ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகிறது குற்றாலம்

தென்காசி : குற்றாலத்தில் விரைவில் சீசன் துவங்க உள்ள நிலையில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும்விதமாக புதிதாக பூங்காக்கள், நடைபாதைகள், புதுப்பிக்கப்படும் படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வரு

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:56 pm

பா.​ பிரகாஷ்

தென்காசி : குற்றாலத்தில் விரைவில் சீசன் துவங்க உள்ள நிலையில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும்விதமாக புதிதாக பூங்காக்கள், நடைபாதைகள், புதுப்பிக்கப்படும் படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகம் முழுவதும் அக்னி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், தென்னகத்தின் "ஸ்பா' என்றழைக்கப்படும் குற்றாலத்தில் விரைவில் சீசன் துவங்கும் சூழ்நிலை காணப்படுகிறது. கடந்த இரு தினங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்றுடன் தட்பவெப்பநிலை மாறி வருகிறது.

விரைவில் சீசன் துவங்கும் நிலையில், குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை இனிதே வரவேற்கும் வகையில், சுமார் ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன.

ஆண்டுதோறும் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் முறையே 16 லட்சம், 18 லட்சம் மற்றும் 20 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதுதவிர, கடந்த ஆண்டு சபரிமலை சீசனின்போதும் வழக்கத்தைவிட அதிக அளவில் பக்தர்கள் வந்து சென்றனர்.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வீ.கருப்பசாமிபாண்டியன் மற்றும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் ஆகியோரின் முயற்சியால் முதன்முறையாக குற்றாலத்தில் மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.4.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

குற்றாலத்தில் ஏற்கெனவே விஸ்வநாதராவ் பூங்கா, பேரருவிப் பூங்கா மற்றும் ஐந்தருவியில் ஒரு பூங்கா உள்ளிட்ட 6 பூங்காக்கள் உள்ளன. இதுதவிர, இந்த ஆண்டில் திருவள்ளுவர்நகர், வைரம்ஸ்நகர் மற்றும் ஐந்தருவியில் ஒருவழிப்பாதை செல்லும் வழியில் ஒரு மினி பூங்கா அமைக்கப்படுகிறது.

ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் பேருந்து நிலையம் அருகே மீன் அருங்காட்சியகம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.

குற்றாலத்தில் உள்ள பழைய பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் முழுவதும் மாற்றப்பட்டு புதிய உபகரணங்கள் அமைக்கப்படுகின்றன. புதிதாக அமைக்கப்படும் பூங்காக்கள் உள்ளிட்ட 9 பூங்காக்களையும் அழகுபடுத்த ரூ.1.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

குற்றாலம் - ஐந்தருவிச் சாலையில் அமைந்துள்ள படகு குழாமில் ரூ.54 லட்சத்தில் குளத்தின் கரைகள் உயர்த்தப்பட்டு, கரையில் நடைபாதை மற்றும் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. குற்றாலம் முழுவதும் இரவிலும் பகல்போலக் காட்சியளிக்கும் வகையில் பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி விலக்கு ஆகிய இடங்கள் உள்பட 8 இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மற்ற சுற்றுலா தலங்களில் உள்ளதுபோல நவீன கழிப்பறைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்கு வசதியாக ஐந்தருவி ஏற்றம் கூத்தர்கோவில் முதல் கலைவாணர் அரங்கின் பின்புறம் வரை டைல்ஸ் பதிக்கப்பட்டு புதிய நடைபாதை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

சுற்றுலா தகவல் மையம் மற்றும் குற்றாலம் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்கள், அவற்றுக்குச் செல்லும் வழி, எத்தனை கிலோமீட்டர் தொலைவு என்பது குறித்த தகவல்கள் அடங்கிய போர்டுகளும் நகரின் 11 இடங்களில் வைக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.