நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஒதுக்கப்படுவதால் பாதிக்கப்படும் பள்ளிக் குழந்தைகள்!

திருச்சி,: எய்ட்ஸôல் பாதிக்கப்பட்ட மற்றும் எச்ஐவி தொற்றுள்ள பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்களின் ஒதுக்குதல் காரணமாக தங்களது கல்வியைத் தொடர முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.  இந்தியாவில் அனைவருக்கும் இலவச ம

News image
Updated On :28 டிசம்பர் 2023, 3:56 pm

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி,: எய்ட்ஸôல் பாதிக்கப்பட்ட மற்றும் எச்ஐவி தொற்றுள்ள பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்களின் ஒதுக்குதல் காரணமாக தங்களது கல்வியைத் தொடர முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

 இந்தியாவில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் கடந்த ஆண்டு, ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் இதன் சட்ட விதிமுறைகளை தமிழக அரசு கடந்த சனிக்கிழமை வெளியிட்டது. இதன்படி 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு அவர்கள் வாழும் பகுதியிலுள்ள பள்ளியிலேயே- தனியார் பள்ளியாக இருந்தாலும்- இலவச, கட்டாயக் கல்வியை அளிக்க வேண்டும்.

 இதில் மிகவும் பின்தங்கியவர்கள் என்று வகைப்படுத்தப்படும் பட்டியலில் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பள்ளிகளில் இடம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஆனால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட, எச்ஐவி தொற்றுள்ள குழந்தைகளிடம் பள்ளிகளில் ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் நிலை குறித்த எவ்வித எச்சரிக்கையும் இல்லாதது, இவர்களின் நிலையை வழக்கம் போலக் கேள்விக்குரியதாகவே வைத்திருக்கிறது. பெற்றோரிடமிருந்து எச்ஐவி தொற்றிய குழந்தைகள், பெற்றோர்களுக்குத் தொற்றியதால் குடும்பச் சூழல் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என இரு வகையினர் பள்ளிகளில் ஒதுக்குதலுக்கும், புறக்கணிப்புக்கும் உள்ளாகி வருகின்றனர்.

 இவர்களில் பலருக்கு கல்விக்கான நிதியை, அரசு சார்பு அறக்கட்டளைகள் வழங்கினாலும்கூட, இதுபோன்ற ஒதுக்குதல் காரணமாக இயல்பாகவே பெற்றோரின் மனநிலை கல்வி நிறுத்தம் என்ற நிலைக்குச் சென்றுவிடுகிறது. சென்டர் பார் அட்வகேசி அண்டு ரிசர்ச்' என்ற தன்னார்வ அமைப்பு ஒன்று இதுபோன்ற குழந்தைகள் 50 பேரைக் கொண்டு ஓர் ஆய்வை அண்மையில் நடத்தியது. இந்த ஆய்வில் 50 சதவீதக் குழந்தைகள் புறக்கணிப்புகளுக்குப் பயந்து தங்களின் எச்ஐவி நிலையை வெளிப்படுத்தாமல் உள்ளனர் என்றும், 34 சதவீதக் குழந்தைகள் எச்ஐவி நிலையை வெளிக்காட்டியதால் புறக்கணிப்புகளைச் சந்தித்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

 நேரடியாகப் பள்ளிகளில் சேர்க்க மறுப்பு என்று இல்லாமல், சேர்ந்த பிறகு தாமதமாக வந்தது, வீட்டுப் பாடம் செய்யாதது, சோர்ந்து இருப்பது, உடல் நலக் குறைவாக இருப்பது போன்ற காரணங்களைச் சொல்லி வெளியேற்றும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாகத் தெரிய வந்துள்ளது. திருச்சியில் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து விளக்குகிறார், எச்ஐவியுடன் வாழ்வோர் கூட்டமைப்பின் தலைவி அ. தமிழ்:

 "திருச்சி மாநகரில் மேலப்புதூர் பகுதியில் உள்ள பள்ளியில் பெற்றோருக்கு எச்ஐவி உள்ளது என்பதை எப்படியோ தெரிந்து கொண்டு, மாணவர் ஒருவரைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை எடுத்து வரச் சொல்லி துன்புறுத்துகின்றனர்.

 தண்டலைப்புத்தூர் பகுதியிலுள்ள ஓர் அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவருக்கு பரிசோதனை செய்யச் சொல்லி பள்ளியிலிருந்தே கடிதம் கொடுத்தனர்.

 இந்த விவகாரத்தை கல்வித் துறையின் உயர் அலுவலர்களுக்கு தெரிவித்த பிறகு, தற்போது பிரச்னை அமைதியாகியிருக்கிறது.முசிறி பகுதியில் 7-ம் வகுப்பு படித்த எச்ஐவி தொற்றுள்ள மாணவர் அங்கு நேரிட்ட பிரச்னைகளால் பள்ளிக் கல்வியை நிறுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

 அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த- எச்ஐவி பாதிக்கப்பட்ட மாணவியும் பள்ளிக் கல்வியை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.லால்குடி பகுதியில் பிளஸ் 1 படித்த- எச்ஐவி தொற்றுள்ள மாணவர் தனது பள்ளிப் படிப்பை நிறுத்தியிருக்கிறார். இது போன்ற பிரச்னைகளால் திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட இரு மாணவர்களைப் போராடி மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திருக்கிறோம்' என்றார் தமிழ்.

 கடந்த அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு பள்ளியிலும் இரு ஆசிரியர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு எச்ஐவி- எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது.

 அதன்பிறகு இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.எனவே மீண்டும் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்தினால், ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுவதுடன், இதுபோன்ற பிரச்னைகள் உருவாகும்போது, ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்களிடம் பேசி சரி செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் குறிப்பிடுகிறார் தமிழ்.

 இத்துடன் இலவச- கட்டாயக் கல்விச் சட்டத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் என்ற வகைப்பாட்டில் எச்ஐவி தொற்றுள்ள மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 5 சதவீத ஒதுக்கீடு என்ற சட்டப்படியான பாதுகாப்பை முதல்வர் ஜெயலலிதா உறுதிப்படுத்த வேண்டும்; ஆந்திரத்தில் இதுபோன்ற நடைமுறை உள்ளது என்கிறார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.