/

பணி நீக்கம் செய்யப்பட்ட தாற்காலிக தட்டச்சுப் பணியாளர்கள் பரிதவிப்பு

அரூர்: தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறையில் பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தாற்காலிக தட்டச்சுப் பணியாளர்கள் தங்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.   த

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:21 pm

சோம வள்ளியப்பன்

அரூர்: தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறையில் பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தாற்காலிக தட்டச்சுப் பணியாளர்கள் தங்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

  தமிழகத்தில் பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறையில் 2006-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் பணிக்காக, வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலகம், சிறப்பு ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரின் அலுவலகங்களிலும் காலியாக இருந்த தட்டச்சர் பணியிடங்களில் தமிழக அரசு (அரசு ஆணை எண்: 242, வருவாய்பணி 6 (2) துறை நாள்: 17.3.2006) 52 பேரை பணியில் அமர்த்தியது.

  காஞ்சிபுரம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மட்டும் 52 பணியாளர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 1:20 என்ற அடிப்படையில் நேர்காணல், கல்வித் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.

  தட்டச்சர்களை பணியமர்த்தும் போது 3 மாத காலப் பணி, ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியம் என அரசு அறிவித்தது. பின்னர் வருவாய்த்துறை அலுவலகங்களில் பணிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டனர். இறுதியாக ரூ.5 ஆயிரமும் தொகுப்பூதியமாக பெற்றனர். 6-வது ஊதியக்குழு பரிந்துரையின் படி முதல்கட்டமாக ரூ.29 ஆயிரம் வரை நிலுவை ஊதியமும் பெற்றுள்ளனர்.

 இதையடுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் பணியிடங்களை நியமிக்கும் போதும், காலியிட மதிப்பீட்டை தேர்வாணையத்துக்கு அனுப்பும் போதும் தற்போது பணிபுரியும் தாற்காலிக பணியாளர்களின் பணியை முறைப்படுத்த தமிழக அரசால் கருத்தில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது  

  ஆனால் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதால், காலிப்பணியிடங்கள் தற்போது இல்லை என தெரிவித்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 27.4.2010-ல் இவர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

 இது குறித்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொகுப்பூதிய தட்டச்சர் எம்.டேவிட் கிறிஸ்டோபர் கூறியது:

 தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் குறைந்த ஊதியத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக, மிகவும் பின்தங்கிய பகுதிகளான காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 52 தட்டச்சர்கள் பணிபுரிந்தோம். இதில் பெரும்பாலானோர் பெண்கள்.

 அரசுப் பணியில் சேர்ந்த நாங்கள், மீண்டும் வேலையை இழக்க மாட்டோம் என்ற நம்பிக்கையில் இரவு, பகல் பாராமல் மிகுந்த பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் பணிபுரிந்தோம். இப்பணியாளர்களில் பலர் 40 வயதை கடந்தவர்கள். ஏற்கனவே தட்டச்சராக பணிபுரிந்த தனியார் நிறுவனங்களிலும் நாங்கள் மீண்டும் சேர முடியாது.

  தமிழக முதல்வர் கருணாநிதி ஆட்சியில் ஒருவரைக் கூட பணியில் இருந்து வெளியே அனுப்பமாட்டோம் என வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். எனவே, தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் முதுநிலை தட்டச்சு, கணினியை இயக்கும் தகுதி உள்ள எங்களுக்கு மீண்டும் பணி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.