டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சவால் விடுத்த இளந்தாமரை மாநாடு!

மேடையில் யாருக்கும் நேரடியாக சவால் விடுக்கவில்லை. ஆனாலும், பாஜகவின் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரையில்லாத கூட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு மறைமுகமாக சவால் விட்டிருக்கிறது பாஜக.

News image
Updated On :3 ஜனவரி 2024, 5:58 pm

சா. ஜெயப்பிரகாஷ்

மேடையில் யாருக்கும் நேரடியாக சவால் விடுக்கவில்லை. ஆனாலும், பாஜகவின் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரையில்லாத கூட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு மறைமுகமாக சவால் விட்டிருக்கிறது பாஜக.

திருச்சி பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே திடலில் வியாழக்கிழமை பிற்பகலில் தொடங்கிய பாஜக இளந்தாமரை மாநாட்டில் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, அக்கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பேசினர்.

இதே திடலில் ஏற்கெனவே முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. திராவிடக் கட்சிகளுக்கு இணையாகக் கூட்டத்தைக் கூட்டிவிட முடியுமா? என்பதுதான் பாஜக முன் நின்ற பிரதான கேள்வி. ஏனெனில் அண்மையில் சேலத்தில் நடைபெற்ற அத்வானி பங்கேற்ற நிகழ்ச்சியேகூட எண்ணிக்கையில் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

ஆனால், எல்லோருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் திடலை நிரப்பியதுடன், அருகேயுள்ள காலியிடங்களிலும், நான்கு வழிச்சாலையிலும் நிரம்பியிருந்த கூட்டம் அரசியல் நோக்கர்களை வாய்பிளக்கச் செய்தது என்றால் அதுமிகையில்லை.

மேடையிலேயே மோடியும், ராஜ்நாத் சிங்கும் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணனை அழைத்துப் பாராட்ட, அவர் பெருந்தன்மையுடன் மாநில இளைஞரணித் தலைவர் பொன். பாலகணபதியை அழைத்துக் கொண்டுபோய் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

"தென்நாட்டில் இப்படியொரு கூட்டம் நடைபெற்றது என்பதை வடநாட்டில் மறக்காமல் சொல்வேன்' என பாஜக பொதுச் செயலர் முரளிதர ராவ் தெரிவித்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அத்துடன் மிகமுக்கியமான ஒன்று. கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு முன்னேறிக் கொண்டும்- பின்னேறிக் கொண்டும் இருக்காத கூட்டமாக, நின்ற இடத்தில் நின்று, மேடையில் கொடுக்கப்படும் முழக்கங்களைத் திருப்பிச் சொல்லியும், இரங்கல் தெரிவித்து நின்ற கட்டுப்பாடான கூட்டத்தின் காட்சியும் திருச்சிக்குப் புதிது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நண்பர் என்றறியப்பட்ட மோடி தனது பேச்சில் தமிழ்நாட்டு அரசியலைத் தொடவில்லை என்றாலும், மற்றவர்கள் தமிழ்நாட்டையும் பிடிப்போம் என்ற தொனியில் பேசத் தவறவில்லை. தமிழ்நாட்டிலும் தேசியச் சிந்தனை என்ற அந்தக் குறிப்பை தொண்டர்களும் கைத்தட்டல்களுடன் வரவேற்றனர்.

நரேந்திர மோடி மீதுள்ள ஈர்ப்புதான் இந்தக் கூட்டத்துக்கு முதன்மை காரணம். இதைத் தவிர்த்து இயல்பாக ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீதான வெறுப்பும் ஒரு காரணம்.

அதேநேரத்தில் மோடி வருகைக்கான எதிர்ப்பும், கடந்த முறை திருச்சி வந்து விமானத்தில் சென்ற இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எழுந்த எதிர்ப்பை விடவும் அதிகமாகத்தான் இருந்தது. இத்தனைக்கும் பிரதான முஸ்லிம் அமைப்புகள், மற்ற பிரதான கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் புலம்பியதைத் தவிர.

முடிவில் நினைத்ததை முடித்திருக்கிறது தமிழக பாஜக. மாநாட்டைத் தொடர்ந்து கூட்டணிப் பேச்சுகளில் கம்பீரம் இருந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

மறைமுகமாக விடுக்கப்பட்ட சவாலை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு வெறுமனே அதிமுக, திமுகவிடம் மட்டுமில்லை, அடுத்த நிலைக் கட்சிகளிடமும் இருக்கத்தான் செய்கிறது. எதிர்ப்பு நிலையிலுள்ள அமைப்புகளுக்கும்கூட.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.