பயனற்ற நிலையில் சின்ன வெங்காய குளிர்பதன கிடங்கு
தமிழகத்தில், சின்ன வெங்காயம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இம்மாவட்டத்தில், பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய ஒன்றியங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகளின்


தமிழகத்தில், சின்ன வெங்காயம் சாகுபடியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இம்மாவட்டத்தில், பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய ஒன்றியங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகளின் பிரதான தொழிலாக சின்ன வெங்காய சாகுபடி விளங்குகிறது.
குறுகிய கால பயிர், குறைந்த நீர் மற்றும் சாகுபடி செலவு குறைவு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் இங்குள்ள விவசாயிகள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வைகாசி மற்றும் புரட்டாசி ஆகிய இரண்டு பட்டங்களில், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் சின்ன வெங்காயத்தை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். தமிழகத்தின் மொத்த சின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 23 சதவீதம் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆற்றுப்பாசன வசதியோ, கிணற்றுப்பாசன வசதியோ இல்லாததால், மானாவாரி சாகுபடியே அதிகளவில் நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டில் இதுவரை 7,049 ஹெக்டேரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அறுவடை காலங்களிலும், வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யும்போது குறைந்த விலைக்கும், தட்டுப்பாடு ஏற்படும்போது அதிக விலைக்கும் சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதுபோன்ற காலங்களில், அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை விவசாயிகள் தங்களது வயல்களிலேயே பட்டறை அமைத்து பாதுகாத்து வருகின்றனர். இவ்வாறு பாதுகாக்கும்போது, தொடர் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் சின்ன வெங்காயம் அழுகி, விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு வந்தது.
இதையறிந்த விவசாயிகளும், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் சின்ன வெங்காயத்திற்கு குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, வெங்காய உற்பத்தி அதிகரிப்பு, விலை வீழ்ச்சி, இயற்கை சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையிலும், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட செட்டிக்குளத்தில் ரூ. 1.14 கோடியில் சின்ன வெங்காய குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டது.
இங்கு, 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு, வணிக வளாகம், 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட காய், கனிகளுக்கான குளிர்பதன சேமிப்பு கிடங்கு ஆகியவை கடந்த 27.6,2014-ல் திறந்துவைக்கப்பட்டது. இதனால், சின்ன வெங்காய உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால், இதுவரை இந்த கிடங்கில் ஒரு கிலோ வெங்காயத்தைக் கூட பதப்படுத்தவில்லை. இதனால், சின்ன வெங்காய விவசாயிகள் தங்களது வயல்களிலேயே பழைய முறையை பின்பற்றி பட்டறை அமைத்து, அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை வெயிலிலும், மழையிலும் பாதுகாத்து வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் கூறியது:
விலை வீழ்ச்சியின்போது, விவசாயிகளும், விலை அதிகரிக்கும்போது நுகர்வோரும் பாதிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டது.
முன்னோட்டமாக, சுமார் 7 மூட்டை வெங்காயம் பதப்படுத்துவதற்காக வைக்கப்பட்டது. ஆனால், அவை அனைத்தும் அழுகி வீணாகிவிட்டது. இதனால், விவசாயிகள் யாரும் இந்த குளிர்பதன கிடங்கை பயன்படுத்த முன்வரவில்லை. இதையறிந்த மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியை வணிக வளாகமாக மாற்றியுள்ளது.
சின்ன வெங்காயத்தை, எவ்வளவு தட்பவெப்ப நிலையில் வைத்தால் பதப்படுத்தமுடியும் என்பதை அறிந்து, குளிர்பதன கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதுவரை, தற்போதுள்ள கிடங்கில் தக்காளி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளை பதப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
பயன்பாடின்றி கிடக்கும் சின்ன வெங்காய குளிர்பதன கிடங்கை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே, சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...