ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மீனவர்களின் பாதுகாப்பு

வேதாரண்யம் : இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடரும் நிலையில், பாதுகாப்பு குறைந்து வரும் கடல் பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களிடையே அச்ச உணர்வு மேலோங்கி வருகிறது. த

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:57 pm

கே.பி. அம்​பி​கா​பதி

வேதாரண்யம் : இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடரும் நிலையில், பாதுகாப்பு குறைந்து வரும் கடல் பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களிடையே அச்ச உணர்வு மேலோங்கி வருகிறது.

தமிழகத்தின் கிழக்கு கடலோரத்தில் நாகப்பட்டினம், திருமுல்லைவாசல், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, சேதுபாவாசத்திரம், ஜகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் போன்ற பகுதிகள் முக்கிய மீன்பிடித் தளங்களாக உள்ளன.

மீன் இனப்பெருக்க பகுதி: ராமேசுவரம்- பாம்பன் தீவுகளுக்கு வடக்குப் பகுதி தொடங்கி கோடியக்கரை வரையுள்ள பாக்ஜலசந்தி கடல் ஆழம் குறைந்த பகுதியாக உள்ளது. கிழக்குப் பகுதியாக உள்ள முனைக்கடல் ஆழமான நீரோட்ட நிலையில் காணப்படுகிறது.

இதைச் சார்ந்துள்ள கடல் பரப்பு பகுதிதான் மீன் இனப் பெருக்க (பெட்ரோ பாங்க்) பகுதியாக அரசால் அடையாளம் காணப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரப்பு கோடியக்கரையிலிருந்து தென் கிழக்கே அமைந்துள்ளது.

இனப்பெருக்க காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆழ்கடலிலிருந்து இந்தப் பகுதிக்கு அதிக அளவிலான மீன்கள் வருவது வழக்கம்.

தமிழக கடல் பகுதிக்குள் அதிகரித்து வரும் கடல் சூழல் மாறுபாடு, ரசாயனக் கழிவுகள் கலப்பு உள்ளிட்ட பல காரணிகளால் கரையோர மீன் வளம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

இதனால், ஆழ்கடலுக்கு செல்ல கிழக்கு கடலோரப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு திசைக்குச் சென்று வலை விரிக்கின்றனர்.

தொடர் தாக்குதல்: கடந்த பல ஆண்டுகளாக இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பின்னரும் தாக்குதல்களை நிறுத்த உரிய நடவடிக்கை இல்லை. இப்போதுவரை தாக்குதல் தொடர்ந்து வருகிறது. அதனை எதிர்கொள்ள முடியாமல் மீனவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

மீனவருக்கு உதவாத பாதுகாப்பு:  மீனவர்கள் அதிகமாக தாக்குதலுக்குள்ளாகும் பகுதிக்கு அருகே உள்ள கோடியக்கரை பகுதியில் இரண்டு இடங்களில் இந்திய கடற்படையினரின் முகாமும், ரேடார் கண்காணிப்புடன் கூடிய விமானப் படையினர் முகாமும் உள்ளது. இதுதவிர, கடலோரக் காவல் குழுமம், கடலோரக் காவல் நிலையம் என பல அடுக்கு பாதுகாப்பு வட்டாரங்கள் செயல்படுகின்றன.

பாதுகாப்பு வட்டாரங்கள் முகாம் அமைத்துக் கொள்வதற்கான இடவசதி உள்ளிட்ட தேவைகளை அளிப்பதில் பல இடங்களில் மீனவர்கள் உதவியாக இருந்து வருகின்றனர்.   உதாரணமாக, ஆறுகாட்டுத்துறை மீனவர்களுக்கான புயல் பாதுகாப்பு கட்டடத்தில்தான் (1991, ஆக. 15 முதல்) இந்திய கடற்படை முகாம் செயல்படுகிறது. வாய்மேடு புயல் பாதுகாப்பு கட்டடம் தற்போது கடலோரக் காவல் நிலைய காவலர் முகாமாகச் செயல்படுகிறது.

ஊடுருவலைத் தடுப்பதில் மட்டுமே இந்த அமைப்புகள் அதிக ஈடுபாடு காட்டுவதாகக் கூறும் மீனவர்கள், தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில்லை என்று கூறுகின்றனர்.

இதுகுறித்து ஆறுகாட்டுத்துறை மீனவ கிராம நாட்டார் பி.எஸ். சேதுபதி கூறியது:

ஊடுருவல் குறித்து போலீஸôருக்கு மீனவர்களே அதிக தகவல்களைத் தருகின்றனர். இந்திய கடற்படையின் ரோந்துப் பணிகள் மீனவர்களுக்கு பயன் தருவதில்லை. அண்மையில் வெள்ளப்பள்ளம் மீனவர் செல்லப்பன் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு பலியானார். இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது என்றார் அவர்.

தீர்வு என்ன? மத்திய அரசு இலங்கையை எச்சரிக்காதவரை எந்தப் போராட்டத்தாலும் இதற்குத் தீர்வு காண முடியாது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கச்சத்தீவை மீட்கவும், சர்வதேச கடல் பகுதியில் பாகுபாடு இல்லாமல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதுடன், மீனவர்களின் பாதுகாப்புக்காக தனித்த ரோந்து பணி உடனடி அவசியமாகக் கருதப்படுகிறது.

அத்துடன், பிரச்னைக்கு தீர்வு காண உயர்நிலைக்  கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்தவும், மத்திய அமைச்சரவையில் மீனவர், மீன் வளத்துக்காக தனித் துறையை ஏற்படுத்தவும் வகை செய்தால், அது எதிர்காலத்தில் கடலோரப் பகுதியில் நாட்டின் பாதுகாப்பு அரணாகத் திகழும் மீனவர்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் உதவும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.