/

கொ.மு.க. போடும் கணக்கு!

கோவை, மார்ச் 3: இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என விவாதம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு விடை கொடுத்துவிட்டது பேரவைத் தேர்தலில் முதல் முறையாகக் களம் காணப் போகும் கொங்குநாடு முன்னேற்றக் கழகம்.  ஜாதி அமைப்ப

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:42 pm

சிவ. மணிகண்டன்

கோவை, மார்ச் 3: இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என விவாதம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு விடை கொடுத்துவிட்டது பேரவைத் தேர்தலில் முதல் முறையாகக் களம் காணப் போகும் கொங்குநாடு முன்னேற்றக் கழகம்.

 ஜாதி அமைப்பாக இருந்த கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை, கடந்த மக்களவைத் தேர்தலின்போது கொங்குநாடு முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியாக உதயமானது.

 கொங்கு மண்டலத்துக்கு சமூகப் பணிகளைச் செய்ய வலிமையான அரசியல் கட்சி இல்லை. இதனால் வளர்ச்சிப் பணிகளிலும், நீண்டகாலத் திட்டங்களிலும் கொங்கு மண்டலம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே அரசியல் கட்சியாக கொ.மு.க. துவங்கப்பட்டது என்றனர்.

 அதற்கேற்ப முதல் தேர்தலிலேயே போட்டியிட்ட தொகுதிகளில் முன்னணி அரசியல் கட்சிகளுக்கு சவாலாக இருந்தது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இத் தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ஆளும் கட்சி, பிரதான எதிர்க்கட்சிகளுக்கு கொ.மு.க.வைச் சமாளிப்பது பெரும் சிரமமாக இருந்தது. அக் கட்சியின் தேர்தல் பணிகள், பிரசாரம், பொதுக்கூட்டங்கள் அரசியல் கட்சிகளுக்கு பிரமிப்பை ஏற்படுத்தின.

 மக்களவைத் தேர்தலின்போதே அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கூட்டணி அமைக்க விரும்பினாலும் கொ.மு.க. அதை நிராகரித்துவிட்டது. தனித்துப் போட்டியிட்டால்தான் எங்களது பலம் அரசியல் கட்சிகளுக்குப் புரியும் என்று கூறினர்.

 அதைப் பிரதிபலிக்கும் வகையில் 12 மக்களவைத் தொகுதிகளிலும் சேர்த்து 5.6 லட்சம் வாக்குகளைப் பெற்றது. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு தொகுதிகளில் 3-வது இடத்தையும், நாமக்கல், நீலகிரி, கள்ளக்குறிச்சியில் நான்காவது இடத்தையும் பெற்றது.

 குறிப்பாக கோவை மக்களவையில் உள்ள பல்லடம், சூலூர் பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது. கோவை மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், காங்கிரஸýக்கும் நேரடிப் போட்டி இருந்த நிலையில் பல்லடம், சூலூரில் காங்கிரûஸப் பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்துக்கு வந்தது.

 இச்சூழலில் இந்த பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. அணிக்குச் செல்வதா, தி.மு.க.வா என இருதரப்பிடமே கட்சி பேச்சு நடத்திக் கொண்டிருந்தது. எந்த அணிக்குச் சென்றாலும், அந்த அணியில் உள்ள கட்சிகளின் வாக்குகள், சொந்த வாக்கு வங்கி ஆகியன தங்களுக்கு வெற்றி வாய்ப்பைத் தேடித்தரும் என்பதால் "எண்ணிக்கை' தான் கொ.மு.க.வுக்கு பிரதானமாக இருந்தது.

 அ.தி.மு.க. அணியில் சேருவதைத்தான் கொ.மு.க. விரும்பியது. அவர்கள் ஒதுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை அக் கட்சிக்குத் திருப்தியைத் தரவில்லை. அ.தி.மு.க.வுடன் "பாஸிட்டிவ் மூவ்' இருப்பதாகவே கொ.மு.க.வினர் கூறிவந்தனர். தொண்டர்களின் விருப்பமும் அதுவாகவே இருந்தது.

 கடந்த பேரவைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் பின்னடைவைச் சந்தித்த தி.மு.க., இந்த முறை அதை மாற்றியாக வேண்டும் என்பதற்காக மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது. கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக் கூட்டத்துக்குப் போட்டிக் கூட்டமும் அதை உறுதிப்படுத்தின. மேலும் கொ.மு.க.வை தங்கள் அணியில் சேர்க்க வேண்டும் என்பதிலும் தி.மு.க. ஆர்வமாக இருந்தது. இறுதியில் 7 தொகுதிகளைக் கொடுத்து தங்களது அணியில் சேர்த்துக் கொண்டுள்ளது.

 "மக்களவைத் தேர்தலில் கோவை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கரூர் தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற முடியவில்லை. இதற்கு கொ.மு.க.வும் ஒரு காரணம். பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன், கொ.மு.க. இணைந்துவிட்டால், மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் கட்சிக்கு மேலும் பாதிப்பாக அமைந்துவிடும். கொ.மு.க.வுக்கு 7 தொகுதிகளை கொடுத்து அணியில் சேர்த்துவிட்டோம்' என்கின்றனர் கொங்கு மண்டல தி.மு.க. நிர்வாகிகள்.

 மக்களவைத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி கூட்டணிக்கு அடுத்த இடத்தில் கொ.மு.க. இருக்கிறது.

 பேரவைத் தேர்தலில் எந்த அணியுடன் இணைந்தாலும், போட்டியிடும் தொகுதியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தொகுதி அதிகம் ஒதுக்கியதால் இந்த அணியைத் தேர்வு செய்துள்ளதாகக் கூறுகிறது கொ.மு.க.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.