மயில்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
மயிலாடுதுறை : இந்தியாவின் தேசியப் பறவையான மயில்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகம், கேரளம், கர்நாடகத்தின் மைசூ


மயிலாடுதுறை : இந்தியாவின் தேசியப் பறவையான மயில்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகம், கேரளம், கர்நாடகத்தின் மைசூர் பகுதியிலும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் மயில்கள் அதிகளவில் உள்ளன. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை மயில்களுக்கு பெயர் பெற்றது. வன விலங்குகள், பறவைகள் சரணாலயங்களிலும், கோயில்களிலும் மயில்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
மயில் தோகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மயில் தோகையில் தயாரிக்கப்படும் எண்ணெய் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இவ்வளவு சிறப்பு மிக்க பறவையினமான மயில் நமது நாட்டின் தேசியப் பறவையாக 31.1.1963-ல் அறிவிக்கப்பட்டது.
மயில்கள் காடுகள் நிறைந்த வனப் பகுதியில்தான் கூட்டமாக வாழ்கின்றன. ஆனால், காடுகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், உணவு தேடி மயில்கள் இடம் பெயர்ந்து நகரப் பகுதிகளுக்குள் சுற்றித் திரிவது அன்றாட நிகழ்வாகி வருகிறது.
1972-ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், தேசியப் பறவையான மயிலை கொன்றால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும், புலிகளுக்கு இணையாக மயில்களைவும் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், மயில்களைப் பாதுகாக்க வனத் துறையினரும், பொதுமக்களும் எந்த ஆர்வமும் காட்டுவதில்லை. மயிலினத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளும் எந்த ஒரு சிறப்புத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மயில்கள் காணப்படுகின்றன. மயிலாடுதுறை, சீர்காழி வட்டத்திற்குள்பட்ட கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் மயில்களின் எண்ணிக்கை சமீப காலமாக கணிசமாக அதிகரித்துள்ளது.
இதுபோல, தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவிலை அடுத்த மேலபல்லக்கொல்லை, கீழபல்லக்கொல்லை, புஞ்சை உள்ளிட்ட கிராமங்களிலும் சாலைகளில் அதிகளவில் மயில்கள் சுற்றித் திரிகின்றன. இவை விளைநிலங்களில் புகுந்து நெல் கதிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
விவசாயிகள், எலிகளிடமிருந்து நெல் பயிரைக் காப்பாற்ற வயல்கள் மற்றும் வரப்புகளில் குருணை போன்ற உயிர் கொல்லி மருந்தை அரிசி, நெல் போன்றவற்றில் கலந்து வைக்கின்றனர். இதை உள்கொள்ளும் மயில்கள் இறக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன.
அண்மையில் செம்பனார்கோவிலை அடுத்த மேலபல்லக்கொல்லை பகுதியில் வயலில் இருந்த விஷம் கலந்த அரிசியை உள்கொண்ட 2 மயில்கள் இறந்தன.
இறைச்சிக்காக மயில்களை சமூக விரோதிகள் வேட்டையாடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சாலையோரங்களில் சுற்றித் திரியும் மயில்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது எனவும், இவற்றைக் காப்பாற்ற வனத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
தேசியப் பறவையான மயிலைப் பாதுகாப்பது முக்கியக் கடமையாகும். ஆண்டுதோறும் தேசிய விலங்கான புலிகள் மற்றும் யானைகளைக் கணக்கெடுக்கும் வனத் துறையினர் மயில்களின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்க வேண்டும் என்பதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கை.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மயில் வேட்டையைத் தடுக்க எடுத்துள்ள முடிவின்படி, மயில் தோகையில் தயாரிக்கப்படும் கலைப் பொருள்களை விற்பனை செய்வதைத் தடுக்கவும், கடுமையான விதிமுறைகளை ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்ட வேண்டும். மயில்களைப் பாதுகாக்க வனத் துறையினர் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
அதோடு புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். மயில்கள் அதிகமாக வாழும் இடங்களை பறவைகள் சரணாலயமாகவும் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தேசியப் பறவையான மயிலை நமது இளைய சமுதாயத்தினருக்கு படங்களில் மட்டுமே காட்ட முடியும் எனவும் அச்சம் தெரிவிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...