தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளுக்கு தேசிய மருத்துவமனைகள் அங்கீகரிப்பு குழுவின் (என்ஏபிஹெச்) தரச்சான்று கட்டாயமாக்கப்படவுள்ளது.
ஜூலை 2009இல் தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. அது 2011இல் ரத்து செய்யப்பட்டது. பின்னர், 2012இல் முதல்வர் காப்பீட்டுத் திட்டமாகவும், அதன்பின்னர் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் என பெயர் மாற்றப்பட்டு தொடர்ந்து வருகிறது. இதில், 312 சிகிச்சை முறைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 1,027 மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சைகள், 154 சிறப்பு சிகிச்சைகள், 154 தொடர் சிகிச்சைகள், 38 முழுமையான பரிசோதனைகள், 8 சிறப்பு உயர் சிகிச்சைகள் சேர்க்கப்பட்டுள்ளன. 158 சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்குக் காப்பீட்டுத் தவணைத் தொகையாக ஆண்டொன்றுக்கு ரூ. 517 கோடியை அரசு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட சில நோய்களுக்கு ரூ. 2 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். மேலும், பச்சிளம் குழந்தை முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினரும் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள்: இத்திட்டத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இணைந்துள்ளன. தமிழகத்தில் உள்ள 48 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 29 மாவட்ட தலைமையிட மருத்துவமனைகள், 274 அரசு மருத்துவமனைகள் என 353 அரசு மருத்துவமனைகளும், 416 தனியார் மருத்துவமனைகளும் அங்கம் வகிக்கின்றன. இத்திட்டத்தில் பல ஆயிரம் கோடி பெறும் மருத்துவமனைகள் தங்களது தரத்தை உயர்த்தி, நவீன உபகரணங்களை உள்புகுத்தி நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என மத்திய, மாநில சுகாதாரத்துறைகள் முடிவு செய்தன. இதன்பயனாக, முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகள் அனைத்தும் தேசிய மருத்துவமனைகள் அங்கீகரிப்பு குழு (என்ஏபிஹெச்) தரச்சான்று பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்து தேசிய அளவில் மதிப்பெண் வழங்கப்படுவதைப் போன்று மருத்துவமனைகளையும் மதிப்பீடு செய்து தேசிய அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இந்திய தரக் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் சுய சார்ப்பு பெற்ற அமைப்பான தேசிய மருத்துவமனைகள் அங்கீகரிப்புக் குழு இந்த சான்றை வழங்குகிறது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் இக்குழு அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் 79,145 அங்கீகரிப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில், ஆயிரம் மருத்துவமனைகள் மட்டுமே இந்த அமைப்பிடம் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்துள்ளன. இதில், சுமார் 700 மருத்துவமனைகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றுள்ளன.
அங்கீகாரம் வழங்குவது எப்படி?: தர அங்கீகாரத்துக்காக மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள், சிகிச்சைக்கான கருவிகள் என அனைத்தும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. மேலும், திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், நோயாளிகள் கவனிப்பு, கட்டடம் என பல்வேறு நிலைகளில் மதிப்பீடு செய்து அதற்கேற்ப பல்வேறு நிலைகளில் சான்றுகள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தின் நிலை: தமிழகத்தில் முதல்வர் மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தில் இதுவரை சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி காப்பீட்டுத் தொகையாக மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு மருத்துவமனைகள் மட்டும் ரூ.1,161.61 கோடியை காப்பீட்டுத்தொகையாக பெற்றுள்ளன. இத்தனை கோடியை பெற்ற மருத்துவமனைகள் தங்களது தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே தரச்சான்று கட்டாயம் என்ற கடிவாளத்தை தேசிய மருத்துவமனைகள் அங்கீகரிப்பு குழு மூலம் மத்திய, மாநில அரசுகள் கையில் எடுத்துள்ளன.
ஓராண்டுக்கு கெடு: இந்த சான்றை பெறுவது தொடர்பாக காப்பீட்டுத்திட்டத்தில் இணைந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மண்டலம் வாரியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. திருச்சி, திண்டுக்கல், கடலூர்,தஞ்சாவூர், கரூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகியவற்றுக்கு இருகட்டமாகவும், கோவை, தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, திருப்பூர், வேலூர் மாவட்டங்களுக்கு தனியாகவும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருவள்ளூர், தேனி, விருதுநகர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு தனியாகவும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக அனைத்து மருத்துவமனைகளும் தரச்சான்று பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து என்ஏபிஹெச் வசம் ஒப்படைத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. விண்ணப்பம் அளித்து ஓராண்டு காலத்துக்குள் இந்த சான்றை பெற வேண்டும் என முதல்வர் காப்பீட்டுத்திட்ட மருத்துவமனைகளுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், காப்பீட்டுத்திட்டத்தில் தொடருவதில் மருத்துவமனைகளுக்கு சிக்கல் எழும் அபாயம் உள்ளது.