ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

21 மாவட்டங்களில் எஸ்சி, எஸ்டி விடுதிகளுக்கு உணவுக் கட்டணம் நிறுத்தம்!

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இயங்கி வரும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மாணவர், மாணவியர் விடுதிகளுக்கு 21 மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான உணவுக் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:25 pm

ஆர். முருகன்

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இயங்கி வரும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மாணவர், மாணவியர் விடுதிகளுக்கு 21 மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான உணவுக் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, விடுமுறைக் காலத்தில் மூடப்படும் விடுதிகள் மீண்டும் திறக்கப்படாமல் நிரந்தரமாக மூடும் அபாயம் உள்ளதாக விடுதிக் காப்பாளர்கள் புகார் கூறியுள்ளனர்.
தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகளுக்காக 1,324 ஆதிதிராவிடர் நல விடுதிகளும், 42 பழங்குடியினர் நல விடுதிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில், 98,539 ஆதிதிராவிடர் மாணவர், மாணவிகளும், 2,782 பழங்குடியினர் மாணவர், மாணவிகளும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கான உணவுக் கட்டணமாக பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா ஒருவருக்கு ரூ.755, கல்லூரி மாணவர்களுக்கு தலா ஒருவருக்கு ரூ.875 வழங்கப்படுகிறது. 2017-18ஆம் கல்வியாண்டு முதல் இந்த கட்டணம் பள்ளி மாணவர்களுக்கு ரூ.875 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 1,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர், மாணவிகளுக்கு வாரந்தோறும் புதன்கிழமைகளில் இறைச்சியும் (சிக்கன், மட்டன்), 5 நாள்களுக்கு முட்டையும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் அரிசி மூட்டைகளும், கூட்டுறவு பேரங்காடிகள் மூலம் மளிகை, பலசரக்கு பொருள்களும் கொள்முதல் செய்யப்படுகின்றன. இறைச்சி, முட்டை, காய்கனிகள், உள்ளூர் சந்தைகளில் விடுதிக் காப்பாளர்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
விடுதிகளுக்கான உணவுக் கட்டணத்தை காலாண்டுக்கு ஒருமுறை வழங்கும் முறை நடப்பு கல்வியாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், 2016-17ஆம் கல்வியாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான (ஜனவரி, பிப்ரவரி, மார்ச்) உணவுக் கட்டணம் வழங்கப்படவில்லை. அரசின் சார்பில் நிதி வழங்கப்பட்டும், ஆதிதிராவிடர் நல இயக்குநரின் நடவடிக்கையால் நிலுவையில் உள்ளது என்கின்றனர் விடுதிக் காப்பாளர்கள். தூத்துக்குடி, தேனி, திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், திருப்பூர், கரூர், நாமக்கல், நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களுக்கு மட்டுமே உணவுக் கட்டணம் வழங்கப்பட்டுள்ளது. 21 மாவட்டங்களுக்கு வழங்கப்படவில்லை. 11 மாவட்டங்களுக்கும் கையூட்டு பெற்றுக் கொண்டே தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்துக்கான நிலுவைத் தொகை மட்டும் ரூ.1 கோடியே 57 லட்சத்து 8 ஆயிரத்து 365 ஆக உள்ளது. 21 மாவட்டங்களுக்கும் சேர்த்து கணக்கிட்டால் நிலுவைத் தொகை ரூ.21 கோடிக்கு மேல் உள்ளது என்கின்றனர் விடுதிக் காப்பாளர்கள். இதுமட்டுமல்லாது, கடந்த 6ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கும் துறையின் இயக்குநர் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இக் கடிதத்தில் மாவட்டங்களில் அமைந்துள்ள விடுதிகளின் விவரங்கள் கோரப்பட்டுள்ளன. மேலும், 2017-18ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக கல்வித் துறை மூலம் வழங்கப்படும் இஎம்ஐஎஸ் (கல்வி மேலாண்மை தகவல் திட்டம்) குறியீடு, கல்வி உதவித் தொகை அடையாளச் சான்று ஆகியவற்றைக் கொண்டு 100 சதவீதம் தணிக்கை செய்த பிறகே உணவுக் கட்டண நிதி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதிகளில் சேர்க்கை மற்றும் இதர நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு இறுதி செய்து வருகிறது. இதன்படியே விடுதிகளுக்கான கட்டணங்களை மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு வழங்கி வருகிறது. இப்போது, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரின் தன்னிச்சையான நடவடிக்கையால் ஆவணங்களை சென்னை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதுமட்டுமல்லாது 2017-18ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கை முடிந்து அதன் விவரங்களை வழங்க ஜூலை மாத இறுதியோ அல்லது ஆகஸ்ட் மாதமோ ஆகலாம். ஏற்கெனவே, 3 மாதங்கள் நிலுவையில் உள்ள சூழலில் மேலும் 7 மாதங்களுக்கு உணவுக் கட்டணம் நிறுத்தப்படும் சூழல் உள்ளது.
இதனால், நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு பேரங்காடிகளுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதுமட்டுமல்லாது, இறைச்சி, முட்டை, காய்கனிகளுக்கு அந்தந்த விடுதிக் காப்பாளர்களே சொந்த செலவிலோ, கடனிலோ கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்பந்தம் எழுந்துள்ளது. இதே நிலை நீடித்தால், விடுதிகளை மூடவேண்டிய கட்டாயத்துக்கு விடுதிக் காப்பாளர்கள் ஆளாகியுள்ளனர். பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்து மே மாதம் முதல் விடுதிகள் தாற்காலிகமாக மூடப்படும் என்ற நிலைக்கு மாறாக நிரந்தரமாக மூடப்படும் சூழலே உள்ளது என்கின்றனர் விடுதி மாணவர்கள்.
 

நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு

மத்திய, மாநில அரசு எஸ்சி, எஸ்டி ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். ராஜா கூறியது:
எஸ்சி, எஸ்டி விடுதிகளில் ரூ.1.50 கோடியில் 582 சுகாதார குட்டை தகளிகள் (நாப்கின்களை எரிக்கும் கூடம்) அமைக்கப்பட்டுள்ளன. ரூ.81 லட்சத்தில் மின்னணு எடை இயந்திரம், ரூ.15.70 லட்சத்தில் நீராவி கொதிகலன்கள் மற்றும் தட்டு, டம்ளர், சலவை இயந்திரங்கள் என ரூ.22 கோடியில் கொள்முதல் செய்யப்பட்டு பெரும்பாலானவை பயன்படுத்தாத நிலையில் உள்ளன. இவற்றை ஆய்வு செய்யாமல், வழக்கமாக வழங்கப்படும் உணவுக் கட்டணத்தை நிறுத்தி வைத்து ஆய்வு செய்து வழங்குவதாகக் கூறுவது ஏற்புடையதல்ல. இதில், உள்நோக்கம் புதைந்துள்ளது. விடுதிகளுக்கு பொருள்கள் கொள்முதல் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், நிறுத்தப்பட்ட உணவுக் கட்டணத்தை வழங்கக் கோரியும் நீதிமன்றத்தில் எங்களது கூட்டமைப்பு சார்பில் வழக்குத் தொடரப்படும் என்றார்.

பாரபட்ச நடவடிக்கை ஏன்?

மத்திய, மாநில அரசு எஸ்சி, எஸ்டி ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் வி. சுவாமிநாதன் கூறியது:
பிற்பட்டோர் நலத்துறை விடுதிகளுக்கு 2016-17ஆம் ஆண்டுக்கான உணவுக் கட்டணம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை, வருகை தொடர்பாக ஆய்வு நடத்தவில்லை. போர்வை, பாய் வழங்கப்பட்டுவிட்டது. விடுதி பராமரிப்புத் தொகை, சலவை சோப்பு, தேங்காய் எண்ணெய் செலவுத் தொகையும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், எஸ்சி, எஸ்டி விடுதிகளுக்கு உணவுக் கட்டணம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆய்வு என்ற பெயரில் தேவையற்ற விவரங்கள் கோரப்பட்டுள்ளன. விடுதி பராமரிப்புத் தொகை, சலவை சோப்பு, தேங்காய் எண்ணெய், போர்வை, பாய் எதுவும் வழங்கப்படவில்லை. இது பாரபட்ச நடவடிக்கையாகவே உள்ளது. பட்டியலினத்தவர்களுக்கான உரிமையை மறுப்பதும் வன்கொடுமை செயலாகும். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.