ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அகதிகள்போல் வாழும் மக்கள்!

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2009 நவம்பர் மாதத்தில் பெய்த பலத்த மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு கேத்தி பகுதியில் கட்டித் தரப்பட்டுள்ள ஒற்றை அறை தாற்காலிக குடியிருப்புகளில் கடந்த 20 மாதங்களாக வசித்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:09 pm

ஏ. பேட்ரிக்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2009 நவம்பர் மாதத்தில் பெய்த பலத்த மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு கேத்தி பகுதியில் கட்டித் தரப்பட்டுள்ள ஒற்றை அறை தாற்காலிக குடியிருப்புகளில் கடந்த 20 மாதங்களாக வசித்து வருவோர் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழையின்போது பெய்த பலத்த மழையால் உதகையில் நொண்டிமேடு, காந்திநகர், வேலிவியூ உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதோடு 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர்.

இதன் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட அவர்களுக்காக கேத்தி பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் இந்த தாற்காலிகக் குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன.

ஒற்றை அறையும், தகரக்கூரையும் கொண்டு முதற்கட்டமாக 50 வீடுகள் இப்பகுதியில் அமைக்கப்பட்டன. ஆனால், 20 மாதங்களாகியும் இதுவரை அவர்களுக்காக நிரந்தரக் குடியிருப்பு கட்டித்தரப்படவில்லை. ஒற்றை அறையாக இருப்பதால், பெண்கள் உடை மாற்ற அவதிப்படுகின்றனர். இவர்களுக்காக குடியிருப்புப் பகுதியில் மொத்தமாக குளியலறை மற்றும் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை பராமரிப்பதற்கு சுகாதாரப் பணியாளர்கள் எவருமில்லை. இவற்றுக்கான பிளாஸ்டிக் கதவுகள் காற்றில் பிய்த்து எறியப்பட்டதால் கதவுகள் இல்லா குளியலறை, கழிவறைகளாகிவிட்டன.

விலங்குகளால் அச்சம்: இப்பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. சிறுத்தை, காட்டெருமை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டமும் இருப்பதால் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் அதிகாலை நேரத்தில் உதகையில் இருந்தால்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால், இங்கிருந்து உதகைக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லை. இதனால்,

வசிக்குமிடத்தின் சுற்றுப்பகுதிகளில் குறைந்தபட்ச கூலியில் கிடைக்கும் வேலைவாய்ப்பையே நம்பியுள்ளனர். அதுவும் தொடர்ந்து கிடைக்காததால் வாழ்க்கையை நடத்த சிரமப்படுகின்றனர்.

ரேஷன் பொருட்களுக்குத் திண்டாட்டம்: இங்கு வசிப்பவர்கள் உதகை நகரைச் சுற்றி பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்பதால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதியில் நியாயவிலைக் கடைகள் உள்ளன.

கேத்தியிலிருந்து அங்கு சென்று நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவது இவர்களுக்கு இன்னமும் குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது. இவர்களில் உதகை, குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்களுமாக இருப்பதால் தங்கள் பிரச்னைக்காக யாரிடம் முறையிடுவது என்பதுகூட தெரியாத நிலையில் உள்ளனர்.

புதிய அரசை நம்பி... இவர்களுக்கு நிரந்தர வீடு கட்டுவதற்காக கோத்தகிரி, பைகமந்து, புது அல்லஞ்சி போன்ற பகுதிகளில் இடம் பார்க்கப்பட்டாலும் இத்திட்டத்திற்கான இடம் குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

அதேபோல, வீடு கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது. கேத்தி பகுதியில் கட்டப்பட்டுள்ள 50 தாற்காலிக குடியிருப்புகளில் சுமார் 300 பேர் வசித்து வருகின்றனர்.

இவர்களைத் தவிர 2009 புயலினால் வீடுகளை இழந்த நூற்றுக் கணக்கானோர் இன்னமும் மாற்று இடம் கிடைக்காமல் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.எனவே, உதகையில் நிலவும் கடினமான காலநிலை காரணமாக அவதிப்பட்டுவரும் இம் மக்களுக்கு உடனடியாக நிரந்தர வீடுகளை கட்டித்தர வேண்டுமென்பதே பிரதான கோரிக்கை.

புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தங்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுமென்ற நம்பிக்கையில் உள்ளனர் இம் மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.