தொடர் மழையால் அதிரடியாகக் குறைந்தது முட்டை உற்பத்தி
தொடர் மழையால் நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாள்களில் ஒரு கோடி அளவுக்கு முட்டை உற்பத்தி குறைந்தது. உற்பத்தி குறைந்தபோதிலும்,


தொடர் மழையால் நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாள்களில் ஒரு கோடி அளவுக்கு முட்டை உற்பத்தி குறைந்தது. உற்பத்தி குறைந்தபோதிலும், போக்குவரத்து தடை மற்றும் பொதுமக்களிடம் வாங்கும் திறன் குறைந்ததால் முட்டை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. உற்பத்தியும் குறைந்து, விலையும் சரிந்து வருவதால், கோழிப் பண்ணையாளர்கள் கடும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள சுமார் 1,000 முட்டைக் கோழிப் பண்ணைகளில் தினமும் சுமார் 3.5 கோடி அளவுக்கு முட்டை உற்பத்தியாகிறது. இதில், தினமும் ஒரு கோடி அளவுக்கு கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள 2.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி, சத்துணவுத் திட்டம், பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. புரட்டாசி மாதத்தில் ரூ.3-க்கும் குறைவாக இருந்த முட்டை விலை, ஐப்பசி மாதம் பிறந்த பிறகு நுகர்வு அதிகரித்து ரூ.3.60 வரை விலை உயர்ந்தது.
கார்த்திகை மாதம் பிறந்த நிலையில், சபரிமலை ஐயப்பப் பக்தர்கள் விரதம் காரணமாக நுகர்வு குறையும் என்றாலும், மழை, குளிர் போன்ற பருவ நிலை மாற்றம் இதை ஈடு கட்டிவிடும், விலை குறையாது என்ற நம்பிக்கையில் பண்ணையாளர்கள் இருந்தனர்.
ஆனால், திங்கள்கிழமை 10 பைசா குறைந்தது. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பலத்த மழை இல்லாவிடினும், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையால், தரமான தீவனங்களை அளிக்க இயலாததால், கடந்த 3 நாள்களாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி தினமும் 35 லட்சம் அளவுக்கு குறைந்தது.
மேலும், தொடர் மழையால் சென்னை, கடலூர், விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு முட்டையை எடுத்துச் செல்ல இயலாத நிலையும், வருவாய் குறைந்ததால் மக்களிடம் வாங்கும் திறனும் குறைந்துள்ளது. இதனால், முட்டை விலை சரிந்துள்ளது என்றனர் பண்ணையாளர்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத் துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியன் கூறியதாவது:
ஏற்றுமதியாகும் முட்டைகள் உள்ளூர் விற்பனைக்கு வந்ததும் விலை சரிவுக்குக் காரணம். மேலும், ஆந்திரத்தில் பெய்துவரும் பலத்த மழையால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நுகர்வு குறைந்து ஹைதராபாத் மண்டலத்தில் முட்டை விலையை ரூ.3.48 ஆகக் குறைத்துவிட்டனர்.
இதனால், வேறுவழியின்றி நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை 10 பைசா குறைந்துள்ளது. இந்த மாதத்தில் முட்டை விலை உயர்வதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், தற்போதுள்ள விலையில் இருந்து மேலும் குறையாது என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...