/

அங்கன்வாடி மையங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை!

அரூர் : அங்கன்வாடி மையங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், இங்கு அடிப்படை வசதிகள் சரிவர இல்லையென்றும் புகார்கள் எழுந்துள்ளன.  1,500 பேர் மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் தொடங்கப்ப

News image
Updated On :28 டிசம்பர் 2023, 1:53 pm

சோம வள்ளியப்பன்

அரூர் : அங்கன்வாடி மையங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், இங்கு அடிப்படை வசதிகள் சரிவர இல்லையென்றும் புகார்கள் எழுந்துள்ளன.

 1,500 பேர் மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் தொடங்கப்படும் அங்கன்வாடி மையங்கள் ஒவ்வொன்றிலும் தலா ஒரு பணியாளர், ஒரு உதவியாளர் நியமிக்கப்படுகின்றனர்.

 மக்கள்தொகை கணக்கெடுப்பு, குழந்தைகளின் முன்பருவக் கல்வி, கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்களுக்கு இணை உணவு வழங்குதல், குழந்தை பிறப்புகளைப் பதிவு செய்தல், வளர் இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கல்வி உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

 8 ஒன்றியங்களுக்கு மூன்று திட்ட அலுவலர்கள்!

 தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் தமிழக அரசின் சமூக நலத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்கள் உள்ளன. ஆனால், 3 ஒன்றியங்களில் மட்டுமே திட்ட அலுவலர்கள் உள்ளனர். ஒன்றிய அளவிலான அலுவலரே மாவட்ட திட்ட அலுவலராகப் பொறுப்பு வகித்து வருகிறாராம்.

 பெண்கள் பணியாற்றும் இந்தத் துறையில் மாவட்ட, ஒன்றிய அலுவலர்கள், கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட அலுவலர் பணியிடங்களும் காலியாக உள்ளதால், ஆய்வுகள் சரிவர நடைபெறுவதில்லையென்றும் கூறப்படுகிறது.

 4 மையங்களுக்கு ஒரே பணியாளர்!

 மாவட்டத்தில் மொத்தம் 1,305 மையங்கள் உள்ளன. இங்கு 50 சதவீதம் காலிப் பணியிடங்கள் இருந்தும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நிரப்படவில்லையாம். இதனால் ஒருவரே 4 மையங்களை கூடுதலாகப் பார்க்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தனர்.

 கால்நடைகளுக்கு தீவணமாகும் ஊட்டச்சத்துமாவு?

 குழந்தைகள் நல மையத்தில், குழந்தைகள், பாலூட்டும் மற்றும் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் இணை உணவுகள், முட்டைகள் சரியான முறையில் கிடைப்பதில்லையாம். மாறாக அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாத இடங்களில் ஊட்டச்சத்துமாவு பாக்கெட்டுகள் கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

 அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்!

 கிராமங்களில் அரசுக் கட்டடங்கள் பல இடங்களில் பயன்பாடின்றி பாழாகும் நிலையில், அங்கன்வாடி மையங்களுக்கு போதுமான கட்டட வசதிகள், குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் உள்ளதாகவும் புகார்கள் உள்ளன.

 இதுகுறித்து அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாநில முன்னாள் பொதுச்செயலர் பி.திலகமணி, மாவட்டத் தலைவி எம்.சந்திரா ஆகியோர் கூறியது:

 அங்கன்வாடி மையங்களில் சமையல் செய்வதற்கு தேவையான விறகு, காய்கறிகள், மளிகை பொருள்கள் வாங்குவதற்காக குழந்தைகளுக்கு தலா 56.50 காசுகள் வழங்கப்படுகிறது. கடுமையான விலைவாசி உயர்வு இருப்பதால் இத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். 20 ஆண்டுகளாகப் பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றுவோரைப் பணிநிரந்தரம் செய்து, பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.