/

திருப்பத்தூர்-ஊத்தங்கரை வரை மண்சாலையாக மாறிவரும் தார்சாலை!

அரூர்: திருப்பத்தூர்-ஊத்தங்கரை தார்சாலை முற்றிலும் சேதமடைந்து மண் சாலையாக மாறி வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.   அரூர்-திருப்பத்தூர் சாலை 60 கி.மீ. நீளம் கொண்டதாகும். அரூ

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:42 pm

சோம வள்ளியப்பன்

அரூர்: திருப்பத்தூர்-ஊத்தங்கரை தார்சாலை முற்றிலும் சேதமடைந்து மண் சாலையாக மாறி வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

  அரூர்-திருப்பத்தூர் சாலை 60 கி.மீ. நீளம் கொண்டதாகும். அரூரிலிருந்து காரப்பட்டு வரையுள்ள 48 கி.மீ. நீளம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளுக்கு உள்பட்டது. இப்பகுதியில் உள்ள சாலை ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ளது. ஆனால் கொரட்டி-திருப்பத்தூர் வரையிலான 12 கி.மீ. சாலை வேலூர் மாவட்ட எல்லைக்கு உள்பட்டது. தற்போது இச்சாலை குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.

 இச்சாலை வழியாகத்தான் சென்னை, திருப்பதி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோவை ஆகிய முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவருகின்றன. இவை நாள் தோறும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.

  திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி வரையிலான சாலையும் இதே நிலையில்தான் உள்ளது.

  வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சேலம், ஈரோடு, கோவை செல்லும் வாகனங்கள் அதிக அளவில் திருப்பத்தூர் வழியாகவே செல்கின்றன. காரணம் தருமபுரி வழியாகச் சென்றால் வழியில் வாணியம்பாடி, தொப்பூர், ஓமலூர் ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. அங்கு சுங்கம் செலுத்தியாக வேண்டும்.

இதனால் அந்த வாகனங்கள் திருப்பத்தூர் வழியாகவே செல்ல விரும்புகின்றன.

  இச்சாலையில் அதிக அளவில் வெளிமாநில லாரிகள், தனியார் செகுசு பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

சாலை அதிகம் பழுதடைவதற்கு இதுவே காரணம் என்கின்றன நெடுஞ்சாலைத்துறை அலுவலக வட்டாரங்கள்.

  இது குறித்து நெடுஞ்சாலைத்துறையின் திருப்பத்தூர் உதவி கோட்டப் பொறியாளர் கே.எஸ்.செந்தில்குமார் கூறியது:

 சாலைகள் மேம்பாடு திட்டம், இயக்கம் மற்றும் பாராமரிப்பின் கீழ் சேலம் அயோத்தியாப்பட்டணம் முதல் வாணியம்பாடி வரை சாலை சீரமைப்புப் பணிகளுக்காக 5 ஆண்டுகளுக்கு கடந்த 07.07.2010-ல் டெண்டர் விடப்பட்டுள்ளது.

 மேலும் ஓமலூர், திருச்செங்கோடு, மேச்சேரி, திருப்பத்தூர் சாலை உள்ளிட்ட தார் சாலைகளின் பராமரிப்புக்காக தமிழக நெடுஞ்சாலைத்துறையில்  45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளுக்கும் டெண்டர் விடப்பட்டிருப்பதால் வரும் அக்டோபர் மாதத்தில் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.