ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கோடியக்கரை வங்கக் கடலோரத்தில் வன உயிரின சரணாலயம்

வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள கோடியக்கரை இயற்கை நிகழ்வுகளையும், வரலாற்றுப் பதிவுகளையும் ஒரே நேரத்தில் அறிந்து கொள்ளும் வாய்ப்பை கொண்டுள்ள சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. இதனால், இங்கு கோடை விடுமுறை சுற

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:28 pm

கே.பி. அம்​பி​கா​பதி

வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள கோடியக்கரை இயற்கை நிகழ்வுகளையும், வரலாற்றுப் பதிவுகளையும் ஒரே நேரத்தில் அறிந்து கொள்ளும் வாய்ப்பை கொண்டுள்ள சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. இதனால், இங்கு கோடை விடுமுறை சுற்றுலாவாக மாணவர்களும், இயற்கை ஆர்வலர்களும் அதிக எண்ணிக்கையில் வந்து செல்வதைக் காண முடிகிறது.

 பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் தவிர, பல்வேறு தேவைகளுக்காக அதிகரித்து வரும் கட்டமைப்புகள் உள்ளிட்ட காரணங்களால் தமிழக கடலோரத்தின் தனித்தன்மை கேள்விக்குறியாகி வருகிறது. இந்த நிலையிலும், இயற்கை அளித்த வன, உயிரினப் பாதுகாப்புப் பகுதியாக விளங்குகிறது கோடியக்கரை கடலோரம்.

 நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் வெப்ப மண்டல எல்லைக் கோட்டில் அமைந்துள்ளது உலர் பசுமை மாறாக் காடுகள். இதன் பின்னணியில் இயற்கை உயிரினப் பாதுகாப்பகமும், அவற்றின் வாழ்வாதாரப் பகுதியாகவும் அமையப் பெற்றுள்ளன.

 புவியியல் அமைப்பில் நாட்டின் கோடியில் அமைந்துள்ள இப் பகுதி, 1967-ம் ஆண்டு முதல் வன உயிரினச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது.

 இங்கு அழியும் தருவாயிலுள்ள வெளிமான் இனம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது. இந்தச் சரணாலயத்தில் புள்ளி மான், நரி, மட்டக் குதிரை, புனுகு பூனை, காட்டுப் பன்றி, குரங்கு போன்ற வன உயிரினங்களையும் கூட்டம் கூட்டமாகக் காண முடியும்.

 இதில் உள்ள 252.16 ஹெக்டேர் பரப்பு பகுதி பெங்களூர் பாரம்பரிய மருத்துவ மரபுகள் மறுமலர்ச்சி அறப்பேரவை நிதியுதவியுடன் மூலிகைப் பாதுகாப்பகமாக பராமரிக்கப்படுகிறது.

 பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் காணப்படும் அரிய வகை ஆலிவ்ரெட்லி ஆமைகள் முட்டையிட அதிக எண்ணிக்கையில் இப் பகுதிக்கு வந்து செல்கின்றன. அந்த இனம் அழிவதைத் தடுக்க இங்கு செயற்கை முறை பொரிப்பகமும் அமைந்துள்ளது.

 வடகிழக்குப் பருவ காலத்தில் கிழக்காசிய நாடுகளிலிருந்து இடம் பெயரும் 260 வகை பறவையினங்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம். தற்போது கோடை காலம் என்பதால் பறவைகளைக் காண முடியாது என்றாலும், அவற்றின் சிறப்புகளை தெரிந்துக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

 கோடியக்கரையில் காணப்படும் மூன்று கலங்கரை விளக்கங்களும் அந்தந்தக் காலக்கட்டத்தின் வரலாற்றுப் பதிவுகளின் அடையாளமாக உள்ளன.

 வங்காள விரிகுடா - பாக் ஜலசந்தி இணையும் பகுதியைச் சார்ந்த கோடிமுனை கடலோரத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்டு, விறகுகளைக் கொண்டு எரியூட்டப்பட்ட வெளிச்சத்தில் பயன்பட்டு வந்த கலங்கரை விளக்கம் தற்போது கடல் பகுதிக்குள் சேதமடைந்த நிலையில் உள்ளதைக் காணலாம்.

 மேலும் ஆங்கிலேயர் காலத்தில் 1890-களில் அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கமும், சுதந்திரத்துக்குப் பின்னர் அமைக்கப்பட்ட (150 அடி) உயரமான புதிய கலங்கரை விளக்கமும் பார்க்க வேண்டிய வரலாற்றுப் பதிவுகள்.

 கோடியக்கரை வனப் பகுதியானது ஆங்காங்கே காணப்படும் மலை போன்ற மணல் குன்றுகளின் மீது அமைந்துள்ளது மற்றும் ஒரு சிறப்பு. சரணாலயத்தின் மேற்கு, வடக்குப் பகுதி சதுப்பு நிலமாகவும், உப்பளமாகவும் உள்ளது. இங்கு தற்போது உப்பு உற்பத்தி நடைபெறுவதையும் காணலாம்.

 ஆன்மிகம்:கோடியக்கரையின் பிரதான சாலையையடுத்து அமைந்துள்ள மணல் குன்றின் மீது ராமர் பாதம் என அழைக்கபப்படும் வழிபாட்டு இடம் உள்ளது. அரசு புராதன சின்னமாக அறிவித்து பாதுகாத்து வரும் இந்த இடத்தில் கருங்கல்லில் காணப்படும் பாதச்சுவடு ராமர் பாதம் என அழைக்கப்படுகிறது.

 கோடியக்காட்டில் உள்ள சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடல் பெற்ற பழைமையான குழகர் கோயில், இதுதவிர, அகஸ்தியம்பள்ளியில் இருக்கும் அகஸ்தியர் கோயிலும் சிறப்புப் பெற்றது. இறைவனும், இறைவியும் திருமணக் கோலத்தில் காட்சி தந்ததாகவும், சமயக் குரவர்களால் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறந்ததாகவும் கூறப்படும் சிறப்புகளைக் கொண்ட வேதாரண்யேசுவரர் கோயிலும் இந்தப் பகுதிக்கு சிறப்பைத் தருகிறது.

 இதுதவிர, உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் போது ஆங்கிலேயரால் ராஜாஜி சிறை வைக்கப்பட்ட இடம், அதன் நினைவாக அகஸ்தியம்பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத் தூண், போராட்டத் தளபதியாக திகழ்ந்த சர்தார் வேதரத்தினம் நிறுவிய குருகுலம், தியாகிகளின் நினைவுத் தூண்கள் உள்ளிட்டவைகளும் இன்றைய தலைமுறையினர் காண வேண்டிய இடங்களாக உள்ளன.

 சுற்றுலாப் பயணிகள் கோடியக்கரையில் தங்குவதற்கு வனத் துறையினரால் பராமரிக்கப்படும் அறைகள் உள்ளன. நாகையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும். தொலைபேசி எண்: 04365 253092. கோடியக்கரையில் முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் மட்டுமே உணவு தயாரித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதனால் தேவையான உணவு, குடிநீர் போன்றவைகளை பயணிகள் கொண்டு செல்வது நல்லது. வேதாரண்யத்தில் தனியார் தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளன.

 வேதாரண்யத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள கோடியக்கரைக்கு பேருந்து வசதிகள் உள்ளன. நாகப்பட்டினத்தில் இருந்து 60 கி.மீ. தஞ்சையிலிருந்து 110 கி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.