நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மின் இணைப்புக்கு காத்திருக்கும் 30 ஆயிரம் விவசாயிகள்!

சென்னை: தமிழக அரசு அறிவிப்பின்படி டிசம்பர் 31-ம் தேதிக்குள் முதல்கட்டமாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு தரப்பட வேண்டும்; ஆனால், டிசம்பர் 31-ம் தேதிக்கு இன்னும் 14 நாள்களே உள்ள நிலையில் 20 ஆயிரம

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:34 pm

ஆர். ஆதித்தன்

சென்னை: தமிழக அரசு அறிவிப்பின்படி டிசம்பர் 31-ம் தேதிக்குள் முதல்கட்டமாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு தரப்பட வேண்டும்; ஆனால், டிசம்பர் 31-ம் தேதிக்கு இன்னும் 14 நாள்களே உள்ள நிலையில் 20 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

 எஞ்சியுள்ள 30 ஆயிரம் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எஞ்சியுள்ளவர்களுக்கு மின் இணைப்புத் தர முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.

 தமிழகத்தில் மின் இணைப்பு கோரி 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று கடந்த அக்டோபரில்  தமிழக அரசு அறிவித்தது.

 முதல்கட்டமாக டிசம்பர் 31-ம் தேதிக்குள் 50 ஆயிரம் இணைப்புகளும், 2011 மார்ச் 31-ம் தேதிக்குள் மேலும் 50 ஆயிரம் இணைப்புகளும், 2011 ஜூன் 30-ம் தேதிக்குள் 50 ஆயிரம் இணைப்புகளும், 2011 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் 50 ஆயிரம் இணைப்புகள் என மொத்தம் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 தமிழக அரசின் சார்பில் ஆண்டுக்கு 40 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே 2011 செப்டம்பருக்குள் 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

  ஏற்கெனவே தமிழகம் முழுவதும் சிறு, குறு விவசாயிகள் 14 லட்சம் பேர், பெரிய விவசாயிகள் 5 லட்சம் பேர் என மொத்தம் 19 லட்சம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 இது தொடர்பாக, மின்வாரிய அதிகாரிகள் கூறியது:

 அரசு அறிவித்தபடி மிக வேகமாக விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலில் மின் இணைப்புகள் வழங்கும் பணியில் மந்த நிலை காணப்பட்டது. இப்போது, மிக வேகமாக இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மின் கம்பங்கள் அருகில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. மின் கம்பங்கள் இல்லாத இடங்களுக்கு, மின்கம்பங்கள் உள்ளிட்ட உபகரணங்களை அமைத்து இணைப்பு வழங்கி வருகிறோம். இதுவரையில் சுமார் 20

ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கி உள்ளோம்.

 மேலும், 30 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். இன்னும்

14 நாள்களே உள்ள நிலையில் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ள மற்ற விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்குவதில் உறுதியாக உள்ளோம்.

 இதில் விவசாயிகள் மின் மோட்டார் பெறுதல், வருவாய்த்துறையினரிடம் விண்ணப்பம் செய்தல் போன்ற காரணங்களால் சிறிது காலதாமதம் ஏற்படுகிறது என்று தெரிவித்தனர்.

2 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை: தமிழகத்தின் மின் தேவை 12 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. ஆனால் மின்  விநியோகம் 10 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இதனால் 2 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

 ஒரு பக்கம் மின் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், இலவச மின் இணைப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்புக்கு ஒரு பக்கம் வரவேற்பும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

அவசரம் வேண்டாம்- நிதானம் தேவை:

 இதுகுறித்து, தமிழ்நாடு காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரங்கநாதன் கூறியது:

 தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அரசு கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

  ஏற்கெனவே சென்னை நகரை தவிர்த்து மன்னார்குடி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை நிலவுகிறது குறிப்பிடத்தக்கது. இதுதவிர மாநிலத்தில் மேலும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மின் இணைப்பு கோரி காத்திருக்கின்றனர். எனவே, இலவச மின் இணைப்பு விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

 அடுத்தது கோடை அல்லது குறுவை சாகுபடிதான் நடக்கும். எனவே விவசாயிகளின் தேவையை அறிந்து ஆய்வு செய்து மின் இணைப்பு வழங்க வேண்டும். இதில் அவசரம் காண்பிக்காமல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.