திருச்சி பாஜக மாநாடு திருப்புமுனையைத் தருமா?
தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டங்களைத் தவிர்த்து, பிரம்மாண்ட மாநாடுகளாக தமிழ்நாடு பாஜக நடத்தும் இரண்டாவது நிகழ்ச்சியாக, "இளந்தாமரை மாநாடு' திருச்சியில் வியாழக்கிழமை (செப். 26) நடைபெறவுள்ளது.


தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டங்களைத் தவிர்த்து, பிரம்மாண்ட மாநாடுகளாக தமிழ்நாடு பாஜக நடத்தும் இரண்டாவது நிகழ்ச்சியாக, "இளந்தாமரை மாநாடு' திருச்சியில் வியாழக்கிழமை (செப். 26) நடைபெறவுள்ளது.
விரைவில் எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தேசிய அளவில் பிரதான எதிர்க்கட்சியான பாஜக, தனது பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்த பிறகு அவர் தமிழ்நாட்டுக்கு வரும் முதல் நிகழ்ச்சி இது.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு மதுரையில் "தாமரைச் சங்கமம்" என்ற பெயரில் ஒரு மாநாட்டை நடத்தினார். அதில் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி பங்கேற்றார்.
அதன் தொடர்ச்சியாகவே இளைஞர்களை மையப்படுத்தி நடத்தப்படும் இந்த மாநாட்டுக்கு "இளந்தாமரை மாநாடு' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
வியாழக்கிழமை பிற்பகலில் பொன்மலை ஜி. கார்னர் ரயில்வே திடலில் நடைபெறும் இம் மாநாட்டில் மோடியுடன், பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்கிறார்.
இதே பொன்மலை ஜி. கார்னர் ரயில்வே திடலில், திடலை முழுவதும் நிரப்பி, சென்னை நான்கு வழிச்சாலையையும் ஸ்தம்பிக்கச் செய்த அளவுக்கு திமுக, அதிமுக மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
இவற்றை முறியடிக்காவிட்டாலும் சரிக்குச் சரியெனப் போட்டியைக் காட்டும் பாகீரத முயற்சியை பாஜக மேற்கொண்டுள்ளது.
இந்த மாநாட்டைப் பற்றி அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மக்கள் சந்திப்புப் பிரிவின் தலைவர் வெங்கய்ய நாயுடு, தனக்கேயுரிய எதுகை-மோனை பாணியில் "மலைக்கோட்டையிலிருந்து தில்லி செங்கோட்டைக்கு' என்ற முழக்கத்தை முன்வைத்துச் சென்றார்.
அதற்கேற்ப மாநாட்டுத் திடலில் மரப்பலகைகளால் தில்லி செங்கோட்டை வடிவில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருக்கிறது.
இளைஞர்கள் - மாணவர்களைப் பெருமளவில் பங்கேற்கச் செய்யும் பணிகளை பாஜக மாநிலத் தலைமை மேற்கொண்டுள்ளது. இதற்காக திருச்சியிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இணையதளம் மூலமும், நேரிலும் மாநாட்டுக்கான பங்கேற்பாளர்கள் பதிவு தொடங்கப்பட்டு இதுவரை இரண்டரை லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாக செவ்வாய்க்கிழமை இரவு மாநாட்டுப் பந்தலில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மாநாட்டுத் திடலில் 80 ஆயிரம் நாற்காலிகள் போடப்படுவதாகவும், ஒரு கிமீ சுற்றளவில் 20,000 வாகனங்களை நிறுத்தும் வகையில் 7 இடங்களில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திராவிட இயக்கங்களுக்கு பல வகைகளிலும் திருப்புமுனையை ஏற்படுத்திய திருச்சி, முதன் முதலாக பாஜகவின் மாநில அளவிலான மாநாட்டைச் சந்திக்கிறது.
மோடி வருகைக்கு எதிரான முழக்கங்களும் பொதுமக்கள் மத்தியில் இந்த மாநாடு குறித்த செய்தியைப் பரவலாகச் சென்று சேர்த்திருக்கிறது. தவிர, பரவலான விளம்பர ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
5 ஐஜிக்கள் தலைமையில் ஏறத்தாழ 4,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
திருச்சி அரசியலைப் பொருத்தவரை, மறைந்த முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம்தான் பாஜகவின் முதல் அறிமுகம். "தற்போது திருச்சியில் நடத்தப்படும் இந்த மாநாடு தமிழக பாஜகவுக்கு அரசியலில் நல்ல இடத்தைப் பெற்றுத் தரும்' என நம்புகிறது பாஜக.
தில்லி செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டு வரும் இளந்தாமரை மாநாட்டு மேடை. (இடது) மாநாட்டு மேடையை செவ்வாய்க்கிழமை இரவு பார்வையிட்ட பாஜக தேசியச் செயற்குழு உறுப்பினர் இல. கணேசன், மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...