காலாவதி உணவுப் பொருள் விற்பனை தடுக்கப்படுமா?
சென்னை, ஏப்.1: காலாவதியான மருந்துகள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மறுவிற்பனை செய்த விவகாரம் இன்னும் ஓயவில்லை. அதேவேளையில், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் பல சரக்கு கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் அடைக்கப


சென்னை, ஏப்.1: காலாவதியான மருந்துகள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மறுவிற்பனை செய்த விவகாரம் இன்னும் ஓயவில்லை. அதேவேளையில், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் பல சரக்கு கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் அடைக்கப்பட்ட (பேக்கேஜ்களில்) விற்பனை செய்வது ஓசையில்லாமல் நடந்து வருகிறது.
இம்மாதிரி முறையற்ற வணிக முறையில் அடைக்கப்பட்ட பேக்கேஜ்களில் விற்று வரும் கடைகளை சோதனை நடத்தி, சட்டத்தின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
தண்ணீர் கேன்கள், பால் போன்ற பொருள்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி என எந்த விவரமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
காலாவதியான மருந்து பொருள்களில் வீரியம் தான் குறைகிறது; ஆனால் காலாவதியான உணவுப் பொருள்களை சாப்பிடுவதன் மூலம் வாந்தி}பேதியும், உடல்நிலையும் கெட்டுப் போக வழி செய்கிறது என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் ஏராளமான சூப்பர் மார்க்கெட் அங்காடிகளும், ஆயிரக்கணக்கான பல சரக்கு கடைகளிலும் காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்வது அமோகமாக நடந்து வருகிறது என நுகர்வோர் ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் துணைத் தலைவர் டி.சடகோபன் கூறியது:
சூப்பர் மார்க்கெட்கள், பல சரக்கு கடைகளிலும் முறையற்ற வணிக முறையில் அடைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் விற்கப்பட்டு வருகின்றன. இந்த வணிக முறையில் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்கின்றனர்.
எளிதில் அழுகும் ரொட்டித் துண்டுகளை, காலாவதியான பிறகு விற்பனை செய்யக் கூடாது. இவை சில்லறை விற்பனை கடைகாரர்களிடம் ரிட்டர்ன் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதனால் அவர்கள் அதை காலாவதியாகியும் விற்பனை செய்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஹார்லிக்ஸ், பூஸ்ட், அமுல் போன்ற பால் உணவுப் பொருள்களை வாங்கும்போது கவனம் வேண்டும். காலாவதியான மருந்து விவகாரத்தில் மருந்துக் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் மருந்து விற்பனை கடைகளில் சோதனையிட்டனர். அதில் மருந்து மாத்திரைகளுடன், காலாவதியான ஹார்லிக்ஸ், பூஸ்ட், அமுல் போன்ற பால் உணவுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோடை காலம் ஆரம்பித்துவிட்டதால் பெப்சி, கோககோலா, செவன்-அப் போன்ற குளிர்பானங்களையும் எச்சரிக்கையுடன் தான் வாங்கி குடிக்கவேண்டும். சில குளிர்பான நிறுவனங்கள் தர முத்திரை பெறாமல், தங்களது குளிர்பானங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பொருள்களுக்கு தடை: ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பொருள்களை நுகர்வோராகிய பொதுமக்கள் வாங்கக் கூடாது. ஸ்டிக்கர் ஒட்டி உணவுப் பொருள் விற்பதை முற்றிலும் தடை விதிக்க வேண்டும். இதை முனைப்புடன் அரசு செயல்படுத்த வேண்டும். அதேபோல தண்டிக்கப்பட்டவர்களின் விவரங்களையும் அரசு வெளியே தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில்தான் அதிகளவில் காலாவதியான பொருள்கள் விற்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
நுகர்வோர் உரிமை: நேர்மையற்ற வணிக முறையில் நுகர்வோருக்கு இழப்பு ஏற்பட்டிருந்தால், பொருள்கள் குறைபாடு இருந்தால், நுகர்வோர் பொருளுக்கு செலுத்திய விலை பொருளின் மேலுறையில் குறிப்பிட்ட விலையை விட அல்லது சட்டத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமாக இருந்தால் புகார் தெரிவிக்கலாம்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986}ன் கீழ் பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, விருப்பத்தினை தேர்வு செய்யும் உரிமை, குறைதீர்க்க கேட்கப்படும் உரிமை, நுகர்வோர் கல்வி பெறும் உரிமை, குறை நிவர்த்தி பெறும் உரிமை என நுகவோர்களுக்கான உரிமைகள் வகுக்கப்பட்டுள்ளன.
எங்கே புகார் செய்வது? நுகர்வோர் தொடர்பான புகார்களை "ஆணையர், தொழிலாளர் துறை, எடை மற்றும் அளவுகள், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை' என்ற முகவரியில் புகார் செய்யலாம். மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட குறைதீர் மன்றங்களிலும் புகார் தெரிவிக்கலாம்.
இத்துடன் சென்னை எழிலகத்தில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் உதவி மையத்தில் உள்ள 044-28592828 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். Consumer @tn.gov.in என்ற முகவரியில் இ-மெயில் செய்யலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...