ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வேதாரண்யத்தில் சம்பா நெல் சாகுபடி பாதிக்கும் அபாயம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இறைவைப் பாசனத் திட்டத்தில் பின்னடைவு, உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிகழாண்டு சம்பா நெல் சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய

News image
Updated On :28 டிசம்பர் 2023, 7:07 pm

கே.பி. அம்​பி​கா​பதி

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இறைவைப் பாசனத் திட்டத்தில் பின்னடைவு, உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிகழாண்டு சம்பா நெல் சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பருவ மழை பின்னடைவு: வடகிழக்குப் பருவமழை காலத்தில் வேதாரண்யம் பகுதியில் இயற்கையாகவே அதிக மழைப் பொழிவு இருக்கும். ஆனால், பருவநிலை மாறுபாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு, இந்தப் பகுதியில் அதிகரித்து வரும் ஊசியிலை தாவர வகையைச் சேர்ந்த சவுக்கு, நீர்வளத்தை அதிக அளவில் கிரகிக்கும் தைல வகை மரங்களின் சாகுபடி பரப்பு அதிகரிப்பு போன்றவற்றால் மழைப் பொழிவு கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வருகிறது.

மானாவாரி நிலப் பரப்பை அதிகமாகக் கொண்டுள்ள வேதாரண்யம் பகுதியில் நிகழாண்டு வடகிழக்குப் பருவமழையானது தொடக்கத்திலிருந்தே சீராக இல்லை. இதனால், இங்கு நேரடி விதைப்பு முறையில் மேற்கொள்ளப்படும் சம்பா நெல் சாகுபடிப் பணிகளும் தாமதமாகவே தொடங்கின.

இறைவைப் பாசனம்: மானாவாரி பரப்பில் பல இடங்களில் உள்ள வயல்களில் இன்னும் தண்ணீர் தேங்காத நிலையில், வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவி வருகிறது.

வேதாரண்யம் பகுதியில் 10,500 ஹெக்டேரில் மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதில் இப்போது 8,316 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்குள்ள தகட்டூர், வாய்மேடு, தென்னடார், வண்டுவாஞ்சேரி மருதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசின் மின் இறைவைப் பாசனத் திட்ட பொறிமனைகளில் உள்ள மோட்டார்கள் பழுது ஏற்பட்டு, திறன் குறைந்தவையாக இருப்பதாகக் கூறும் விவசாயிகள், குறைந்த அளவு நீரையும் பெற மும்முனை மின்சாரம் சீராகக் கிடைப்பதில்லை என்கின்றனர்.

தாமதமாகும் பயிர்க் கடன்: கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பயிர்க் கடன், உரம் ஆகியவை பல இடங்களில் தாமதமாகி வருகிறது.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் என். சந்திரசேகரன் கூறியது:

குறிப்பாக, மருதூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் கடந்த ஆண்டில் இதே நாளில் 50 சதவீத கடன், 15 லோடு உரம் வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கடன் வழங்கப்படுவது தாமதமாகி வருகிறது. ஒரு லோடு உரம் மட்டுமே வங்கிக்கு வந்துள்ளது. கடன் கிடைக்காததால், வயல்களில் பராமரிப்புப் பணிகளை செய்ய முடியவில்லை என்றார் அவர்.

வருவாய்த் துறையினர் வழங்கும் சான்றிதழ் தாமதமாக வழங்கப்பட்டதும் இதற்கு ஒருகாரணமாகக் கூறப்படுகிறது.

அறிவிக்கப்படாத பயிர்க் காப்பீடு: கடந்த 2010-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுக்கான விவரம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இதனால், இழப்பீட்டை எதிர்பார்த்திருந்த விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளர் எஸ். சம்பந்தம் கூறியது:

கடந்த ஆண்டுக்கான காப்பீடு குறித்த விவரங்கள் இதுநாள்வரை அறிவிக்கப்படவில்லை. 20 நாள்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் உறுதியளித்தார். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் காப்பீடு செய்ய முன்வரவில்லை. இதில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

விவசாயிகளின் முக்கிய பிரச்னைகளை களைவதற்கு அரசு போதிய கவனம் செலுத்தி, சம்பா நெல் சாகுபடியில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.