வெள்ள பாதிப்பு: சென்னையில் குவியும் நிவாரணப் பொருள்கள்
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கானோருக்கு வழங்க பல்வேறு அமைப்புகளிடம்


சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கானோருக்கு வழங்க பல்வேறு அமைப்புகளிடம் இருந்து நிவாரணப் பொருள்கள் குவிந்து வருகின்றன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில்
இந்த நிவாரணப் பொருள்களை தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்களின் உதவியுடன்
மாநகராட்சி அதிகாரிகள் பிரித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் இடங்களுக்கு 30 லாரிகள் மூலம் ஞாயிற்றுக்கிழமை (டிச.6) முதல் அனுப்பத் தொடங்கியுள்ளனர்.
கடும் பாதிப்பு: சென்னையில் கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பொதுமக்கள் உடைமைகள் உள்ளிட்டவற்றை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உணவு, உடைகள் இல்லாமல் அவதிப்பட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு, உடைகள் உள்ளிட்ட பொருள்களை விநியோகித்து வருகின்றனர். வெள்ள நீர் வடியாத பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்பு கொள்ள முடியாதவர்கள், நிவாரண உதவியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
நேரு விளையாட்டரங்கத்தில் நிவாரணப் பொருள்கள்: இந்த நிலையில் மத்திய அரசு நிறுவனங்கள், மாநில அரசு நிறுவனங்கள், பல்வேறு உணவுப் பொருள்கள் தயார் செய்யும் நிறுவனங்களில் இருந்து தயார் செய்த உணவு வகைகள், உடைகள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் குவிந்து வருகின்றன.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தப் பொருள்கள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதை தன்னார்வ இளைஞர்கள், சேவை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கான பால் பவுடர், ரொட்டி, குழந்தைகளுக்கான இனிப்பு பொருள்கள், தயார் செய்யப்பட்ட உணவுகள், புத்தாடைகள், படுக்கை விரிப்புகள், தண்ணீர் பாட்டில்கள், மருந்துப் பொருள்கள் உள்பட அனைத்துப் பொருள்கள் அடங்கிய சாக்குப் பைகளில் அடைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு வருகின்றன.
இது குறித்து வெள்ள நிவாரணப் பொருள்கள் பிரித்து வழங்கும் பொறுப்பு அதிகாரியும், மாநகராட்சி துணை ஆணையாளருமான கந்தசாமி கூறியதாவது:
கடந்த இரண்டு நாள்களாக அரசு அலுவலகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள், ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் அனைத்தும் வாகனங்கள் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கில் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், உணவுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவை மூலம் ஏராளமான லாரிகளில் பொருள்கள் வந்துள்ளன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான பொருள்களை சாக்குப் பைகளில் அடைக்கும் பணியில் 800-க்கும் மேற்பட்ட தன்னார்வ இளைஞர்கள், 200-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை, சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நிவாரணப் பொருள்கள் குறித்துப் பதிவு: எந்தெந்தப் பகுதியிலிருந்து வாகனங்களில் என்னென்ன நிவாரணப் பொருள்கள் வந்துள்ளன உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் முறையாக அலுவலர்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே சேகரிக்கப்படுகின்றன.
இந்த நிவாரணப் பொருள்களை மாநகராட்சியின் 54 பகுதிகளில் ஒவ்வொரு வீடு, வீடாகச் சென்று வழங்கப்படவுள்ளது.
இதுவரை 14,800 குடும்பத்துக்கு..: ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த நிவாரண உதவி பணியானது பெரம்பூர், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, மெளலிவாக்கம், மணப்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களுக்கு 30 லாரிகளில் மொத்தம் 14,800 குடும்பத்தினருக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் 3 நாள்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு விடும் என்றார் அவர்.
தன்னார்வலர்கள் பற்றாக்குறை
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக பல்வேறு தரப்பினரும் வழங்கிய நிவாரண பொருள்கள் லாரிகள் மூலம் குவிந்து வருகின்றன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான பொருள்களை சாக்கு பைகளில் அடைக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறை அலுவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் நிவாரண பொருள்களை வழங்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் பல்வேறு அமைப்புகளிடமிருந்து 80 லாரிகளில் குவிந்துள்ள நிவாரணப் பொருள்களை இறக்க தன்னார்வலர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகளில் இருந்து நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்களை அழைக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...