ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திருச்செந்தூர்: "அனிதா'வுக்கு "சீட்' கிடைக்குமா?

திருநெல்வேலி, நவ. 21: திருச்செந்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்றைய அரசியல் சூழ்நிலையில்  “மில்லியன் டாலர்’ மதிப்புடைய இந்த

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:24 pm

ப. இசக்கி

திருநெல்வேலி, நவ. 21: திருச்செந்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்றைய அரசியல் சூழ்நிலையில்  “மில்லியன் டாலர்’ மதிப்புடைய இந்தக் கேள்வியை திமுக வட்டாரத்தில் எழுப்பினால் “ஆம்’ என்றும் “இல்லை’ என்றும் கூறி இரு பதில்களுக்குமான காரணங்களை அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அடுக்கடுக்காக கூறுகின்றனர்.

 அதிமுகவில் அசைக்க முடியாத சக்திகளில் ஒருவர் என கருதப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன், யாரும் எதிர்பாராத வகையில் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். திருச்செந்தூர் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜிநாமா செய்தார். அன்றைக்கே, திருச்செந்தூர் இடைத் தேர்தல் திமுக வேட்பாளர் அனிதாதான் என அடித்துச் சொன்னது திமுக வட்டாரம்.

 இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டு விட்டதால் அனிதாதான் திமுக வேட்பாளர் என அக்கட்சியினர் நம்பிக் கொண்டிருக்கிóன்றனர். அனிதா, திமுகவில் சேரும்போது வாக்கு கொடுக்கப்பட்டுள்ளதாலும், திமுகவின் இரண்டாம் நிலை  அதிகார மையங்களான துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகிய இருவரின் நன்மதிப்பையும் அனிதா பெற்றுள்ளதாலும் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் எதுவும் இல்லை என்றும் கூறுகின்றனர்.

 மேலும், அனிதாவுக்கு வாய்ப்பு கொடுக்காவிட்டால் இனிவரும் காலங்களில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் சேருவோருக்கு தலைமையால் அளிக்கப்படும் வாக்குறுதிகள் மீது நம்பிக்கை இருக்காது. அது கட்சியின் மதிப்பை பாதிக்கும் என்பதால் அனிதாவுக்கு வாய்ப்பு உறுதி என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

 இவை மட்டுமின்றி, அழகிரி கூட தனக்கு தில்லி அரசியல் சரிப்பட்டு வராதோ எனக் கருதி, தமிழக அரசியலில் கவனம் செலுத்த ஏதுவாக திருச்செந்தூரில் போட்டியிட திட்டமிட்டார். அதற்கு அவரது தந்தையும், முதல்வருமான கருணாநிதி சொன்ன அறிவுரையால் அழகிரி மனம்மாறி அப்போதே அனிதாவை அழைத்து திருச்செந்தூர் இடைத் தேர்தல் பணியைக் கவனியுங்கள் என கூறிவிட்டதால் அவருக்கு வாய்ப்பு உறுதி என்று திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அரசியலில் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்ற அரிச்சுவடியின் அடிப்படையில் அனிதாவுக்கு எதிரான காரணங்களையும் திமுகவினர் அடுக்குகின்றனர்.

 அனிதா, திமுகவில் இணைய முயற்சி மேற்கொண்டபோது அவர் அதிமுகவில் இருந்து கொண்டு உள்ளாட்சி மற்றும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக செய்த அத்தனை காரியங்களையும் மாவட்டச் செயலர் என். பெரியசாமியும், அவரது ஆதரவாளர்களும் பட்டியலிட்டு தலைமைக்கு அனுப்பி இப்படிப்பட்டவரை சேர்க்கலாமா என கேள்வி எழுப்பியதை சில திமுகவினர் நினைவு கூர்கின்றனர். அவையெல்லாம் இப்போது அனிதாவின் வரவை விரும்பாத திமுகவினர் மூலம் புத்துயிர் பெறலாம். அதன் மூலம் அவருக்கு எதிராக காய் நகர்த்த சிலர் முயற்சிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

 திமுகவில் இத்தனை நாளும் உழைத்தவர்களை புறந்தள்ளிவிட்டு புதிதாக கட்சிக்கு வந்த அனிதாவுக்குதான் வாய்ப்பா என சிலர் எதிர்ப்பு குரல் எழுப்புகிறார்கள்.

  வேறு கட்சிகளில் திடீரென்று நுழைந்து வேட்பாளராவது சாத்தியம். ஆனால், தொண்டர் பலத்தை அடிப்படையாகக் கொண்ட திமுகவில் அது சாத்தியமல்ல என்று கருதும் நீண்ட நாள் தொண்டர்கள், அனிதாவை வேட்பாளராக்குவதை கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிகிறது.

 அதுமட்டுமின்றி, தொகுதியில் ஆதிக்கம் பெற்ற வி.வி. மினரல் தொழில் அதிபர்களின் எதிர்ப்பு, வெங்கடேச பண்ணையார் என்கவுன்ட்டரால் நாடார் சமூக மக்களிடையே அனிதா மீதுள்ள அதிருப்தி போன்ற காரணங்களையும் எதிர்ப்பாளர்கள் முன்வைக்க கூடும் என திமுகவினர் கூறுகின்றனர்.

 அரசியல் நடவடிக்கைகளில் பிரிந்திருந்த, திமுகவின் தூத்துக்குடித் தூண் என வர்ணிக்கப்படும் பெரியசாமியும், வெங்கடேச பண்ணையாரின் மனைவியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராதிகா செல்வியும் இப்போது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக  ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் இருவருமே அனிதாவின் வரவை ரசிக்கவில்லை என்பது ஊரறிந்த ரகசியம்.

 இதில், மக்களவைக்கு போட்டியிட மறுபடியும் வாய்ப்புக் கிடைக்காத ராதிகா செல்வி, திருச்செந்தூரில் போட்டியிட வாய்ப்பு கேட்டு ஏற்கெனவே முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்காகவே பெரியசாமியுடன் நட்பு பாராட்டி வருவதாகக் கூறுவோறும் உண்டு.

 ராதிகா செல்விக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என திமுகவில் உள்ள சில அதிகார மையங்கள் வலியுறுத்தி வரும் நிலையில் பெரியசாமி மூலம் அழகிரியின் ஆதரவைப் பெறவும் அவர் முயற்சி மேற்கொள்ளக் கூடும் என திமுகவினர் எதிர்பார்க்கின்றனர். அனிதாவை ஓரம்கட்ட பெரியசாமி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ராதிகா செல்விக்கு வேட்பாளர்  வாய்ப்பைப் பெற்றுத்தர முனைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.