உள்ளாட்சிகளால் மாசுபடும் நீர்நிலைகள்
உள்ளாட்சி அமைப்புகளால் காவிரி ஆறு தொடர்ந்து மாசுபடுத்தப்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மூலமாக இந்த அவலம் கட்டுப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


உள்ளாட்சி அமைப்புகளால் காவிரி ஆறு தொடர்ந்து மாசுபடுத்தப்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மூலமாக இந்த அவலம் கட்டுப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தின் சுமார் 80 சதவீத மக்களின் குடிநீர்த் தேவையைக் காவிரி பூர்த்தி செய்கிறது. ஒருபுறம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டாலும், மறுபுறம் உள்ளாட்சி அமைப்புகளின் சாக்கடை நீர் இந்த ஆற்றில்தான் நேரடியாகவும், மறைமுகமாகவும் கலக்கப்படுகிறது.
குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து வெளிவரும் சாக்கடைக் கழிவுகள், கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆகியன ஆற்றில்தான் கலக்கின்றன. காவிரியின் துணை நதிகளான பவானியிலும், அமராவதியிலும், நொய்யலிலும் இதே நிலைதான்.
காவிரியில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டும் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் கழிவுநீர் நேரடியாகக் கலக்கிறது. ஈரோடு மாவட்டம்- பவானி நகராட்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து காவிரி, பவானி ஆற்றில் 3 கோடி லிட்டர் கழிவுநீரும், நாமக்கல் மாவட்டம்- குமாரபாளையம், பள்ளிபாளையம் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து தலா 2.5 கோடி லிட்டர் கழிவுநீரும் தினமும் காவிரியில் கலக்கிறது.
திருப்பூர் மாநகராட்சி, சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 25 கோடி லிட்டர் கழிவுநீரும், கோவை மாநகராட்சி, சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 20 கோடி லிட்டர் கழிவுநீரும் வெளியேற்றப்பட்டு நீர்நிலைகளில் கலக்கிறது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் செ.நல்லசாமி கூறியதாவது: திருட்டுத்தனமாக கழிவுநீர் டேங்கர் லாரிகள் மூலம், நள்ளிரவு நேரத்தில் குளங்களில் கழிவுநீரைக் கொட்டினால் லாரிகளை பறிமுதல் செய்வதுடன், குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளும் தங்களது கழிவுநீரை நீர்நிலைகளில் கலக்கவிடாமல் தடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உள்ளாட்சிகளில் முழுமையாக அமல்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சாய ஆலைகளுக்கு மேலும் கிடுக்கிப்பிடி: இது குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 4-7-2007, 9-8-2007 ஆகிய தேதிகளில் சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவுப்படி ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஒவ்வொரு மாதமும் ஆட்சியர் தலைமையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மின் வாரிய அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டு 100 சதவீத சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றும் ஆலைகள், விதிகளை மீறும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 439 சாய, சலவை, பிரிண்டிங் பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல அனுமதியுள்ள ஆலைகளில் விதிகளை மீறியதாக 334 ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 41 தோல் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பு மூலம் கழிவுநீரை வெளியேற்றும் அனைத்து ஆலைகளின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது என்றார்.
திருப்பூருக்கு அவசியமான தீர்ப்பு:
திருப்பூரில் சுமார் 10,000 பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு ரூ. 36,000 கோடி அளவுக்கு ஏற்றுமதியும், பல்லாயிரம் கோடி மதிப்பில் உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்று வருகின்றன.
திருப்பூரில் பின்னலாடைத் தொழிலின் வளர்ச்சியால் 2010-ஆம் ஆண்டுக்கு முன்னதாக சாயப் பட்டறைகளுக்கான தேவையும் அதிகரித்தது. இதனால் நீர்நிலைகள், ஆற்றோரங்களில் எவ்வித அனுமதியும் இல்லாமல் சாயப் பட்டறைகள் திறக்கப்பட்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் நொய்யல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விடப்பட்டது.
இதனால் நீர்நிலைகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின. இது தொடர்பாகத் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளின் காரணமாக, 2010-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பூரில் சாய ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டன. தொழில் துறையினரின் நீண்ட போராட்டத்தால், மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ. 200 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தொழில் துறையினர் சார்பில் கூடுதல் வங்கிக் கடன்கள் பெற்று, பதிவு பெற்ற 450 சாய ஆலைகளை இணைத்து மொத்தமாக 18 பொது சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, சாய ஆலைகள் செயல்படத் தொடங்கின.
அதற்குப் பிறகும், திருப்பூரில் நொய்யல் போன்ற நீர்நிலைகளில் சாயக் கழிவுநீர் கலப்பது அன்றாட நிகழ்வாகவே இன்றுவரை உள்ளது. இதைத் தவிர, மாநகராட்சிப் பகுதிகளில் வெளியாகும் கழிவுநீரில் 75 சதவீதம் சுத்திகரிப்பு இல்லாமல் நொய்யல், நல்லாறு உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகள், குட்டைகளில் தேங்குகிறது. இதனால் நீர் மாசுபடுகிறது. சாயக் கழிவால், நொய்யலில் தற்போது உப்புத் தன்மை 3,200 டி.டி.எஸ். அளவுக்கும் மேல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.நாகராஜன் கூறியதாவது:
திருப்பூரில் பதிவு பெற்று செயல்படும் ஆலைகள் அனைத்தும் பொது சுத்திகரிப்பு நிலையங்களின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும் உரிய அனுமதி பெறாமல் மறைமுகமாகச் செயல்படும் சிறிய அளவிலான பட்டறைகள் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரைத் திறந்துவிடுகின்றன. நாடு முழுவதும் பூஜ்ய அளவு சுத்திகரிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.
அனைத்து மாநிலங்களுக்கான தீர்ப்பு: திருப்பூர் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி (வடக்கு) இளங்குமரன் கூறியதாவது:
திருப்பூரில் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாமல் முறைகேடாகச் செயல்படும் ஆலைகள் மிகவும் குறைவு. மறைமுகமாக சிறு சிறு அளவில் அறைகள், வீடுகளில் வைத்து சாயப் பட்டறை நடத்துவோரே நீர்நிலைகளில் கழிவுகளைக் கலக்கின்றனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை இவ்வாறு செயல்பட்ட 84 ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நொய்யலில் டி.டி.எஸ். தொடர்ந்து 2,500 என்ற அளவில் உள்ளது. அவ்வப்போது சிறிது ஏற்ற இறக்கங்கள் உள்ளன. தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் இப்பிரச்னை பெரிய அளவில் உள்ளது. எனவே, தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்குமானது என்றார்.
இது குறித்து நொய்யல் பாசன விவசாயிகள் பாதுகாப்பு சபை துணைத் தலைவர் கே.சி.குழந்தைசாமி கூறியதாவது:
2010-க்கு முன்னதாக நொய்யலில் டி.டி.எஸ். 4,000-க்கும் மேல் சென்ற காரணத்தால் வழக்கு தொடரப்பட்டு ஆலைகள் மூடப்பட்டன. சாய ஆலைகள் மூடப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டபோது நொய்யலில் டி.டி.எஸ். அளவு 1,600 வரை இருந்தது. தற்போது கடந்த வாரம் அளவிட்டபோது 3,200 வரை வந்துள்ளது.
உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கினாலும், அதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்குமே உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...