ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காற்றாலைகளைக் காக்க பசுமை எரிசக்தி வழித்தடம் அவசியம்

தமிழகத்தில் உள்ள காற்றாலைகளை வீழ்ச்சியிலிருந்து காக்க வேண்டுமெனில், பிரத்யேக பசுமை எரிசக்தி வழித்தடம் மிகவும் அவசியமானது என்ற நிலை உருவாகியுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:04 pm

ஆர். முருகன்

தமிழகத்தில் உள்ள காற்றாலைகளை வீழ்ச்சியிலிருந்து காக்க வேண்டுமெனில், பிரத்யேக பசுமை எரிசக்தி வழித்தடம் மிகவும் அவசியமானது என்ற நிலை உருவாகியுள்ளது.

காற்றாலை மின்சாரம் என்பது மாசில்லாமல் இயற்கை முறையில் மின் உற்பத்தி செய்யப்படுவதாகும். வினாடிக்கு 4 மீட்டர் முதல் 25 மீட்டர் வரை வீசும் காற்றைக் கொண்டு, காற்றாலை மின் உற்பத்திக்கான யூனிட்டுகள் அமைக்கப்படுகின்றன. 1-2 மெகாவாட் காற்றாலை யூனிட் அமைக்க ரூ. 7 கோடி வரை செலவாகிறது.

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை மட்டுமல்லாது, திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர் மாவட்டங்களையும் சேர்த்து 12 ஆயிரம் காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை தென் மாவட்டங்களில் உள்ளன.

திருநெல்வேலி மண்டலத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி, காவல்கிணறு, பழவூர், வீராணம், ஆலங்குளம், ராதாபுரத்திலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு பகுதியிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி பகுதியிலும் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 7,564 மெகாவாட் நிறுவுதிறன் கொண்ட காற்றாலைகள் உள்ளன. இது, நாட்டின் மொத்த காற்றாலை மின் உற்பத்தித் திறனில் 27 சதவீதமாகும்.

இது மட்டுமல்லாது, மேலும் 5 ஆயிரம் மெகாவாட் நிறுவு திறனை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இதை அமல்படுத்தவும் தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல, 5 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்சக்தியை நிறுவும் நோக்கில் சூரியசக்திக் கொள்கையையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

காற்றாலை மின் உற்பத்தி நிறுவுதிறன் மூலம் கிடைக்கக் கூடிய முழுப் பலன்களையும் தமிழகம் பெறுவதற்கு போதிய அளவு மின்சாரத்தைக் கொண்டு செல்லும் கூடுதல் கட்டமைப்பு வசதி இல்லாதது பெரும் தடையாக உள்ளது.

இயற்கையின் அத்தியாவசியமான காற்று எந்த அளவுக்கு வீசுகிறதோ, அதைப் பொருத்தே காற்றாலை மின் உற்பத்தி இருக்கும். காற்று வீசும் காலமும், அன்றாடம் காற்றாலை மூலமான மின் உற்பத்தியும் வேறுபாடுகளைக் கொண்டவை. இதன் காரணமாக, மின்சாரத்தைக் கொண்டு செல்லும் கட்டமைப்பை ஏற்படுத்துவது என்பது அதிக செலவு நிறைந்ததாக உள்ளது. மரபு ரீதியான மின் சக்தியை எடுத்துச் செல்லும் கட்டமைப்பை ஏற்படுத்த தேவைப்படும் முதலீட்டைக் காட்டிலும், காற்றாலை, சூரிய சக்தி மின்சாரத்தைக் கொண்டு செல்ல உருவாக்கப்படும் கட்டமைப்புக்கு 5 மடங்கு அதிக முதலீடு தேவைப்படும்.

காற்றாலை மூலம் தூய்மையான, மிகக் குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், அதை பிற இடங்களுக்குக் கொண்டு செல்ல போதிய கட்டமைப்புத் திறன் இல்லாத காரணத்தால், காற்றாலை மின் உற்பத்தியை பல்வேறு தருணங்களில் நிறுத்த வேண்டிய நிலைக்கு தமிழக அரசு ஆளாகி வருகிறது.

மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, தகுதி வாய்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தைக் கொண்டு செல்லும் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு, மத்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ள தேசிய தூய்மை எரிசக்தி நிதியம் உதவி அளிக்கும் என அறிவித்தது.

இதன்படி, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன் இணைந்து ரூ. 3,758 கோடி மதிப்பீட்டிலான 2 திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காகத் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, முழுமையான செயல்பாட்டுக்குத் தயாராகி வருகிறது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையேயான பசுமை எரிசக்தி வழித்தடம் இல்லாத காரணத்தால், காற்றாலைகள் மூலம் பெறப்படும் ஆயிரம் மெகாவாட் உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வழங்க இயலவில்லை. இதன் காரணமாக, காற்றாலை மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

வழக்கமாக ஜூன் தொடங்கி செப்டம்பர் வரையில் மட்டுமே காற்றாலை மின்சாரம் சாத்தியம். இந்தாண்டு மே மாதமே பலத்தக் காற்று வீசத் தொடங்கியதால், மின் உற்பத்தி அதிகரித்து உபரியாக ஆயிரம் மெகாவாட் கிடைத்துள்ளது. எனவே, மாநிலங்களுக்கு இடையேயான பசுமை எரிசக்தி வழித்தடம் என்பது அவசியமாக உள்ளது.

இதுதொடர்பாக இந்திய காற்றாலைகள் சங்கத் தலைவர் கே. கஸ்தூரிரங்கையன் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த ஆண்டு போதிய அளவு காற்று வீசவில்லை. இதை ஈடுகட்டும் விதமாக, இந்த ஆண்டு முன்கூட்டியே காற்று வீசத் தொடங்கியுள்ளது. கடந்த மே 19-ஆம் தேதியே 2,500 மெகாவாட் முதல் 3 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இப்போது மேலும் உயர்ந்து, தினசரி சுமார் 8 கோடி யூனிட் மின்சாரம், அதாவது சுமார் 3,500 மெகாவாட்டாக உற்பத்தி அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால், ஆகஸ்ட் மாத இறுதி வரை மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும். சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட்டும், அதிகபட்சமாக 5 ஆயிரம் மெகாவாட்டையும் எட்டக் கூடும்.

மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுவதும் கொள்முதல் செய்து கொள்ளும்படி மாநில அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கூடுதலாக உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து வைத்துக் கொள்வது இயலாததாக இருக்கும் நிலையில், காற்றாலை மூலம் கிடைப்பதில் உபரியை அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்வதால் மின் வாரியத்துக்கு லாபம் கிடைக்கும். இதற்கு முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளதைப் போன்று மாநிலங்களுக்கு இடையேயான பிரத்யேக பசுமை எரிசக்தி வழித்தடம் அவசியமானது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தென் மாவட்ட வழித்தட வசதி

திருநெல்வேலி மண்டலத்தில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தைக் கொண்டு செல்ல கயத்தாறு, புதுக்கோட்டை, திருச்சி, சென்னை வழியாக வழித்தடம் அமைக்கப்பட்டு விநியோகம் நடைபெறுகிறது. இதேபோல, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, சேலம் வழியாக சென்னைக்கு கொண்டு சென்று, பிற மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கும் வழித்தடமும் உள்ளது. இந்த வழித்தடத்தையே பசுமை எரிசக்தி வழித்தடமாக மாற்றலாம்.

இல்லையெனில், மத்திய எரிசக்தி துறையின் பிரத்யேக வழித்தடத்தை நிறுவினாலும் உபரி மின்சாரத்தை தமிழக அரசால் பிற மாநிலங்களுக்கு விநியோகிக்க முடியும். இதன்மூலம், காற்றாலைகளின் உற்பத்தியை அவ்வப்போது நிறுத்த வேண்டிய அவசியமும் இருக்காது என்கின்றனர் காற்றாலை உரிமையாளர்கள்.

வருகிற 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தியை 60 ஆயிரம் மெகாவாட் ஆக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாநிலங்களுக்கு இடையேயான பிரத்யேக வழித்தடம் முதலில் அமைய வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக உள்ளது.

உற்பத்தியை முன்கூட்டியே அறிய புதிய உத்தி

தமிழகம் முழுவதிலும் உள்ள காற்றாலைகளில் எவ்வளவு மின்சாரம் உற்பத்தியாகும் என்பதை முன்கூட்டியே கணிக்க இந்திய காற்றாலைகள் சங்கத்தின் சார்பில் புதிய உத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக துணை மின் நிலையங்களில் நவீன கருவிகளையும், சிம்கார்டுகளையும் பொருத்தியுள்ளது. காற்றாலை மின் நிலையங்களில் இருந்து வரும் தகவல்கள் சென்னையில் உள்ள சங்க அலுவலகத்துக்கும், பின்னர் அங்கிருந்து அவை மின் வாரியத்துக்கும் வழங்கப்படுகிறது. இது மின் வாரியத்தின் தேவை, பயன்பாடு ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிட பெரிதும் உதவியாக அமைந்துள்ளது. இந்தப் புதிய உத்தியின் மூலம் அடுத்த 10 நாள்ளுக்கான உற்பத்தி திறனையும், காற்று வீசும் அளவையும் கணிக்க முடியும். 10 நாள்களுக்கு தோராய மதிப்பீடு விவரங்களும் வழங்கப்படுகிறது. 24 மணி நேரத்துக்கு முன்னதாக சரியான மதிப்பீடு வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.