நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கேந்திரிய வித்யாலயாவின் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுமா?

காரைக்காலில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நிலவும் குறைபாடுகளால் மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து வருவதாக மாணவ, மாணவிகளின் பெற்றோர் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

News image
காரைக்கால் மாவட்டம், நிரவியில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளி.
Updated On :29 ஜனவரி 2024, 11:09 am

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்காலில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நிலவும் குறைபாடுகளால் மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து வருவதாக மாணவ, மாணவிகளின் பெற்றோர் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
காரைக்காலில் கடந்த 2010-ஆம் ஆண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கப்பட்டது. காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள பழைமையான அரசு நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தில் தொடங்கப்பட்ட இப்பள்ளி, நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு நிரவியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் பழைய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இங்கு, 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான நிலைகளில் சுமார் 400 மாணவர்கள் படிக்கின்றனர்.
ஆய்வகம் உள்ளிட்ட பிற வசதிகள் இங்கு இல்லாததால், கேந்திரிய வித்யாலயத்தின் விதிகளுக்குள்பட்டு கல்வி கற்பிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதற்கு, இடப் பிரச்னையே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கேந்திரிய வித்யாலாயா பள்ளிக்காக காரைக்கால் பகுதியில் 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மாநில அரசின் ஒப்படைப்புப் பணி தாமதத்தால், பள்ளி இடப்பிரச்னைக்கு முடிவுக்குக் கிடைக்காமல் இருப்பதாகத் தெரியவருகிறது.
இப்பள்ளியில் தமிழ் மொழி பாடம் கிடையாது. ஹிந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிப் பாடங்களே பிரதானமாக உள்ளன. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலத்தவர்களின் குழந்தைகள் இங்கு பயின்று வருவதால், பள்ளி விதிகளுக்குள்பட்ட மொழிகளின் ஆளுமையை வளர்த்துக் கொள்ள மாணவர்களால் முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இப்பள்ளியில் நிலவும் பிரச்னைகளைச் சரிசெய்ய பள்ளிக்கு நிரந்தர முதல்வர் இல்லாததும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இப்பள்ளிக்கு தாற்காலிக முறையில் நியமிக்கப்படும் முதல்வர்கள் 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே இங்கு பணியாற்றுகின்றனர். பின்னர் அவர்கள் வேறு இடத்துக்குப் பணி மாறுதல் பெற்று சென்றுவிடுகின்றனர். இதே போல, சமூக அறிவியல் உள்பட பல பாடங்களுக்கு நீண்ட மாதங்களாக ஆசிரியர்கள் இல்லை. மேலும், எந்தப் பாடத்துக்கும் நிரந்தர ஆசிரியர் இல்லை. அனைத்து ஆசிரியர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்களாகவே உள்ளனர்.
கடந்த ஆண்டு இப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களை பெற்றனர். இருப்பினும், இப்பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்பு இல்லாததால், இங்கு 10-ஆம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்களை காரைக்காலில் உள்ள வேறு சில மத்திய, மாநில பாடத் திட்டப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் பெரும் இன்னல்களை சந்திக்க நேரிட்டது. நிகழாண்டும் அதே நிலை ஏற்படும் எனத் தெரிகிறது. இதனால், வரும் கல்வியாண்டிலாவது இப்பள்ளியில் பிளஸ் ஒன் வகுப்பு தொடங்கவேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த 3 பள்ளிகளையும் சென்னையில் உள்ள மண்டல நிர்வாகமே கவனிக்க வேண்டும். மாநில கல்வித்துறைக்கு இதில் எந்தப் பங்கும் கிடையாது. இந்த நிலையில், பள்ளியில் நிலவும் பிரச்னைகள் குறித்து சென்னை மண்டல நிர்வாகம் கண்டும் காணாத போக்கை கடைப்பிடிப்பது வித்யாலயா பள்ளி மாணவர்களை வெகுவாக பாதிக்கச் செய்கிறது என்கின்றனர் மாணவர்களின் பெற்றோர்.
இதுகுறித்து சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம் கூறியது :
நிரவியில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் பிரச்னைகள் குறித்து முதல்வருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளேன். இந்தப் பள்ளி சிறப்பான முறையில் மேம்படுத்தப்படுவதுடன், என்.ஐ.டி அல்லது ஜிப்மர் வளாகத்தில் மேலும் ஒரு கேந்திரிய வித்யாலயம் அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதுகுறித்து கேந்திரிய வித்யாலயத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி உதயக்குமாரிடம் கேட்ட போது, "பள்ளிக்கு நிரந்தர இடம் ஒதுக்குதல், நிரந்தர முதல்வரை நியமித்தல், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற முக்கிய கோரிக்கைகள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சென்னை மண்டல நிர்வாகம், புதுச்சேரி மாநில முதல்வர்,காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. விரைவான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.
புதுச்சேரி முதல்வர், துணைநிலை ஆளுநர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி, காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் புகழை நிலைக்கச் செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.