காரைக்கால் ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படுமா?
காரைக்கால் : காரைக்கால் பகுதியை மேம்படுத்த புதுவை அரசு திட்டமிட்டுள்ள 3 ரயில் பாதை திட்டங்களும் நிறைவேறுவதற்கான சாதக சூழல்கள் உள்ளதால் அந்தத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என காரைக்கால்


என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி
காரைக்கால் : காரைக்கால் பகுதியை மேம்படுத்த புதுவை அரசு திட்டமிட்டுள்ள 3 ரயில் பாதை திட்டங்களும் நிறைவேறுவதற்கான சாதக சூழல்கள் உள்ளதால் அந்தத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என காரைக்கால் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரைக்காலில் 1982 வரை ரயில் போக்குவரத்து இருந்தது. அதன் பின்னர் நிறுத்தப்பட்டுவிட்டது. இந் நிலையில், காரைக்காலை சுற்றுலா மையமாக மாற்றும் அரசின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இப்போது ரயில் போக்குவரத்துக்கும் ரயில்வே திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, ஏற்கெனவே 90 கோடியில் மேற்கொள்ளப்பட்டுவரும் நாகூர் - காரைக்கால் புதிய அகல ரயில் பாதைத் திட்டம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நிறைவுறும் நிலையில் உள்ளது. தவிர, மேலும் 3 புதிய ரயில் திட்டங்களை புதுவை அரசின் திட்டத் துறை தயாரித்து ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது.
1. காரைக்கால் - திருநள்ளாறு - பேரளம் ரயில் பாதைத் திட்டம். 2. காரைக்கால் - மயிலாடுதுறை - கங்கைகொண்டசோழபுரம் - ஜெயங்கொண்டம் - அரியலூர் - பெரம்பலூர் - ஆத்தூர் - சேலம் ரயில் பாதைத் திட்டம். 3. காரைக்கால் - திருநள்ளாறு - கோட்டுச்சேரி - தரங்கம்பாடி - பொறையாறு - திருக்கடையூர் - செம்பனார்கோவில் - மயிலாடுதுறை ரயில் பாதைத் திட்டம்.
இதில் காரைக்கால் - திருக்கடையூர் - மயிலாடுதுறை திட்டம், தஞ்சாவூர் - அரியலூர் திட்டம் ஆகியவற்றை காரைக்கால் துறைமுக நிறுவனமான "மார்க்' நேரடியாக முதலீடு செய்து தொடங்க முன்வந்துள்ளதாக மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழநிமாணிக்கம் அண்மையில் தெரிவித்தார்.
திருக்கடையூர் பகுதியில் அமையவுள்ள இரு மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டுசெல்லவும் அரியலூர் பகுதியிலிருந்து சிமென்ட்டை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்த ரயில் திட்டங்கள் பெரிய அளவில் உதவும்.
இந்தப் பின்னணியிலேயே துறைமுக நிர்வாகம் இத்திட்டத்தில் நிதி முதலீடு செய்கிறது என்று கூறப்படுகிறது. ரயில்வே அமைச்சகமும் இத்திட்டத்துக்கு இசைவு தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில், 3-வது ரயில் திட்டமான காரைக்கால் துறைமுகம் - சேலம் ரயில் பாதைத் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள், வருவாய் ஆகியவை குறித்து புதுவை அரசின் திட்டத் துறை அதற்கான ரயில்வே அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த ரயில் பாதையானது சுமார் 200 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. கிலோ மீட்டருக்கு 5 கோடி வீதம் 1,000 கோடி இத்திட்டத்துக்குச் செலவாகும். அணைக்கரை அருகே உள்ள கொள்ளிடம் ரயில்வே பாலம் அமைக்க 80 கோடி தேவைப்படும். ஆக, 1,080 கோடி இத்திட்டத்துக்குத் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
சேலத்தில் இரும்பு, கண்ணாடி, ஜவுளி, அலுமினியம் உற்பத்தி; பெரம்பலூரில் அமைந்துவரும் புதிய தொழில்சாலைகள், சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் வருகை; அரியலூரில் உள்ள சிமென்ட் தொழில்சாலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் திட்டம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்து மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
குறிப்பாக, அரியலூர் பகுதியிலுள்ள பெரிய 8 சிமென்ட் தொழில்சாலைகளில் இருந்து மட்டும் மாதம் 9.91 லட்சம் டன்கள் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. இப் பகுதிக்கு புதிய ரயில் பாதை அமைக்கும்போது ஆண்டுக்கு ரயில்வே நிர்வாகத்துக்கு 216 கோடி வீதம் 5 ஆண்டில் திட்டத்துக்கு முதலீடு செய்த ரூ.1,080 கோடி லாபம் கிடைத்துவிடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள பெரும் தொழில் நிறுவனங்களில் இருந்து சென்னை துறைமுகத்துக்குச் செல்ல 300 கி.மீ. தொலைவும் தூத்துக்குடி துறைமுகத்துக்குச் செல்ல 400 கி.மீ. தொலைவும் பயணிக்க வேண்டியுள்ளது. ஆனால், காரைக்கால் துறைமுகம் மையமாக உள்ளதால், பயண நேரம் குறைவாகும். செலவுகளும் குறையும்.
இந்தப் பின்னணிகளின் அடிப்படையில், காரைக்கால் - சேலம் ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை திட்டத் துறை சுட்டிக் காட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. ரயில்வே நிர்வாகமும் இசைவு அளிக்கும் என நம்பப்படுகிறது. காரைக்கால் சார்ந்து அரசு திட்டமிட்டுள்ள 3 ரயில் பாதை திட்டங்களும் நிறைவேறும் சூழலில் காரைக்கால் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெறும் என்பதில் ஐயமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...