வாழ்விடம் செல்ல வழி தேடும் யானைகள்!
அரூர், ஜூலை 23: ஆந்திரத்தில் இருந்து வழி தவறி இப்போது அரூர் தீர்த்தமலைப் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், பொதுமக்களின் இடையூறுகளால் வாழ்விடம் செல்ல வழி தெரியாமல் அலைந்து வருகின்றன. ஆந்திரத்தில் இருந்


அரூர், ஜூலை 23: ஆந்திரத்தில் இருந்து வழி தவறி இப்போது அரூர் தீர்த்தமலைப் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், பொதுமக்களின் இடையூறுகளால் வாழ்விடம் செல்ல வழி தெரியாமல் அலைந்து வருகின்றன.
ஆந்திரத்தில் இருந்து வழி தவறி வந்த இந்த 6 யானைகள் திருவண்ணாமலை, ஆத்தூர், கருமந்துறை, தும்பல், மாமஞ்சி கோட்டப்பட்டி, சித்தேரி, தீர்த்தமலை, அரூர், பொம்மிடி, தொப்பூர் வழியாக ஒகேனக்கல் உள்ளிட்ட வனப் பகுதிகளை கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகச் சுற்றி வருகின்றன.
சேலம் மாவட்டம், கருமந்துறையில் பயணத்தைத் தொடங்கிய யானைகள் பயணம் மீண்டும் அதே பகுதிக்குத் திரும்பி வந்தன. இந்தப் பயணத்தில் சுமார் 400 கி.மீ. தொலைவு யானைகள் நடந்துள்ளன. ஆந்திரத்தில் இருந்து முதலில் 7 யானைகள் வழி தவறி வந்தன. கருமந்துறைக்கு வந்த போது ஒரு யானை இறந்துவிட்டது. இப்போது அந்தக் கூட்டத்தில் 6 யானைகள் மட்டுமே உள்ளன.
நாள் தோறும் நள்ளிரவு நேரங்களில் இடம்பெயரத் தொடங்கும் இந்த யானைகள், அதிகாலை வரையிலும் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்குச் செல்கின்றன. பகல் நேரங்களில் நன்றாக ஓய்வு எடுக்கின்றன. பின்னர், மாலை 5 மணிக்கு மேல் வனப் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் நுழைந்து கரும்பு, நெல், வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை உண்ணுவதுடன் சேதப்படுத்தியும் வருகின்றன.
யாருக்கும் பயப்படுவதில்லை: முதுமலை உள்ளிட்ட அடர்ந்த காடுகளில் வாழும் யானைகள் சிறிய சப்தம் கேட்டாலே ஓடிவிடும் தன்மை கொண்டவை. ஆனால், கிராமப் பகுதிக்கு வந்து செல்லும் இந்த யானைகள் எதற்கும் பயப்படுவதில்லை. தீப்பந்தம், பட்டாசு, வெடிகள், மேள சப்தம் என எந்த சப்தத்துக்கும் அஞ்சுவது கிடையாது. பட்டாசு வீசினால்கூட தும்பிக்கையால் பிடித்து காலால் மிதித்துவிட்டுச் செல்கிறது. இதனால், யானைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வெளியேற்ற முடியாது என்கின்றனர் வனத் துறையினர்.
மீண்டும் தொப்பூர் பயணம்?: ஏற்கெனவே இந்த யானைகள் சேலூர் அம்மாபாளையம் தொடங்கி மண்ணூர், சித்தேரி, கோட்டப்பட்டி, தீர்த்தமலை, பொய்யப்பட்டி, கீழானூர், பொம்மிடி, தொப்பூர், ராயக்கோட்டை, ஏற்காடு, மஞ்சுவாடி, வாழப்பாடி வழியாக மீண்டும் புறப்பட்ட இடமான சேலூர் அம்மாபாளையம் வனப் பகுதிக்குச் சென்றன.
இப்போது 2-வது சுற்றாக சேலூர் அம்மாபாளையத்தில் தொடங்கி சிட்லிங், கோட்டப்பட்டி, தீர்த்தமலை வழியாக அதே வழியில் மீண்டும் தொப்பூர், ஏற்காடு மலைக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக வனத் துறையினர் கருதுகின்றனர்.
பொதுமக்களால் அவதிப்படும் யானைகள்: வழிதவறி வந்த யானைகள் செல்லும் இடங்களில் நாள் தோறும் ஏராளமான பொதுமக்கள் கூடுகின்றனர். யானைகளிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதே வனத் துறை ஊழியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. வயல்வெயில் யானைகள் சேதம் ஏற்படுத்தினால் விவசாயிகள், கிராம மக்கள் பட்டாசுகள், அதிக சப்தம் எழுப்பும் ஒலிகளை எழுப்புகின்றனர். இதனால், யானைகள் எந்தத் திசையில் செல்வது என்று தெரியாமல் திணறுகின்றன.
யானைகள் வந்த வழியாக ஆந்திரம் செல்ல வேண்டுமெனில் திருவண்ணாமலை மாவட்ட வனப் பகுதிக்குச் செல்ல வேண்டும். இதன் காரணமாக, நரிப்பள்ளி வனப் பகுதி வழியாக திருவண்ணாமலை மாவட்ட எல்லைப் பகுதிகளுக்கு யானைகளை விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 தினங்களும் 30-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் இரவு, பகல் பாராமல் யானைகளை விரட்டப் போராடி வருகின்றனர்.
இழப்பீடுகளை விரைந்து வழங்கக் கோரிக்கை: விவசாயப் பயிர்களை யானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால், வனத் துறையினர் விரைந்து இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளுக்கு உரிய முறையில் இழப்பீடு வழங்கினால்தான் அவர்கள் யானைகளை விரட்டாமல் இருப்பார்கள். அப்போதுதான் யானைகள் அதன் போக்கில் செல்லும் என்று விவசாயிகள் கூறினர். திருவண்ணாமலை மாவட்டம் நோக்கிச் சென்ற யானைகளை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தும்பல், மாமஞ்சி, கரும்மந்துறை கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து விரட்டியதால்தான் யானைகள் திசை மாறின. எனவே, வனத் துறையினருடன் காவல் துறையும் இணைந்து செயல்பட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
விருப்பம் போல இடம்பெயர நடவடிக்கை
இதுகுறித்து அரூர் மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) எம்.செந்தில்குமார் திங்கள்கிழமை கூறியது:
யானைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக மக்கள் கூட்டமாக வருகின்றனர். தங்களது விவசாயப் பயிர்களை சேதப்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் கூட்டமாக வருகின்றனர். யானைகளால் மனித உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை பிற்பகலில் தருமபுரி மாவட்டம், அரூர் தீர்த்தமலைப் பகுதியில் கத்திரிப்பட்டியில் யானைகள் முகாமிட்டிருந்தன. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வந்த இந்த யானைக் கூட்டம் தீர்த்தமலை வனப் பகுதியில் இருந்து ரெட்டியார் பாளையம் வழியாக திருவண்ணாமலை மாவட்டம் சென்றது. எனவே, யானைகளை விருப்பம் போல இடம் பெயரச் செய்யும் நோக்கில் வனத் துறை செயல்படுகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...