தனியார் இன்டர்நெட், டி.டி.எச். நிறுவன ஊழியர்களுக்கு சீருடை கட்டாயம்
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தனியார் இன்டர்நெட், டி.டி.எச். நிறுவன ஊழியர்கள் கண்டிப்பாக சீருடை அணிய வேண்டும் என சென்னைப் பெருநகர காவல்துறை வலியுறுத்தியுள்ளது.


பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தனியார் இன்டர்நெட், டி.டி.எச். நிறுவன ஊழியர்கள் கண்டிப்பாக சீருடை அணிய வேண்டும் என சென்னைப் பெருநகர காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் அதிகரித்து வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பெருநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும் சென்னையில் குற்றங்கள் ஏதோ ஒரு ரூபத்தில் தினமும் நடைபெற்று வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்காக காவல்துறையும் அவ்வப்போது புதிய உத்தரவுகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், அண்மைக் காலமாக தனியார் இன்டர்நெட், டி.டி.எச் நிறுவன ஊழியர்கள்போல குற்றவாளிகள் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக காவலதுறைக்கு அதிக அளவில் புகார்கள் வருகின்றன.
கடந்த மாதம் அண்ணாநகர் எஸ்.எம்.நகர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி திரிபுர சுந்தரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு, அவர் வீட்டில் இருந்த 65 பவுன் தங்க நகைகள், பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது ஒரு தனியார் இன்டர்நெட் நிறுவனத்தின் பொறியாளரான அயப்பாக்கத்தைச் சேர்ந்த கௌதம் என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் கௌதம், அந்த வீட்டுக்கு இன்டர்நெட் இணைப்பு பழுது நீக்க பல முறை சென்றிருப்பதும், அப்போது அந்த வீட்டை நன்கு நோட்டமிட்டு, திரிபுரசுந்தரியை கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.
இச் சம்பவத்தில் கௌதம் அந்த வீட்டுக்குள் சென்றது, கீழ் தளத்தில் இருந்த விடுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
ஆதலால்தான் அவரை எளிதில் அடையாளம் கண்டு கைது செய்ய முடிந்ததாக விசாரணை செய்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து தனியார் இன்டர்நெட், டி.டி.எச். நிறுவன ஊழியர்களை ஒழுங்குப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தை சென்னைப் பெருநகர காவல்துறை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் சென்னையில் உள்ள தனியார் இன்டர்நெட், டி.டி.எச். நிறுவன நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
சீருடை கட்டாயம்: குறிப்பாக தனியார் இன்டர்நெட், டி.டி.எச். நிறுவன ஊழியர்களைப் பற்றிய முழு தகவல்களையும் அந்தந்த நிறுவனங்கள் சேகரித்து வைத்திருக்க வேண்டும், குற்றப் பின்னணி உள்ளவர்களை ஊழியர்களாக நியமிக்கக் கூடாது; பணியில் புதிதாக சேருபவர்களின் சான்றிதழ்களை முறையாக சரி பார்க்க வேண்டும்; வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு பழுது நீக்குவது, புதிய இணைப்பு வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் கண்டிப்பாக சீருடை அணிந்திருக்க வேண்டும்; இதேபோல அவர்களுக்கு அந்த நிறுவனத்தின் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பன போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதில் சென்னையில் பெரும்பாலான இன்டர்நெட், டி.டி.எச். சேவை நிறுவனங்கள் புதிய இணைப்பு வழங்குதல், பழுது நீக்குதல் போன்ற பணிகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவுட்சோர்சிங் மூலம் சிறு நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளன. இதனால் தங்களால் அந்த பணியாளர்கள் பற்றிய தகவல்களை திரட்ட முடியாது என சில இன்டர்நெட், டி.டி.எச். நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு காவல்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, ஒரு வாடிக்கையாளருக்கு எந்த நிறுவனம் சேவை வழங்குகிறதோ, அந்த நிறுவனம்தான் அதன்பேரில் வரும் ஊழியர்களுக்கு முழு பொறுப்பாளர்கள என கூறியுள்ளனர். ஏனெனில் முகப்பேரில் திரிபுரசுந்தரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் கௌதம், தனியார் இன்டர்நெட் நிறுவனம் அவுட்சோர்சிங் மூலம் இன்டர்நெட் பராமரிப்பு பணியை ஒப்படைத்த சிறு நிறுவனத்தின் ஊழியர் ஆவார். இதன் விளைவாக வழக்கில் ஈடுபட்டது இன்டர்நெட் நிறுவனத்தின் ஊழியர்தான் என்பதை போலீஸார் சில மணிநேரத்தில் கண்டுபிடித்தாலும், கௌதமை கைது செய்வதற்கு இரண்டு நாள்கள் ஆனதாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் கௌதமின் முகவரி, அவரைப் பற்றிய தகவல்களைத் தருவதற்கே அந்த தனியார் இன்டர்நெட் நிறுவனம், ஒரு நாளுக்கு மேல் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன் விளைவாக இன்டர்நெட், டி.டி.எச். நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மட்டுமன்றி அந்த நிறுவனங்களிடம் அவுட்சோர்சிங் முறையில் வேலை செய்யும் ஊழியர்களையும் ஒழுங்குபடுத்தி, அவர்களை பற்றிய தகவல்களையும் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 மாதம் கெடு: இந்தப் பணிகளை செய்வதற்கு அந்த நிறுவனங்களுக்கு 3 மாத காலக்கெடு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த ஊழியர்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம், அவர்கள் போல குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்களை எளிதில் அடையாள காண முடியும் என்றும், அதேவேளையில் குற்றப்பி ன்னணி உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கண்காணிக்க முடியும் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் ஓரளவுக்கு தனியார் இன்டர்நெட், டி.டி.எச். நிறுவனங்களின் ஊழியர்கள் எனக் கூறி நடைபெறும் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...