மன அழுத்தத்தில் இருந்தார் ராம்குமார்: காவல் துறை தரும் விளக்கம்
புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்றன.


புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்றன.
இந்தப் பிரச்னை ஜாதிய மூலாம் பூசப்பட்டு அரசியலாக்கப்படுகிறது என்பது காவல் துறை தரப்பின் கருத்து. இதுகுறித்து காவல் துறையின் அதிகாரிகள் பலரை சந்தித்து பேசியபோது அவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களும் விளக்கங்களும் இங்கே தரப்படுகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ஆம் தேதி பரபரப்பான காலை வேளையில் மென்பொருள் பொறியாளர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், நாட்டையே பரபரப்பாக்கியது.
இதுகுறித்து விசாரணை செய்த சென்னை போலீஸார், தங்களுக்கு கிடைத்த தடயங்கள், தடயவியல் துறை ஆய்வறிக்கைகள், செல்லிடப்பேசி சிக்னல்கள், கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ராம்குமார் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிப்புரத்தில் வீட்டில் இருந்த ராம்குமாரை கைது செய்ய போலீஸார் சென்றனர். அந்த நேரத்தில், போலீஸார் தன்னை நெருங்குவதை அறிந்த ராம்குமார், பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை, போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் சுவாதி கொலைக்கு பின்னர் மன அழுத்தத்தினாலும், குற்ற உணர்ச்சியினாலும் பாதிக்கப்பட்டிருந்த ராம்குமார், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அப்போது காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், கைது செய்யப்பட்ட பின்னரும், அந்த மனநிலையில் இருந்து ராம்குமார் சிறிதும் வெளியே வரவில்லை என்றும் இதனால் மருத்துவமனையில் போலீஸாரும், மருத்துவர்களும் ராம்குமாரை மிகுந்த கண்காணிப்பிலேயே வைத்திருந்தனர் என்றும் காவல் துறையினர் தெரிவிக்கிறார்கள். கழுத்தில் ஏற்பட்டிருந்த காயம் குணமடைந்த பின்னர், புழல் சிறையில் ராம்குமார் அடைக்கப்பட்டாலும் அங்கும் இறுக்கமான மனநிலையுடனும், தனிமையிலேயே இருந்ததாகவும் அதனால் அவர், சிறையில் மருத்துவமனை பகுதியில் வைக்கப்பட்டிருந்தார் என்றும் கூறுகிறார்கள்.
திறந்த மனதுடன் பேசவில்லை: இதன் பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் காவலில் 3 நாள்கள் வைக்கப்பட்டிருந்தபோது ராம்குமார் மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதை விசாரணையின் தொடக்கத்திலேயே காவல்துறை அதிகாரிகள் உணர்ந்தனர்.
இதன் விளைவாக ராம்குமாருடன் எப்போதும் உதவி ஆய்வாளர் அளவில் இரு அதிகாரிகள் இருக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதேபோல தனிமையில் ராம்குமார் இருக்காத அளவுக்கும் போலீஸார் பார்த்துகொண்டனர். மேலும் அவர்,குளியலறை, கழிப்பறை செல்லும்போது கூட அவரை வெளியில் இருந்து கண்காணித்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். விசாரணையின்போதும், ராம்குமார் ஆழ்ந்த மௌனத்துடனே இருந்ததாக போலீஸார் கூறுகின்றனர்.
"ராம்குமார் தனது ஆழ்மனதில் இருந்த வலியையும், வேதனையையும், தனது தரப்பு நியாயங்களையும் யாருடன் திறந்த மனதுடன் பேசாமல் இருந்ததால், அவருக்கு அது மிகப்பெரிய மன இறுக்கத்தையும், மன அழுத்தத்தையும் கொடுத்திருந்தது" என அவரிடம் விசாரணை செய்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
"இத்தகைய நிலையினால், ராம்குமார் கையில் கூர்மையான எந்தப் பொருளும் கிடைக்காதவாறு பார்த்துக் கொண்டோம். இதில் அவர், பல் துலக்க வைத்திருந்த டூத் பிரஷின் முனை கூர்மையாக இருப்பதை கவனித்த நாங்கள், அந்த பிரஷை கூட மாற்றி வாங்கிக் கொடுத்தோம்' என்றார் அவர்.
மனநல சிகிச்சைக்கு மறுப்பு: இதேபோல சிறையிலும், கலகலப்பாக இருக்கும் கைதிகளையே சிறைத் துறையினர் அவருடன் தங்க வைத்ததாகவும், மன அழுத்ததில் இருந்து வெளியே வருவதற்காக ராம்குமாருக்கு, மனநல சிகிச்சை அளிப்பதற்கு சிறைத்துறை நடவடிக்கை எடுத்தாகவும் கூறுகிறார்கள்.
இதற்காக இருமுறை மனநல சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் வந்தபோதும், அந்த சிகிச்சை தனக்கு வேண்டாம் என ராம்குமார் மறுத்ததாக சிறைத்துறையினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, ராம்குமார் இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்காக நகைச்சுவை புத்தகங்கள்,நீதிபோதனை புத்தகங்களை சிறை அலுவலர்கள் படிக்க வழங்கினர். ஆனால், அவர் புத்தகம் படிப்பதிலும் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
மாறாக, தனிமையிலும், மன அழுத்ததுடனே ராம்குமார் எப்போதும் இருந்ததாக சிறைக் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சிறையில் தனது வழக்குரைஞர்களைத் தவிர்த்து வேறு யாரையும் ராம்குமார் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓரு முறை தனது பெற்றோரை மட்டும் எழும்பூர் நீதிமன்றம் செல்லும்போது ராம்குமார் சந்தித்துள்ளார். இதனால், தனது வழக்கை தாண்டி வேறு விஷயங்களை பேசுவதற்குரிய வாய்ப்பு ராம்குமாருக்கு கிடைக்கவில்லை.
தனிமையும், தற்கொலையும்: "சுவாதி கொலை செய்யப்பட்ட பின்னர், மன வேதனையுடன் சுற்றித் திரிந்த ராம்குமார் ஜூலை 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டபோது மன அழுத்தத்தில் சிக்கிக் கொண்டார். இதனால், கைது செய்யப்பட்ட நாள் முதல் 80 நாள்கள் மரண வேதனையுடனே கழித்திருக்க வேண்டும்" என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். "அவர் தனது நீண்ட மெளனத்தைக் கலைத்து, யாருடனாவது வெளிப்படையாகப் பேசியிருந்தால், மரணத்தின் பாதைக்குச் சென்றிருக்க மாட்டார்" என ராம்குமாரிடன் நெருக்கமாக இருந்த காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
சுவாதி கொலைக்குக் காரணமாக இருந்ததாக கருதப்படும் ராம்குமார், அவர் மரணத்துக்கு அவரே காரணமாக இருந்துவிட்டார் என்பதே காவல் துறையினரின் கருத்தாக உள்ளது. இதன் மூலம் சுவாதி கொலையைச் சுற்றி வந்த சர்ச்சைகள், இப்போது ராம்குமார் தற்கொலையை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...