டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வழங்கப்படாத குண்டர் சட்ட வழக்கு விசாரணைத் தொகை

குண்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளைக் கைது செய்யும் காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விசாரணைத் தொகை கடந்த ஒரு ஆண்டாக வழங்கப்படவில்லை என்று போலீஸார் புகார் கூறுகின்றனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:07 pm

கே.வாசுதேவன்

குண்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளைக் கைது செய்யும் காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விசாரணைத் தொகை கடந்த ஒரு ஆண்டாக வழங்கப்படவில்லை என்று போலீஸார் புகார் கூறுகின்றனர்.

சட்டம் - ஒழுங்கை பாதிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுபவர்களையும், குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறவர்களையும் தமிழக காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறது. சென்னையில் இந்தச் சட்டத்தின் கீழ் கடந்த 9 மாதங்களில் 1,150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஆண்டே அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2012-ஆம் ஆண்டில் 904 பேர் கைது செய்யப்பட்டனர்.

குண்டர் சட்டம்: குற்ற வழக்கில் ஒருவரைக் கைது செய்வதுபோல, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்வது என்பது எளிதான வேலை இல்லை என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.

போலீஸ் பற்றாக்குறை அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள நிலையில், ஒரு குற்றவாளியைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய சுமார் 600 பக்கம் கொண்ட அறிக்கையை தலா 10 புத்தகங்களாகத் தயார் செய்ய வேண்டும். இந்த அறிக்கையை அலட்சியப் போக்கில் தயாரித்துவிட முடியாது. ஊர்ஜிதமான தகவல்களைத் திரட்டி சரியான காரணங்களுடன் அறிக்கையைத் தயார் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து குற்றவாளிகள் தப்பித்து விடுவர்.

நிலுவையில் விசாரணைத் தொகை: குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான காரணங்கள் அடங்கிய அறிக்கையைத் தயாரித்த பிறகு உயர் அதிகாரிகளிடம் கையெழுத்து பெறுவது பெரும்பாடு எனக் கூறப்படுகிறது. உயர் அதிகாரிகளின் கையெழுத்தைப் பெற்று, குற்றவாளியைக் கைது செய்து சிறைக்கு அனுப்பவதற்கு இரண்டில் இருந்து 3 வாரங்கள் வரை ஆகிறதாம். இதற்காக ஒரு காவல் நிலையத்தில் இரு காவலர்கள் 2 வாரத்துக்கு மேல் உழைப்பைச் செலுத்த வேண்டியுள்ளதாம். ஆனால் இந்த விசாரணைக்காக அளிக்கப்படும் தொகையை ஓராண்டாக தராமல் இழுத்தடிப்பதுதான் போலீஸாருக்கு பெரும் வேதனையாக உள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.

குற்றவாளிகள் தொடர்பான ஆவணங்களைத் திரட்டுவதற்கே பெருமளவு இதில் பணம் செலவிடப்படுகிறது. இதில் உடலுழைப்பு உள்பட இதர செலவினங்களைக் கணக்கிட்டு தொகை வழங்கப்படவில்லை. தற்போது அந்தத் தொகையை ஒரு ஆண்டாக தராவிட்டால் எப்படிச் செயல்படுவது என்று குமுறுகின்றனர் காவலர்கள். விசாரணைக்கான தொகை வழங்கப்படாதது தொடர்பாக கீழ் நிலை அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் கேட்டால், மெüனமே பதிலாக வருகிறதாம். இதனால் யாரிடம் கேட்பது எனத் தெரியாமல் காவலர்கள் விழிக்கின்றனர்.

ஆர்வம் காட்டாத காவலர்கள்: குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவரை கைது செய்வதற்கு ரூ.8 ஆயிரம் வழங்க அந்தந்த மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கு முன்பு ரூ.3,500 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது தொகையை உயர்த்தியும் பலன் இல்லை என்கின்றார்கள் காவலர்கள். இது போன்ற காரணங்களால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு காவலர்கள் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

குண்டர் தடுóப்புச் சட்டத்தின் கீழ் அதிகமானோரை கைது செய்திருப்பதன் மூலமே சென்னையில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் பெருமையாக பேசி வரும் நிலையில், அந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதியும் கீழ் நிலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய விசாரணைத் தொகையை வழங்க வேண்டும் என்பதே போலீஸாரின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.