விசைத்தறித் தொழிலாளர்களின் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் இழுபறி
குமாரபாளையம் விசைத்தறி நெசவாளர்களுக்கு 50 சத கூலியுயர்வு வழங்குவது குறித்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சில் எவ்வித முடிவும் ஏற்படாததால்


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விசைத்தறி நெசவாளர்களுக்கு 50 சத கூலியுயர்வு வழங்குவது குறித்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சில் எவ்வித முடிவும் ஏற்படாததால் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், கூலியுயர்வு பிரச்னையில் இழுபறி நீடித்து வருகிறது.
குமாரபாளையம் பகுதியில் பணிபுரியும் விசைத்தறித் தொழிலாளர்களுக்கு கூலியுயர்வு வழங்குமாறு ஜனநாயக விசைத்தறித் தொழிலாளர் சங்கம் (ஏஐசிசிடியூ) கோரிக்கை விடுத்தது. இப்பிரச்னையில் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, திருச்செங்கோடு கோட்டாட்சியர் செங்கோட்டையன் தலைமையில் வருவாய்த்துறை, தொழில்சங்கம், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிலாளர் நல அலுவலர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நான்கு கட்டமாக நடைபெற்றது.
முதல்கட்டப் பேச்சில் ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்கள் சங்கம் கலைக்கப்பட்டதாக தெரிவித்தனர். நேரடியாக ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது தொழில் நெருக்கடியால் கூலியுயர்வு வழங்குவது சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜூன். 25-ல் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இந்நிலையில், திருச்செங்கோடு கோட்டாட்சியர் செங்கோட்டையன் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், ஜவுளி உற்பத்தியாளர்கள் 12 பேர், நாமக்கல் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் பூபதி, கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.சி.பழனிச்சாமி, ஏஐசிசிடியூ மாநிலச் செயலர் ஏ.கோவிந்தராஜ், மாவட்டத் தலைவர் பொன்.கதிரவன், மாவட்டச் செயலர் எஸ்.சுப்பிரமணி, துணைத் தலைவர் கே.ஆர்.குமாரசாமி மற்றும் தொழிலாளர்கள் நல அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில், தறி உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள் கூலியுயர்வு வழங்காமல் தொழிலாளர்களுக்கு தங்களால் வழங்க முடியாது எனத் தெரிவித்தனர். விசைத்தறியாளர்களுடன் தங்களுக்கு வணிக ரீதியான உறவே உள்ளதாகவும், தொழில் ரீதியான உறவு இல்லை எனவும், சம்மன் வந்ததால் இக்கூட்டத்துக்கு வந்ததாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டது.
இதனால், பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அனைத்து தரப்பினரும் அதிருப்திக்கு உள்ளாகினர். இப்பிரச்னையில், தொழிலாளர் நல அலுவலர்களின் நடவடிக்கை குறித்து கேட்டறிந்த கோட்டாட்சியர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து, எவ்வித முடிவும் ஏற்படாததால் மறுதேதி குறிப்பிடப்படாமல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், விசைத்தறித் தொழிலாளர்களின் கூலியுயர்வு பேச்சில் இழுபறி நீடித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...