டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சென்னை கூர்நோக்கு இல்லம்: சிறுவர்கள் தப்பியோடுவது ஏன்?

சென்னை கெல்லீஸில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் கடந்த இரண்டாண்டுகளில் 55 சிறுவர்கள் தப்பியோடியதாகவும்,

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:54 am

கே.வாசுதேவன்

சென்னை கெல்லீஸில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் கடந்த இரண்டாண்டுகளில் 55 சிறுவர்கள் தப்பியோடியதாகவும், அவர்களில் 22 பேர் இன்னும் பிடிபடாமல் இருப்பதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
 சென்னை பெருநகரக் காவல்துறை எல்லைக்கு உள்பட்ட பகுதியில் குற்றங்களில் ஈடுபடும் 16 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள், சிறுமியர்கள் கைது செய்யப்படும்போது, அவர்கள் கீழ்ப்பாக்கம் கெல்லீஸில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்திலேயே அடைத்து வைக்கப்படுகின்றனர்.
 இதில் சமூகநலத் துறையின் கீழ் உள்ள இந்த இல்லத்தில், தரைத்தளத்தில் சிறுவர்களும், முதல் தளத்தில் சிறுமியர்களும் அடைத்து வைக்கப்படுகின்றனர். திருட்டு, கொள்ளை, மது போதை உள்ளிட்ட பல்வேறு சமூக சீர்கேடான சம்பவங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு, இங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறுவர்கள், மீண்டும் அதே கெட்ட பழக்கத்துக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக மனநல ஆலோசனை, உளவியல் சிகிச்சை ஆகியவை அளிக்கப்படுகின்றன. அதோடு சிறுவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும் விளையாட்டுகளும், தியானம், யோகா பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையின் மூலம் சிறுவர்கள், மீண்டும் தீய வழிக்கு திரும்பாமல் இருப்பதற்கு பெருமளவு வாய்ப்பு இருப்பதாக சமூகநலத்துறையினர் கருதுகின்றனர்.
 ஆனால் கெல்லீஸில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமலேயே இருப்பதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். மிகவும் பழைய கட்டடத்தில் செயல்படும் இந்த சிறுவர் கூர்நோக்கு இல்லம், போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் உள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 55 சிறுவர்கள் தப்பியோட்டம்
 இதன் விளைவாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் 55 சிறுவர்கள் தப்பியோடி உள்ளனர். அதில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை புள்ளி விவரம் கூறுகிறது. மீதி 22 சிறுவர்கள் இன்னும் பிடிபடவில்லை என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதில் 2010 ஆண்டுக்கு பின்னர் அதிக பட்சமாக 17 சிறுவர்கள் தப்பியோடியிருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 கெல்லீஸ் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து சிறுவர்கள் தப்பியோடுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக பாதுகாப்பு இல்லாத பழைமையான கட்டடத்தில் கூர்நோக்கு இல்லம் செயல்படுவதோடு, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதி இல்லாததும் காரணமாக கூறப்படுகிறது. மேலும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருக்க வேண்டிய 9 பாதுகாவலர்களில், 4 பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன.
 அதேபோல பெண்கள் பிரிவிலும் தலா ஒரு பெண் உதவியாளர், பாதுகாவலர் பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. இக் காரணங்களால் கண்காணிப்பதில் ஏற்படும் இடப்பாடுகளினால், சிறுவர்கள் தப்பியோடிவிடுவதாக சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 அதேவேளையில், ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட பணியிடங்கள் தவிர்த்து, சிறுவர்கள், சிறுமியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல புதிதாக பணியிடங்களை கெல்லீஸ் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஏற்படுத்த வேண்டும். இதில் குறைந்தது 4 அல்லது 5 மாணவர்களுக்கு ஒரு ஊழியர் என்ற வகையில் புதிய பணியிடங்கள் இருக்க வேண்டும் என தமிழக குழந்தைகள் நல குழுமத்தின் முன்னாள் தலைவர் பி.மனோரமா தெரிவித்தார்.
 அவர் மேலும் கூறியது: சுதந்திரமாக சுற்றித் திரிந்த சிறுவர்களைப் பிடித்து திடீரென ஒரு பகுதியில் அடைக்கும்போது, அவர்களால் புதிய சூழலை ஏற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படும். இந்த சிரமத்தில் இருந்து, அவர்களை மனதளவில் வெளியே கொண்டு வருவதற்குரிய மனநல ஆலோசனைகளையும், உளவியல் பயிற்சிகளையும் சமூகநலத்துறை வழங்க வேண்டும்.
 ஏற்கெனவே இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டாலும், அதை முழுமையாக முறைப்படுத்தி சிறுவர்களுக்கு தேவையான அளவுக்கு பயிற்சிகள் அளிக்க வேண்டும். அப்போதுதான் சிறுவர்கள், கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வெளியே தப்பிச் செல்ல வேண்டும் என்ற மனநிலையில் இருந்து மாறுவார்கள்.
 மேலும் அவர்கள், கூர்நோக்கு இல்லத்தை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் தீய வழிக்கு செல்லாமல், மாற்று வழியை தேடத் தொடங்குவார்கள் என்றும் மனோரமா கூறினார்.
 இப் பிரச்னையில், சிறுவர் கூர்நோக்கு இல்லத்தை நிர்வகிக்கும் சமூகநலத்துறை, கெல்லீஸ் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி, சிறுவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல புதிய பணியிடங்களையும் ஏற்படுத்த வேண்டும்.
 மேலும் அங்கு சிறுவர்களை நல்வழிப்படுத்துவற்குரிய நடவடிக்கைகளையும் அத்துறை எடுக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.