சத்துணவு மைய சிலிண்டர்களுக்கு மானியம் மறுப்பு! மத்திய அரசு மனம் இறங்குமா?
வருமானம் அதிகம் உள்ளோர் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை விட்டுத்தர வேண்டும் எனக் கோரும் மத்திய அரசு, தமிழகத்தில் இயங்கி வரும் சத்துணவு, அங்கன்வாடி மையங்களுக்கான எரிவாயு


திருநெல்வேலி: வருமானம் அதிகம் உள்ளோர் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை விட்டுத்தர வேண்டும் எனக் கோரும் மத்திய அரசு, தமிழகத்தில் இயங்கி வரும் சத்துணவு, அங்கன்வாடி மையங்களுக்கான எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியத்தை வழங்காமல் மல்லுக்கட்டி வருகிறது.
இதனால், பெரும்பாலான மையங்களில் எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர்கள் இருந்தாலும் பயன்படுத்தாமல் மூலையில் முடங்கியுள்ளன.
வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்தக் கூடாது என்பதற்காகவும், பள்ளிக்கு மாணவர்கள் வருகையை ஊக்கப்படுத்தவும் இலவச மதிய உணவுத் திட்டத்தை 1955இல் காமராஜர் கொண்டுவந்தார். ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில், எட்டயபுரத்தில் முதன்முதலாக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் என்ற பெயரில் 1982இல், ஊரகப் பகுதியில் உள்ள பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டு நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் 2வயது முதல் 9 வயது வரையில் உள்ள குழந்தைகளுக்கு ஆரம்பப் பள்ளிகளில் சத்துணவு வழங்கப்பட்டது. இதன் பிறகு 1984இல், 15 வயது வரைக்கும் என நீடிக்கப்பட்டது. இப்போது, 10ஆம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. 1989இல் சத்துணவில் முட்டை வழங்கும் திட்டமும், 2001இல் பயறு வகைகள், உருளைக் கிழங்கு, 2013இல் கலவை சாதம் வழங்கும் திட்டமும் என மேம்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் 2016-17 கணக்கெடுப்பின்படி 43,047 சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. இதில், 55 லட்சத்து 5 ஆயிரத்து 847 பேர் பயன்பெற்று வருகின்றனர். இது தவிர, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 16 மாவட்டங்களில் இயங்கி வரும் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட பள்ளிகளிலும் சத்துணவு வழங்கப்படுகிறது. இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள 54, 439 அங்கன்வாடி மையங்களில் 13 லட்சத்து 97 ஆயிரத்து 465 குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.
சத்துணவு மையங்களில் நபர் ஒருவருக்கு எரிபொருள் செலவு, மளிகை செலவு, காய்கறி செலவு ஆகியவற்றை சேர்த்து ரூ.1.30 காசுகள் வழங்கப்படுகிறது. பெரும்பாலான மையங்களில் விறகு அடுப்பு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையை மாற்றும் வகையில், 2011ஆம் ஆண்டு முதல் அனைத்து மையங்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, 50 சதவீதத்துக்கும் மேலான மையங்களுக்கு சிலிண்டர் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், பயன்படுத்திய சிலிண்டரை மாற்றி புதிய சிலிண்டர் பெறும்போதுதான் சத்துணவு மைய பணியாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வழங்க வேண்டியிருந்தது. மானியமில்லாமல் ரூ.750 முதல் ரூ.800 வரை செலுத்த வேண்டியுள்ளது. இல்லையெனில் வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்களை ரூ.1,300 விலையில் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. சத்துணவு மையங்களில் நபர் ஒருவருக்கு ரூ1.30 காசுகள் என தமிழக அரசு வழங்கும் நிலையில் சிலிண்டர் கொள்முதல் செய்ய இயலாது. எனவே, பெரும்பாலான மையங்களில் சமையல் எரிவாயு அடுப்புகளும், சிலிண்டர்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. சில சத்துணவு மைய பணியாளர்கள் தங்களது சொந்தப் பணத்தை செலவழித்து சிலிண்டர் வாங்குகின்றனர். சத்துணவு, அங்கன்வாடி மையங்களை அரசு நிறுவனமாக மத்திய அரசு கருதுவதால் மானியம் வழங்க மறுப்பதாக சத்துணவுப் பணியாளர்கள் புகார் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக, தமிழக சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ஐ. பெரியசாமி கூறியது: வாரம் முழுவதும் முட்டை, வாரத்தில் ஒருநாள் கலவை சாதம், கொண்டைக் கடலை, உருளைக் கிழங்கு என பல்வேறு நிலைகளில் சத்துணவு திட்டத்தை அரசு மேம்படுத்தியுள்ளது. ஆனால், அவற்றுக்கான செலவுத் தொகையை மட்டும் நபர் ஒருவருக்கு ரூ.1.30 காசுகள் என்ற நிலையில் வைத்துள்ளது. இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இத் தொகையை நபர் ஒருவருக்கு ரூ.3 ஆக உயர்த்த வேண்டும். முதன்முதலில் மானியத்தில் சிலிண்டர் பெற்ற மையங்களுக்கு பிறகு பெறப்படும் சிலிண்டர்களுக்கு முழுத் தொகை வழங்க வேண்டும் என எரிவாயு முகமைகள் நிர்பந்தம் செய்கின்றன. இதனால், பல மையங்களில் சமையல் எரிவாயு அடுப்புகளை பயன்படுத்துவதே இல்லை. மத்திய அரசு மானியம் தராததால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என தமிழக அரசும் பாராமுகமாகவே உள்ளது. சத்துணவு ஊழியர்களின் எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் நிதி இல்லை என்ற வார்த்தை மட்டுமே பதிலாக கிடைக்கிறது என்றார் அவர்.
பணியாளர்களின் கோரிக்கைகள் என்ன?
சத்துணவு, அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது பெறும் ஊதியத்தில் பாதித் தொகையை மாதாந்திர ஓய்வூதியமாக வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுதியமாக பணியாளர்களுக்கு ரூ.3 லட்சம், சமையலர், உதவியாளர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். ஒரு பணியாளரே 3 அல்லது அதற்கு மேலான மையங்களை பராமரிக்கும் நிலை உள்ளதால் காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், ஆண், பெண் இருபாலருக்கும் சமமான பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு மே மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்பதே பணியாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...