அதிகரிக்கும் இளம் வயது திருமணங்கள்!
ஆணின் திருமண வயது 21, பெண்ணின் திருமண வயது 18. இதற்குக் குறைந்த வயதில் திருமணம் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறப்பின்போது பிரச்னைகள் ஏற்படும்.


தமிழகத்தில் இளம் வயதுத் திருமணங்களைத் தடுக்க சட்டமும், கண்காணிப்பும் கடுமையாக்கப்பட்டுள்ள போதிலும், இன்னும் இத்தகைய திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் 2,000-க்கும் மேற்பட்ட இளம் வயதுத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளபோதிலும், அதிகாரிகளுக்குத் தெரியாமல் 4,000-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஆணின் திருமண வயது 21, பெண்ணின் திருமண வயது 18. இதற்குக் குறைந்த வயதில் திருமணம் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறப்பின்போது பிரச்னைகள் ஏற்படும். பிரசவத்தின்போது மரணமும் ஏற்படும் என்ற நிலையில், இளம் வயதுத் திருமணங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இளம் வயதுத் திருமணத்தை ஆதரிப்போரும் தண்டிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் 2,000 திருமணங்கள் நிறுத்தம்: தமிழகம் முழுவதும் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை 2000-க்கும் மேற்பட்ட இளம் வயதுத் திருமணங்கள் சமூக நலத் துறை, காவல் துறை உதவியோடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், இதே கால கட்டத்தில் வெளியில் தெரியாமல் 4,000-க்கும் மேற்பட்ட இளம் வயதுத் திருமணங்கள் நிகழ்ந்துள்ளன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சொத்துகள், சொந்த பந்தம் விட்டுப் போகாமல் இருத்தல், குடும்பத்தில் சிறு வயதிலிருந்தே இவர் இன்னாருக்கு என்று தெரிவிக்கப்படும் தகவல்கள், காதல் போன்ற காரணங்களால் இளம் வயதுத் திருமணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் இளம் வயதுத் திருமணங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
நகரங்களில் அதிகம்: கடந்த 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 10 ஆண்டுகளில் 5,480 இளம் வயதுத் திருமணங்கள் சென்னையில் நடைபெற்றுள்ளன. சென்னைக்கு அடுத்து கோயம்புத்தூரில் 3,025 இளம் வயதுத் திருமணங்கள் நிகழ்ந்துள்ளன. மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 2,000-க்கும் மேற்பட்ட இளம் வயதுத் திருமணங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வயதுத் திருமணங்கள் கிராமப்புறத்தில்தான் அதிகம் நடைபெறுவதாக, இதற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதிக மக்கள்தொகை இருக்கிற நகர்ப்புறங்களில்தான் இளம் வயதுத் திருமணங்கள் தற்போது நடைபெறுகின்றன என்பதை இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சட்டத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது: இதுகுறித்து சமூக நலத் துறை அலுவலர்கள் கூறியதாவது:
இளம் வயதில் திருமணம் நடத்தி வைத்தால் சம்பந்தப்பட்ட ஆண், பெண் பெற்றோர், அந்தத் திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்கள், ஏற்பாடு செய்தவர்கள், இடம் கொடுத்த திருமண மண்டப மேலாளர் அல்லது உரிமையாளர் கைது செய்யப்படுவார்.
திருமண மண்டபத்தை முன்பதிவு செய்ய வரும்போது இருவரும் திருமண வயதுடையவர்கள் என்ற சான்றிதழ் கொடுத்தால்தான் மண்டபம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் சட்டத்தில் உள்ளன.
அதேபோல, மாவட்ட சமூக நல அலுவலர் தலைமையில் ஊராட்சி அளவிலும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் அந்த ஊரின் பள்ளித் தலைமையாசிரியர்கள், பெண் வார்டு உறுப்பினர்கள், தொண்டு நிறுவனப் பெண் நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர். இதுபோன்ற செயல்பாடுகளால் இளம் வயதுத் திருமணங்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.
சட்டமும், கண்காணிப்பும் தீவிரமாக இருந்தபோதிலும், இன்னும் இளம் வயதுத் திருமணங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை முழுவதுமாகக் கட்டுப்படுத்த மக்கள் மனதிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே இதைக் கண்காணிக்கும் சமூக அலுவலர்களின் கருத்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...