மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் அளித்த புதிய தொழில்நுட்ப உதவியுடன் கடல் முகத்துவார பகுதிகளில் வலைக்கூண்டுகள் அமைத்து கொடுவா மீன் வளர்க்கும் தொழில் மூலம் வாழ்வாதாரம் பெற்று வருவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
நோக்கம்: கடலோர உவர்நீர் நிலைகளில் அதற்கேற்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீன் வளர்ப்புக்கு பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே சென்னையில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை நிறுவனமான மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தின் முக்கியப் பணியாகும். அதோடு, மீன் நோய்கள் என்னவென்பதை கண்டறிந்து, அதற்கு எவ்வகை உணவு அளித்தால் நிவர்த்தி செய்து வர்த்தகத்தையும் அதிகரிக்கப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
குறைந்து வரும் மீன் வளம்: தற்போதைய நிலையில் கடலில் மீன்வளம் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு முன்பு வரையில் இயற்கையாகவே மீன்வளம் அதிகம் இருந்தது. அதற்குக் காரணம், மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் குறைவாகவே இருந்தனர். இப்போது அதிகம் பேர் ஈடுபட்டு வருவதால் மீன்கள் வளம் வெகுவாக குறைந்து வருகிறது. இதற்காகவே ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் மீன் குஞ்சு பொரிப்பு காலமாக கடலுக்குள் செல்லவும் தடை உள்ளது. இத்தகைய காலங்களில் மீனவர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர்.
இதற்கு மாற்றாக....: இதுபோன்ற நேரங்களில் வாழ்வாதாரம் பெறும் நோக்கத்திலேயே கடலோர முகத்துவாரங்களில் வலைக்கூண்டுகள் அமைத்து முத்தொடர் முறையில் கொடுவா மீன்கள் வளர்க்கும் புதிய தொழில்நுட்பத்தை இந் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
வலைக்கூண்டுகளில் முத்தொடர் முறையில் மீன்கள் உற்பத்தி செய்வது குறித்து மீனவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, முதன்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமமான வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில், மீனவ குடும்பங்களுடன் இணைந்து செயல்படுத்தியதில் ஆராய்ச்சிக்கு சாதகமாக பலன் கிடைத்துள்ளது. இதனால் இத்தொழிலில் ஈடுபட மீனவர்களிடையே ஆர்வம் ஏற்பட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை தேடி ஆர்வத்துடன் வரும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுழற்சி முறையில் வருவாய்: இது குறித்து அப்துல் கலாம் குழுவைச் சேர்ந்த சரிதா கூறியதாவது: இந்த மீன்குஞ்சுகள் தலா ரூ.2}க்கு வழங்கப்படுகிறது. இதை முதல் வலைக் கூண்டில் 45 நாள்கள் வளர்த்து ரூ.14}க்கு விற்பனை செய்கின்றனர்.
2}ஆவது முறையில் 3 மாதம் வளர்த்து ரூ.50 முதல் ரூ.70}க்கும், அதையடுத்து 5 முதல் 6 மாதம் வரையில் வளர்த்த மீனை ஒரு கிலோ என்ற அளவில் விற்பனை செய்கின்றனர்.
இதில் மீன் குஞ்சுகள் 60 சதவீத பிழைப்புத் திறன் இருந்தாலே நல்ல லாபம் கிடைக்கும். இதுபோல் ஒரு மீன் உற்பத்தி செய்வதற்கு ரூ.190 வரையில் செலவாகிறது. ஆனால், ஒரு கிலோ தரம் கொண்ட மீன் ரூ.450}க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஒவ்வொரு நிலையிலும் மீன்களை வளர்த்து சுழற்சி முறையில் அவர்களுக்குள்ளேயே விற்பனை செய்வதால் போதுமான வருவாயும் கிடைக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 500 கிலோ வரையில் பிடித்து விற்பனைக்கு அனுப்பியதில் அதிக வருவாயும் கிடைத்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு முறை முதலீடு... 10 ஆண்டுகளுக்கு பயன்பாடு: உவர்நீர்நிலை மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி குமரன் கூறுகையில், மீனவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலேயே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, இந்த முறை மூலம் நல்ல அனுபவமும் கிடைத்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் விரிவுபடுத்த உள்ளோம்.
முத்தொடர்பு முறையில் வலைக்கூண்டுகளில் மீன்வளர்ப்பு தொழில் செய்வதற்கு ஆரம்பத்தில் நாற்றாங்கால் வலைக்கூண்டு ரூ.7200, 2}ஆம் வகை வலைக் கூண்டுக்கு ரூ.20,000, பெரிய வலைக்கூண்டுக்கு ரூ.70,000 என மொத்தம் ரூ.97,200 ஒரு முறை முதலீடு செய்ய வேண்டும். இவ்வகை வலைக்கூண்டுகள் மழை, புயல் காற்றை தாங்கும் சக்தி கொண்டவை. 10 ஆண்டுகள் வரையில் இவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தொழில் நுட்பம் மூலம் மீன் வளர்க்க விரும்புவோருக்கு மத்திய உவர்நீர் நிலை மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் பயிற்சி பெறவும், தொழில்நுட்ப உதவியும் அளிக்கும் என்றார் அவர்.