சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஐந்தருவிப் பூங்கா
குற்றாலம் ஐந்தருவியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் மேலும் பல வசதிகளை


குற்றாலம் ஐந்தருவியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் மேலும் பல வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றாலத்தில் ஆண்டு முழுவதும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ரூ.5.73 கோடியில் 36 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தமிழக முதல்வரால் விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இப் பூங்கா திறந்துவைக்கப்பட்டது. தினந்தோறும் சுமார் 200 முதல் 300 பேர் வரை இந்த பூங்காவைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். இதன்மூலம் அரசுக்கு ரூ.1.75 லட்சம் வருவாயாகக் கிடைத்துள்ளது.
இப் பூங்காவில் நுழைவாயில், சுற்றுச்சூழல் குளம், மூங்கில் தோட்டம், வண்ணத்துப் பூச்சி பூங்கா, மலர்வனம், சிறுவர்கள் விளையாடுமிடம், பிரதான வாயில், நீரோட்ட நடைபாதை, தாழ்தளத் தோட்டம், சாகச விளையாட்டுத் திடல், பாறைத் தோட்டம், காகிதப் பூ தோட்டம், ஆலமரத் தோட்டம், சிறிய சிற்ப விலங்கு தோட்டம், பெரணி பூங்கா, பழத் தோட்டம், கற்பாறை பூங்கா, இயற்கைப் பூங்கா, பசுமைக் குடில், உணவுக் கூடம், கழிப்பறை வசதிகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
பஸ் வசதி, பேட்டரி கார் தேவை: வாகன வசதி இருந்தால்தான் இப்பூங்காவுக்கு வர முடியும் என்ற நிலை உள்ளது. தற்போது குற்றாலம் வரையிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஐந்தருவிக்கும் பஸ்கள் இயக்கப்பட்டால் பயணிகள் அதிகளவில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. சுற்றுச்சூழல் பூங்கா பரந்து விரிந்து கிடப்பதால் சிறுவர்கள் மற்றும் முதியவர்களால் அனைத்துப் பகுதிகளுக்கும் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் பேட்டரியால் இயங்கும் வாகனத்தை இயக்க வேண்டும் என்பது பயணிகளின் விருப்பம்.
இசை நீரூற்று: சிறுவர்கள் விளையாடுவதற்கு மூன்று விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களைக் கவரும் வகையில், பிற தீம் பார்க்குகளில் உள்ளதுபோல பல்வேறு விளையாட்டு சாதனங்களை நிறுவ வேண்டும். இங்கு ரோப்கார், சிறுவர்களுக்கான ரயில் போன்றவற்றை அமைக்க வேண்டும் எனவும் பயணிகள் விரும்புகின்றனர்.
பூங்காவின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு தோட்டமும் அமைந்துள்ளது. அதை அனைவரும் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில், எந்தெந்தப் பகுதியில் என்ன அமைந்துள்ளது என்பது குறித்த விளம்பரப் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட வேண்டும். இப் பூங்காவில் பறவைகள் பூங்கா, மீன் காட்சியகம், இசை நீரூற்று போன்றவற்றை அமைப்பதன் மூலம் கூடுதலாக பயணிகள் இங்கே வர வாய்ப்புள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், அங்கிருந்து அடுத்ததாக மதுரைக்குத்தான் செல்கின்றனர். எனவே, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை ஈர்க்கும் வகையில் இச் சுற்றுச்சூழல் பூங்கா குறித்து தமிழக அரசின் சுற்றுலாத் துறை இணையதளத்தில் விளம்பரப்படுத்த வேண்டும். தற்போது அமைக்கப்பட்டுள்ள உணவகப் பகுதி திறந்தவெளியாக இருப்பதால் அதில் பகல் நேரங்களில் அமர்ந்து உணவருந்த முடியாத நிலை நிலவுகிறது. எனவே அதில் ஒரு மேற்கூரை அமைக்க வேண்டும், மரத்தால் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையின் இருபுறமும் சிறுவர், சிறுமிகளின் நலன் கருதி பாதுகாப்புக்காக தடுப்புப் பலகைகள் அமைக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...