டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விதிகளைப் பின்பற்றினால் மட்டுமே பட்டாசுக் கடைகளுக்கு உரிமம்

தீபாவளி பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு வெடி பொருள் சட்ட விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றினால் மட்டுமே

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:57 am

கே.வாசுதேவன்

தீபாவளி பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு வெடி பொருள் சட்ட விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றினால் மட்டுமே உரிமம் பெறுவதற்கான தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற 22-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தீபாவளி வியாபாரம் விறுவிறுப்பு அடையத் தொடங்கியுள்ளது. தீபாவளிக்காக பட்டாசுக் கடைகளும் ஆங்காங்கே தாற்காலிகமாக திறக்கப்படுகின்றன.

பட்டாசுக் கடைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், விதிமுறைகளைக் கடுமையாக்க தீயணைப்புத் துறை திட்டமிட்டுள்ளது. தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் பெற்றால்தான் அந்தந்த மாநகரக் காவல்துறை அல்லது வருவாய்த் துறையிடமிருந்து உரிமம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டாசுகளை ஒழுங்குபடுத்துவற்காக தீயணைப்புத் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னர் தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விதிமுறைகள் என்னென்ன? 2008-ஆம் ஆண்டு வெடி பொருள் சட்டப்படி பட்டாசுக் கடை வைக்கும் இடம் கட்டடமாக இருக்க வேண்டும். கடையின் இரு புறங்களிலும் கட்டாயம் வழி இருக்க வேண்டும்.  கட்டடத்தில் மின் விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தக் கூடாது.  தாற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் கேட்பவர்கள் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பட்டாசுக் கடைகளில் வேறு பொருள்களை விற்பனை செய்யக் கூடாது, தரைத் தளத்தில் மட்டும் பட்டாசுகளை வைத்திருக்க வேண்டும், படிக்கட்டுகள், லிப்ட் ஆகியவற்றின் அருகே பட்டாசுகளை வைத்திருக்க கூடாது.

இதேபோல, அடுக்குமாடிக் குடியிருப்பு, திருமண மண்டபம், அரங்குகள், பட்டாசு வைத்திருக்கும் அறை ஆகியவை 9 சதுர மீட்டருக்குக் குறைவானதாக இருக்கக் கூடாது, அதேபோல, அந்த அறை 25 சதுர மீட்டருக்கு அதிகமான சுற்றளவில் இருக்கக் கூடாது.

ஒரு பட்டாசுக் கடைக்கும் மற்றொரு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். உதிரிப் பட்டாசுகளை கடைகளில் விற்பனை செய்யக் கூடாது. "இங்கு புகை பிடிக்கக் கூடாது' என்பன உள்ளிட்ட எச்சரிக்கை விளம்பரப் பலகைகளை பட்டாசுக் கடை முன்பாக வைத்திருக்க வேண்டும். அலங்கார மின் விளக்குகளை தொங்க விடக்கூடாது. வாடிக்கையாளர்களுக்கு பட்டாசு,  துப்பாக்கி ஆகியவற்றை வெடித்து காட்டக்கூடாது. கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகளவில் சேரவிடக்கூடாது.

உரிமம் பெற்ற கட்டடத்தைத் தவிர வேறு இடங்களில் பட்டாசுகளை இருப்பு வைத்திருக்கக் கூடாது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசுகளை இருப்பு வைக்கக்கூடாது. இதை மீறும் பட்டாசு விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.  பட்டாசுக் கடையின் அருகே தீயணைப்புத் துறை வாகனம் வரும் அளவுக்கு வழி இருக்க வேண்டும். பட்டாசுக் கடையில் குறைந்தபட்சம் இரு தீயணைப்புக் கருவிகள்,  இரு வாளிகளில் தண்ணீர், மணல் ஆகியவை தயாராக வைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் தணிக்கையின்போது கடை உரிமத்தை அலுவலர்களின் பார்வைக்குத் தெரியும்படி வைத்திருக்க வேண்டும். இருப்பு, தணிக்கைப் பதிவேடு ஆகியவை முறையாகப் பாராமரிக்கப்பட வேண்டும்.

இந்த விதிமுறைகளை பட்டாசுக் கடைகள் பின்பற்ற தவறும் பட்சத்தில் உரிமம் பெறுவதற்குரிய தடையில்லாச் சான்றிதழ் கண்டிப்பாக வழங்கக் கூடாது என தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு, தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால், எந்தச் சூழ்நிலையிலும் தடையில்லாச் சான்றிதழ் வழங்கக் கூடாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பட்டாசுக் கடை வைக்க விண்ணப்பித்ததும், கடை வைப்பதற்குரிய இடத்தில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என திடீர் சோதனை நடத்தும்படி தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதில் கடை செயல்பட்ட பின்னர் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய உடனடியாக காவல் துறைக்கும் வருவாய்த் துறைக்கும் பரிந்துரை செய்யும்படி தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், பட்டாசுக் கடை வைக்க உரிமம் பெறுவதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். "கடந்த ஆண்டு விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றியதன் காரணமாக விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை. எனவே, இந்த ஆண்டும் அதேபோல விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுவதற்குரிய நடவடிக்கையில் தீயணைப்புத் துறை ஈடுபட்டுள்ளது' என அந்தத் துறையின்  உயர் அதிகாரி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 398 விண்ணப்பங்கள் நிராகரிப்பு
விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றாததால் கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 398 தீபாவளி பட்டாசுக் கடைகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டன.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வெடி பொருள் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றும் பட்டாசுக் கடைகளுக்கு மட்டுமே தீயணைப்புத் துறை தடையில்லாச் சான்று வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, பட்டாசுக் கடைகளை அமைப்பதற்காக மாநிலம் முழுவதும் 6,058 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இவற்றில் 398 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.  5,660 கடைகளுக்கு மட்டும் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டது.அதிகபட்சமாக சென்னையில் 258 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.