ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வாடகைதாரர்களிடம் கூடுதல் மின்கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்?

கோவை : வாடகைதாரர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் மின்கட்டணமாக கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன.  தொழில் நகரமான கோவைக்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தோரின் வருகை நாளுக்கு

News image
Updated On :28 டிசம்பர் 2023, 1:53 pm

சிவ. மணிகண்டன்

கோவை : வாடகைதாரர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் மின்கட்டணமாக கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன.

 தொழில் நகரமான கோவைக்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தோரின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவையை சுற்றியுள்ள என்ஜினியரிங் ஆலைகள், பஞ்சாலைகளில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

 இவர்கள் பெரும்பாலும் புறநகரப் பகுதிகளில் வாடகைக்கு குடியிருக்கின்றனர். இதேபோல கோவையை சுற்றியுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களில் பெரும் பகுதியினர் விடுதியில் தங்குவதைக் காட்டிலும் தனியாக வீடு எடுத்து தங்குவதையே விரும்புகின்றனர்.

 குடும்பங்களுக்கு வீடு கொடுப்பதைக் காட்டிலும் மாணவர்களுக்கு வாடகைக்கு விடுவதையே பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் விரும்புகின்றனர்.

 4 மாணவர் அல்லது மாணவியரை தங்க வைத்தால் தலா ரூ.1000 வீதம் வாடகையாக வசூலித்துவிடலாம். இதுபோக குடிநீர், மின்சாரம் எனத் தனியாக கட்டணம் பெறலாம் என்பதாலேயே கல்லூரி மாணவர்களுக்கு வீடு கொடுப்பதை விரும்புகின்றனர்.

 வீட்டு வாடகை ஒருபுறம் உயர்ந்து கொண்டே வந்தாலும், அதோடு மாதந்தோறும் மின்கட்டணமாக குறிப்பிட்ட தொகையை வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர்.

 இரு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மின்கட்டணம் செலுத்தினாலும், பெரும்பாலான இடங்களில் மாத வாடகையோடு, மின்கட்டணம், குடிநீர்க் கட்டணம் சேர்த்தே வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர்.

 இதுகுறித்து புகார் தெரிவித்தால் வீட்டைக் காலி செய்து விடுவார்கள் என்பதால் யாரும் மின்வாரியத்திடம் தெரிவிக்க முன்வருவதில்லை. இதையே வீட்டு உரிமையாளர்கள் தங்களுக்கு சாதமாக்கிக் கொள்கின்றனர்.

 கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நுகர்வோர் அமைப்பு கொடுத்த புகாரின்பேரில் பீளமேடு ஜெகநாத நகரில் மின்வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வாடகைதாரர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த வீட்டு உரிமையாளர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதித்தனர்.

 இதைத் தொடர்ந்து மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க மின்வாரியத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

 இரண்டு மாதங்களுக்கான மின்நுகர்வு 600 யூனிட்டுகளுக்கு மேல் இருக்கும்பட்சத்தில், வீடுகளுக்கு அதிகபட்ச மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.4.05 மட்டுமே. அதேபோல மின்நுகர்வு 600 யூனிட்டுக்கு குறைவாக இருந்தால் மின்நுகர்வைப் பொறுத்து, ரூ.2.20, ரூ.1.50, ரூ.0.85, ரூ.0.75 என கணக்கிடப்படுகிறது. வாடகைதாரர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்தால் ஒரு லட்சம் வரை அபராதமும், 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் விதிக்க முடியும் என மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.

 ஆனால், இதுபற்றி பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரியவராத காரணத்தால் யாரும் புகார் கொடுக்க முன்வருவதில்லை. வீட்டு உரிமையாளர்களும் அதிக கட்டணம் வசூலிப்பதை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

 புகார் கொடுப்பவர்களின் பெயர், விவரம் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும் என்றும், கூடுதலாக மின்கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்வாரியம் அறிவிக்க வேண்டும். அதேபோல, புகார் வரும் பகுதிகளில் ஒட்டுமொத்தமாக மின்வாரிய அதிகாரிகள் குழுவாக ஆய்வு மேற்கொண்டால் இப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்கிறார் கோயமுத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பின் செயலர் என்.லோகு.

 மின்வாரியம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு, தொடர் ஆய்வுகள் மேற்கொண்டால் கோவை போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர் அதிகம் வசிக்கும் நகரங்களில் மின்கட்டணம் கூடுதலாக வசூலிக்கும் பிரச்னை இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.