நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மண் கொள்ளையால் மெல்ல மறைகிறது ஒரு மலை!

திருநெல்வேலி : தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக இயற்கை வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருவது ஒன்றும் புதிய செய்தி இல்லைதான். ஆனாலும், ஒரு மலையே நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடிக்கப்பட்டு வருவதும், அதை அதிக

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:57 pm

ப. இசக்கி

திருநெல்வேலி : தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக இயற்கை வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருவது ஒன்றும் புதிய செய்தி இல்லைதான். ஆனாலும், ஒரு மலையே நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடிக்கப்பட்டு வருவதும், அதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் தொடங்கி கிழக்கே முத்தூர் வரையில் 7 மலைக் குன்றுகள் வரிசையாக உள்ளன. இவற்றை சிவந்திபட்டி மலை என கூறுவர். இந்த மலையின் வடக்குப் பக்கத்தில் ஒரு பகுதி திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்குள்ளும், தெற்குப் பகுதி ரெட்டியார்பட்டி கிராம ஊராட்சி எல்லைக்குள்ளும் உள்ளது. கிழக்கே செல்ல செல்ல அவை அருகில் உள்ள ஊராட்சி பகுதிகளின் எல்லைகளுக்குள் உள்ளன.

இந்த மலையின் வடக்குப் பகுதியில் திருமால்நகர், ராணி நகர், ராமலிங்கநகர் உள்ளிட்ட விரிவாக்கப் பகுதிகளில் சுமார் 500 வீடுகள் உள்ளன. மேலும், மலையின் மேற்குப் பக்கத்தில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் தலா ரூ. 2.20 லட்சம் செலவில் 306 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இம் மாவட்டத்தில் நீர்வழி புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியுள்ளவர்களை அங்கிருந்து அகற்றி இந்த வீடுகளில் குடியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவது மற்றும் இரண்டாவது குன்றுகளுக்கு இடையே தனியார் பள்ளி ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஏராளமான வீட்டு மனைகளும் கட்டுமானப் பணிகளுக்குத் தயாராக உள்ளன.

இத்தகைய மலைப் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரவும், பகலும் பெரிய பெரிய குழிகளை வெட்டி சரளை மண்ணை லாரிகளில் அள்ளிச் செல்கின்றனர். திருநெல்வேலி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தாழையூத்தில் தொடங்கி கே.டி.சி. நகர் வழியாக செல்லும் புதிய நான்கு வழிச்சாலையானது இங்குள்ள ஐந்தாவது மலைக் குன்றை கடந்து திருவனந்தபுரம் சாலையை சென்றடைகிறது. அந்த சாலைப் பணிகளுக்காக சிவந்திப்பட்டி மலைக் குன்றுகளை வெட்டி மண்ணை கொண்டு சென்று பயன்படுத்தி வந்தனர். அதோடு, வேறு சில ஆளுங்கட்சி ஆதரவு பெற்ற நபர்களும் தங்களுக்கு தேவையான அளவுக்கு லாரிகளில் இங்கிருந்து மண்ணை அள்ளிச் சென்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இவ்வாறு அந்த மலைப் பகுதியில் மண் வெட்டி அள்ளப்பட்ட இடம் சுமார் 100 ஏக்கர் வரை இருக்கும்.

சாதாரணமாக ஒரு கிராமத்து நபர் தனது சொந்த உபயோகத்திற்கு ஒரு வண்டி மண்ணை அள்ளிச் சென்றால் ஓடிச் சென்று பிடித்து அபராதம் போட்டு வசூல் செய்யும் வருவாய்த்துறையும் சரி, கனிம வளத்துறையும் சரி கடந்த 2 ஆண்டுகளாக இந்த மண் கொள்ளையை தடுத்ததாகத் தெரியவில்லை.

""நான்கு வழிச் சாலைப் பணிக்காக அரியகுளம், கீழநத்தம், ராஜகோபாலபுரம், உத்தமபாண்டியன்குளம், பரப்பகுளம் ஆகிய இடங்களில் மண் எடுத்துக் கொள்ள ஒப்பந்தக்காரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த எல்லைகளுக்குள் இந்த மலைப் பகுதி வருகிறதா என்பதை பார்க்க வேண்டும்'' என்றார் உதவி இயக்குநர் (கனிம வளம்) மோகன சுந்தரம். மேலும், இரவு நேர ரோந்து செல்வோரை இனிமேல் அந்த மலைப் பகுதிக்கும் சென்று வர உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனவே, இதுவரையில் கண்காணிப்பு இல்லை என்பது தெளிவாகிறது.

முன்னர் குடியிருப்புகளுக்கு சற்று தொலைவில் மண் அள்ளப்பட்டதால் எவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நாளடைவில் குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளிலும், வீட்டுமனைகளுக்கு அருகிலேயும் மண் அள்ளப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் வருவாய்த் துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.

""இங்கே இருந்த 7 குன்றுகளில் குழிவெட்டி மண் அள்ளப்பட்டதால் இப்போது 2 குன்றுகள் காலியாகி விட்டன. ஐந்தாவது குன்றை குடைந்து சாலை அமைத்து விட்டனர். எஞ்சி இருப்பது நான்கு குன்றுகள் மட்டுமே. இப்படியே மண்ணை அள்ளிக் கொண்டு போனால் அடுத்த சில ஆண்டுகளில் நான்கு குன்றுகளும் காணாமல் போய்விடும்'' என்றார் அந்தப் பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி ஒருவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.