/

என்ன வேண்டும் எங்களுக்கு? - சிறுதொழில் துறை

தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை பெருமைபடக் கூறிக் கொண்டாலும், அத்துறையின் அடிநாதமாக இருக்கக் கூடிய பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன. உற்பத்திக்கான ஆ

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:25 pm

சிவ. மணிகண்டன்

தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை பெருமைபடக் கூறிக் கொண்டாலும், அத்துறையின் அடிநாதமாக இருக்கக் கூடிய பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன.

உற்பத்திக்கான ஆர்டர்களைப் பெற ஏங்கிக் கொண்டிருந்த காலம்போய், இப்போது ஆர்டர்கள் அதிகளவுக்குக் குவிந்து கொண்டிருக்கும் நிலையில் அவற்றைச் செய்து கொடுக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் சிறுதொழில் துறையினர்.

தமிழகத்தில் அதிக வேலைவாய்ப்பைத் தரக்கூடியதாக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் இருக்கின்றன. அரசிடம் பதிவு செய்யப்பட்டு 6 லட்சத்து 31 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 43 லட்சத்து 92 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிறுவனங்களின் மொத்த முதலீடு ரூ.26 ஆயிரத்து 136 கோடி.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இத்துறை புத்துயிர் பெற புதிய அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்துத்தான் அந்த அரசின் வெற்றியே இருக்கும் என்று சொன்னால்கூடத் தவறில்லை.

தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க... சிறு, குறுந்தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக இருக்கிறது. பிகார், ஒரிசா மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இல்லையெனில் குறுந்தொழில் கூடங்களை நடத்தவே முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட்டதன் விளைவு, தொழில் மாவட்டங்களை வெகுவாகப் பாதித்துவிட்டது.

உடல் உழைப்பு குறைவு, வீட்டுக்கு அருகிலேயே வேலை என்ற மனநிலைக்கு மக்கள் மாறிவிட்டனர். உடலை வருத்திக் கொள்ளாமல் எப்படிச் சம்பாதிப்பது என்ற தவறான மனநிலை படித்தவர்கள் மத்தியிலும் பாமரர்கள் மத்தியிலும் ஏற்பட்டிருப்பதுதான் விபரீதங்களுக்கே அடிப்படை.

படிப்பைக் கைவிட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறு, குறுந்தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஓரளவுக்கு தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்ப்பதுடன், வேலைவாய்ப்பு திண்டாட்டத்தையும் போக்க முடியும்.

மூலப்பொருள்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த... ஒவ்வொரு நிதி ஆண்டின் கடைசி 3 மாதங்களிலும் சிறு, குறுந்தொழில் குறிப்பாக என்ஜினியரிங் சார்ந்த தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருள்களான தேனிரும்பு, இரும்புக் கம்பி, தாமிரம், அலுமினியம், பிளாஸ்டிக் போன்றவற்றின் விலை 30-லிருந்து 40 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.

விலை மாறுபாடுகளுக்கு ஏற்ப வங்கிகள் நடப்பு மூலதனத்தை அதிகரித்து கடன் அளிக்க முன்வருவதில்லை. இதனால் நிதி நெருக்கடியும் தவிர்க்க முடியாததாகிறது.

மூலப்பொருள்கள் விலையைக் கண்காணித்து கட்டுப்படுத்துவது அவசியம்.

குறுந்தொழில் மானியம் தடையின்றி கிடைக்க... பெரு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பு, ஜாப் ஒர்க் போன்றவற்றுக்கு குறுந்தொழில் கூடங்களை நம்பியே இருக்கின்றன. குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மாநில அரசு மானியம் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது.

ஆனால், நடைமுறைக்கு ஒத்துவராத நிபந்தனைகளை விதித்ததால் குறுந்தொழில் நிறுவனங்களால் எளிதில் இந்த மானியத்தைப் பெற முடியவில்லை.

இயந்திரம் வாங்கிய ஒரு மாதத்துக்குள் மாவட்ட தொழில் மையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், இயந்திரம் வாங்கியதில் இருந்து இரு மாதங்களில் உற்பத்தியை 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும், வாடகை கட்டடத்தில் இயங்கும் தொழில்கூடமாக இருந்தால் 5 ஆண்டுகளுக்கு வாடகை ஒப்பந்த பத்திரம் இணைக்க வேண்டும், தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதெல்லாம் சாதாரண குறுந்தொழில் கூடங்களுக்கு ஒத்துவராத நிபந்தனைகளாக இருக்கின்றன. மானியம் பெறுவதற்காக அலைந்தே நஷ்டப்பட்டவர்கள் ஏராளம்.

இப்போதுள்ள சூழலில் குறுந்தொழில் கூடங்களுக்கு வங்கிகள் கடன்தர முன்வருவதில்லை. நிதிநிறுவனங்களில் கடன் பெற்றால் மானியம் பெற முடியாது. குறுந்தொழில்களைப் பாதுகாக்க நல்ல திட்டத்தைக் கொண்டு வந்திருந்தாலும் அதன் பலனைப் பெற முடியாமல் இருக்கிறோம் என்கின்றனர் குறுந்தொழில் முனைவோர்கள்.

தனித்தொழில்பேட்டைகள் அமைக்க... சிறப்புப் பொருளாதார மண்டலம் போல குறுந்தொழில்களுக்கு தனித்தொழில்பேட்டை அரசு அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், குடியிருப்பு பகுதியில் சிறு தொழிற்கூடம் உள்ளது என்று கூறி அது தொடர்பான பிரச்னைகள் எழுவதைத் தவிர்க்கலாம்.

அதேபோல தொழிற்சாலை பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு குடியிருப்புகள் வந்தால், தொழிற்சாலைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்ற நிலையைக் கொண்டு வர வேண்டும்.

மின்பற்றாக்குறையைப் போக்க... மேற்குறிப்பிட்ட பிரச்னைகளைக்காட்டிலும் சிறு, குறுந்தொழில்களை பாதிக்கும் பூதாகரமான பிரச்னையாக இருப்பது மின்வெட்டு.

கடந்த 2007 டிசம்பரில் தொடங்கிய மின்பற்றாக்குறை இப்போது வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. உயர்அழுத்த மின்இணைப்பு பெற்றுள்ளவர்கள் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தைப் பயன்படுத்த முடியாது. இதுபோக தினசரி 3 மணிநேர மின்வெட்டு.

தினசரி 3 மணி நேர மின்வெட்டு என்பது பெரும்பாலும் பகல் நேரங்களிலேயே இருப்பதால், தொழில்கூடங்களை ஒரு ஷிப்ட் கூட இயக்க முடியவில்லை என்கின்றனர் சிறு, குறுந்தொழில் முனைவோர்.

தமிழகத்தில் உள்ள மத்திய மின்திட்டங்களில் உற்பத்தியில் 75 சதவீதத்தை தமிழகத்துக்கே கேட்டுப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற பிரச்னைகள் தீர்க்கப்படாவிட்டால் வரும் காலங்களில் சிறு, குறுந்தொழில் கூடங்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு சுருங்கிவிடும்.

சிறு, குறுந் தொழிற்கூடங்கள் நசிந்துவிட்டால், தமிழகத்தைத் தொழிற்மயமாக்குவது எப்படி? பன்னாட்டு நிறுவனங்களுக்கும், மோட்டார் பாகங்கள் உள்ளிட்ட பெரும் தொழிற்சாலைகளுக்கும் உதிரி பாகங்களைத் தயாரித்துக் கொடுக்கப் போவது யார்?

பதவி ஏற்கும் அரசை எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்களில் சிறு, குறுந்தொழில் வளர்ச்சிதான் முன்னுரிமை பெற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.