு மேலணையில் உடைந்த 110 மீட்டர் தொலைவுக்கு மூன்று நிலைகளில் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக பிரத்யேக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் 9 மதகுகள் புதன்கிழமை இரவு உடைந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து பாலமும் இடிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் உடைந்த மதகுகளை பார்வையிட்டு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர்.
முதன்மைச் செயலர் ஆய்வு: இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை தமிழக முதல்வரின் முதன்மைச் செயலர் எம். சாய்குமார், பொதுப்பணித்துறை முதன்மைச்செயலர் எஸ்.கே. பிரபாகர், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, முதன்மை தலைமைப் பொறியாளர் எம். பக்தவத்சலம், தலைமைப் பொறியாளர் (வடிவமைப்பு) செல்வராஜ், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ஆர். செந்தில்குமார், ஆற்றுப் பாசனக் கோட்ட செயற்பொறியாளர் டி.பி. கணேசன் மற்றும் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உடைந்த மதகுகளை பார்வையிட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
தற்காலிக தடுப்பு: இதையடுத்து உடைந்த மதகு பகுதிகளில் 110 மீட்டர் தொலைவுக்கு 3 நிலைகளில் தற்காலிக தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. முதலில் 16 ஆயிரம் சவுக்கு கட்டைகள் கொண்டு 5ஆவது மதகு முதல் 15ஆவது மதகு வரையில் உடைந்த பகுதிகளை இணைக்கும் வகையில் தடுப்பு அமைக்கப்படுகிறது. மேலும் 50 ஆயிரம் மணல் மூட்டைகள் கொண்டு ஆற்றின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்படுகிறது. கான்கிரீட் அமைத்து சிமென்ட் பாலங்களும் அமைத்து தடுப்புகள் அமைக்கப்படவுள்ளன.
நவீன இயந்திரங்கள் வருகை: கொள்ளிடத்தில் தண்ணீர் அதிகமாக செல்லும் சூழலில் தற்காலிக தடுப்புகள் அமைக்க தண்ணீர் மூழ்கியபடி சென்று பணிகளை மேற்கொள்வதற்கான இயந்திரங்கள் (புளோட்டிங் மெஷின்) வரவழைக்கப்பட்டுள்ளன. திருச்சியிலிருந்து ஒரு இயந்திரம் வந்துள்ளது. இதேபோல, சென்னையிலிருந்து மற்றொரு இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஆய்வுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: கதவணையில் உள்ள 45 மதகுகளில் 9 மதகுகள் உடைந்துவிட்டன. மீதமுள்ளவற்றில் 10 மதகுகள் ஸ்திரத்தன்மையுடன் இருப்பதை பொறியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதர மதகுகளின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மதகுகள் உடைந்த பகுதியில் உடனடியாக தற்காலிக தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. ஒரு வாரத்துக்குள் இப்பணி முடிவடையும், அதேநேரத்தில் புதிய கதவணைகள் அமைப்பது குறித்து வல்லுநர்களுடன் ஆய்வு செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.
மணல் குவாரிகளால் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 180 ஆண்டுகளுக்கு மேலான பழமையான அணையில் உள்ள 45 மதகுகளில் ஒரு மதகு வலுவிழந்திருந்ததை சரியான தருணத்தில் கண்டறியவில்லை. வலுவிழந்த அந்த மதகு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவுடனேயே அடுத்தடுத்த மதகுகளும் உடைந்து விழுந்துவிட்டன என்றார்.
மேலும், ஒரு மதகு உடைந்தது: இதற்கிடையில் புதன்கிழமை நள்ளிரவுக்கு மேல் 14ஆவது மதகு உடைந்த விழுந்தது. ஆனால், அதன் கான்கிரீட் தூண் அப்படியே நின்றுவிட்டதால் மதகு அடித்துச் செல்லப்படாமல் ஒடிந்த நிலையிலேயே காணப்படுகிறது.
அறிக்கை: முக்கொம்பு மேலணை உடைந்த விதம் குறித்து தமிழக முதல்வருக்கு திருச்சி மண்டல பொதுப்பணித்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வெளியேற்றம்: முக்கொம்பு மேலணையில் வியாழக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகிகள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.
ரூ.410 கோடியில் புதிய கதவணை! 18 மாதங்களில் கட்டி முடிக்கவும் திட்டம்
திருச்சி முக்கொம்பு மேலணை உடைந்து விழுந்ததைத் தொடர்ந்து, ரூ.410 கோடியில் புதிய கதவணைகளை கட்ட பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.
எளமனூருக்கும்-வாத்தலைக்கும் இடையே காவிரி ஆற்றின் நடுவில் இயற்கையாகவே அமைந்த தீவுப்பகுதியான முக்கொம்பில், கடந்த 1834-ஆம் ஆண்டு கதவணை கட்டும் பணி தொடங்கி 1836ஆம் ஆண்டில் முடிந்தது. காவிரியில் 42 மதகுகள், கொள்ளிடத்தில் தெற்கு பிரிவில் 45 மற்றும் வடக்கு பிரிவில் 10 மதகுககள் என மொத்தம் கொள்ளிடத்தில் மட்டும் 55 மதகுகள் உள்ளன. ஒவ்வொரு மதகும் 12 மீட்டர் நீளம் கொண்டவை. அணையின் ரெகுலேட்டர் நீளம் 630 மீட்டர்.
பிரிட்டிஷ் ராணுவ பொறியாளரும், தென்னிந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவருமான சர்.ஆர்தர் காட்டன் என்பவர், கரிகால சோழனின் கட்டுமான முறையைப் பின்பற்றி இந்த அணையை கட்டி வெள்ளநீரைச் சேமிக்க வழி வகுத்தார்.
6.3 மீட்டர் அகலம் கொண்ட இதன் மேல் பகுதி வழியாக 2.55 மீ அகல பாதையில் வாத்தலை - முக்கொம்பு இடையே கார், இரு சக்கர வாகன போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட்டு வந்தது. வடக்கில் கொள்ளிடம் மதகும், தெற்கில் காவிரி மதகும் அமைந்துள்ளன. காவிரி மதகின் தலைப்பைவிட கொள்ளிடம் மதகு தலைப்பு 2 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து காவிரி, கொள்ளிடம் மற்றும் அய்யன் வாய்க்காலிலும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இதில், 45 மதகுகளுடன் கொள்ளிடத்தில் கட்டப்பட்ட முக்கொம்பு மேலணையானது வலுவிழுந்து அதன் 9 மதகுகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து காவிரி, டெல்டா பாசன விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில், மேட்டூரிலிருந்து பாசனத்துக்காக காவிரியில் திறக்கப்படும் தண்ணீரும், காவிரியில் வெளியேற்றப்படும் வெள்ளநீரும் முக்கொம்பு பகுதிக்கு வந்து கொள்ளிடமாகவும், பாசனத்துக்காக காவிரியாகவும் பிரிந்து செல்லும் இயற்கை அமைப்பே உருவாகியுள்ளது. இதில், கொள்ளிடத்தில் கட்டப்பட்டிருந்த பாலம் உடைந்து தண்ணீர் செல்வதால் பெரும் பகுதி தண்ணீர் சென்றுவிடும். தண்ணீரை சேமிக்கவோ, வெள்ளத்தை தடுக்கவோ முடியாத சூழல் உருவாகும்.
எனவே, உடைந்த பகுதிகளை புனரமைத்து தற்காலிக தடுப்புகள் ஏற்படுத்துவது மட்டுமல்லாது புதிய கதவணைகள் கட்டுவது அவசியமானது. இதற்கு தகுந்தபடி பொதுப்பணித்துறை சார்பில் ரூ.410 கோடியில் புதிய கதவணைகள் கட்டுவதற்கான வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொள்ளிடத்தில் தற்போது உள்ளபடி (உடைந்த பகுதியையும் சேர்த்து) புதிதாக 45 மதகுகளுடன் ரூ.325 கோடியில் கதவணை கட்டப்படவுள்ளது. இது கொள்ளிடத்தின் தெற்கு பகுதியில் அமையும். இதேபோல, கொள்ளிடத்தின் வடக்குப் பகுதியில் அய்யன்வாய்க்காலில் 10 மதகுகள் கொண்ட கதவணை வலுவிழந்தாலும் அதற்கு பதிலாக புதிய கதவணை 10 மதகுகள் கொண்டதாக ரூ. 85 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது. மொத்தம் இந்த கதவணைகளுக்காக ரூ.410 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய கதவணைகளை கட்டும் பணிக்கு அரசு ஒப்புதல் அளித்தால் பணிகள் தொடங்கிய 18 மாதங்களுக்குள் கதவணைகளை கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது. உடனடியாக பணிகளை தொடங்கினால் 2019ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கும் வகையிலும் ஆயத்தமாகி வருகின்றனர்.
சுற்றுலா மையம் மூடல்:
இந்நிலையில் முக்கொம்பு சுற்றுலா மையம், முக்கொம்பு பூங்கா ஆகியவை வியாழக்கிழமை பாதுகாப்பு கருதி மூடப்பட்டு, பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. சாலையில் உள்ள நுழைவுப் பகுதியிலேயே தற்காலிக தடுப்புகள் அமைத்து ஊர்க்காவல் படை மூலம் அடையாள அட்டை உள்ள அரசுப் பணியாளர்கள் மற்றும் செய்தியாளர்களை மட்டுமே அனுமதித்தனர். அதேபோல, மேலணைக்கு செல்லும் நுழைவுவாயிலில் உள்ளே செல்லும் நபர்களின் அடையாள அட்டை ஆகியவற்றைப் பரிசோதித்த பின்னரே அணை பகுதிக்குச் செல்ல அனுமதித்தனர். இதனால் முக்கொம்பு பகுதி முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...