சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஐஎஸ்எல்: கடைசி இடத்திலிருந்து மேலேறி வந்து பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்ற சென்னையின் எஃப்சி-யின் நம்பமுடியாத கதை!

ஒவ்வொரு ஆட்டத்தையும் சென்னை அணி வெற்றி பெறுகிற விதம் தான் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது...

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:56 pm

ச. ந. கண்ணன்

ஐஎஸ்எல் போட்டியில் இதுபோன்ற ஒரு மகத்தான காரியத்தை எந்த அணியும் செய்ததில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்க முடியாது. 

ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியில் மும்பையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னையின் எஃப்சி அணி. இதன் மூலம் 28 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்த நான்காவது அணி என்ற சிறப்பையும் பெற்றது. 

இந்த சீசனில் 26 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருந்த மும்பையும், 25 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருந்த சென்னையும் நேற்று மோதின. இரு அணிகளுக்கிடையேயான புள்ளிகள் வித்தியாசம் மிகவும் குறைவு என்பதால், இந்த ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிா்பாா்க்கப்பட்டது. சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருந்தது மும்பை. 

இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெல்லும் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். காரணம், எந்த அணியாக இருந்தாலும் அதை முட்டித்தள்ளி முன்னேறும் வேகத்தில் தற்போது ஆடிவருகிறது சென்னையின் எஃப்.சி. சென்னை - ஏடிகே (கொல்கத்தா) ஆகிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொல்கத்தாவில் கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி அட்டகாசமாக விளையாடி 3-1 என வென்று பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அதிகரித்தது. சொந்த மண்ணில் விளையாடி, 37,000 ரசிகர்களின் ஆதரவு இருந்தும் கொல்கத்தா அணியால் சென்னை அணியை வீழ்த்த முடியாமல் போனது. இப்போது மும்பையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு நுழைந்துள்ளது.

சரி, தொடக்கத்தில் மாபெரும் சரிவைக் கண்டிருந்த சென்னை, இப்படி ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது எப்படி?

முதல் நான்கு ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்த சென்னை அணி, அதன்பிறகு விளையாடிய 13 ஆட்டங்களில் 8-ல் வென்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த வருடப் போட்டியில் சென்னை அணி தான் பல அணிகளின் திட்டங்களைக் கவிழ்த்து நம்பமுடியாத வகையில் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளது. லீக் சுற்றில் சென்னை அணிக்கு இன்னும் ஓர் ஆட்டம் மீதமுள்ளது என்பது இன்னொரு ஆச்சர்யமான செய்தி. கடைசி லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 25 அன்று வடகிழக்கு அணிக்கு எதிராக விளையாடுகிறது. அதன்பிறகு, முதல் கட்ட அரையிறுதி ஆட்டங்கள் பிப். 29, மாா்ச் 1-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட அரையிறுதி ஆட்டங்கள் மாா்ச் 7, 8 தேதிகளில் நடைபெறும். இறுதி ஆட்டம் வரும் மாா்ச் 14-ஆம் தேதி நடைபெறும். இப்போட்டியில் பட்டம் வெல்லும் அணி 2021-இல் நடக்கவுள்ள ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் போட்டி தொடக்க சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும்.

ஒருகட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது சென்னை அணி. அதன் ரசிகர்கள் மிகவும் வெறுத்துப்போனார்கள். கடந்த வருடம் போலவே இந்த வருடமும் அமையும் என்று பலரும் சென்னை அணி விளையாடும் ஆட்டங்களைப் பார்க்க மறுத்தார்கள். தொடர்ந்து இரு வருடங்கள் ஓர் அணி, இறங்குமுகத்திலேயே இருந்தால் ரசிகர்களுக்கு எப்படி உற்சாகம் ஏற்படும்?

ஆனால், புதிய பயிற்சியாளர் மூலமாக சென்னை அணிக்குப் புதிய ஒளி பிறந்தது.

பயிற்சியாளர் ஜான் கிரகோரி தன் பொறுப்பிலிருந்து விலகியதுதான் சென்னை அணியின் முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதனால்  ஓவன் கோயல் என்கிற புதிய பயிற்சியாளர் அணிக்குக் கிடைத்தார். அவருடைய திட்டங்கள் அணி வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தன. ஆட்ட நுணுக்கங்களில் மாற்றம் ஏற்பட்டன. முடிவுகள் சென்னை அணிக்குச் சாதகமாகத் திரும்பின. 

ஐஎஸ்எல் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி கடந்த 2018 சீசனில் நடப்பு சாம்பியன் அந்தஸ்தை விட்டு, கடைசி இடத்துக்குக் கீழிறங்கியது. 2019-20 சீசனில் புதிய வீரா்கள் சோ்க்கப்பட்டு அணிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டது. எனினும் பயிற்சியாளர் கிரகோரியின் பணிகளில் அணிக்கும் ரசிகர்களுக்கும் திருப்தி ஏற்படவில்லை. முதல் ஆறு ஆட்டங்களில் நான்கு கோல்கள் மட்டும் அடித்து, 10 கோல்களைக் கொடுத்து, ஒரு வெற்றி மட்டும் பெற்று மோசமான நிலையில் இருந்தது சென்னை அணி. இதனால் 2017-18-ல் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்து ஐஎஸ்எல் பட்டம் வென்று கொடுத்த ஜான் கிரகோரி, தற்போதைய நிலைமையை உணர்ந்து பதவி விலகினார். முதல் ஆறு ஆட்டங்களில் 3-ல் தோற்று இரண்டை டிரா செய்து ஒரு வெற்றி மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்ததால் நெருக்கடி காரணமாக கிரகோரி பதவி விலகினார். பெங்களூர் அணிக்கு எதிராக 0-3 எனத் தோற்றபோதே, இனிமேல் சென்னை அணி புதிய பயிற்சியாளரின் கீழ் விளையாடவேண்டும் என்று கிரகோரி வெளிப்படையாகவே பேசினார். அயர்லாந்து அணிக்காக விளையாடிய ஓவன் கோயல் புதிய பயிற்சியாளராகத் தேர்வானார். 

ஜம்ஷெட்பூர் அணிக்கு எதிரான ஆட்டம்தான் புதிய பயிற்சியாளர் ஓவன் கோயலின் முதல் பரீட்சை. இதில் 1-1 என டிரா செய்தது சென்னை அணி. அடுத்த ஆட்டத்தில் கேரளாவை 3-1 என வீழ்த்தியது. எனினும் கோவாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 3-4 எனத் தோற்றது. பிறகு ஒடிஷாவிடமும் 0-2 எனத் தோற்றதால் சென்னை ரசிகர்கள் குழம்பிப் போனார்கள். இந்த அணியும் புதிய பயிற்சியாளரும் மாற்றத்தை உருவாக்குவார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் யாராலும் முதல் நாளிலேயே அதிசயத்தை உண்டாக்க முடியாது அல்லவா? ஓவன் கோயலின் திறமையும் அருமையும் பிறகுதான் தெரிய வந்தது.

Story image

ஜனவரி 10. இந்த நாளிலிருந்துதான் முதல் திருப்புமுனை ஏற்பட்டது. அடுத்ததாக ஹைதராபாத்தையும் வடகிழக்கையும் வீழ்த்தி அதிர்ச்சி ஏற்படுத்தியது சென்னை. இதனால் புள்ளிகள் பட்டியலில் மெல்ல மெல்ல ஏற்றம் கண்டது. சென்னை ரசிகர்கள் புத்துணர்ச்சி கண்டார்கள். ஐஎஸ்எல் போட்டியின் அத்தனை அணிகளும் சென்னை அணியை இனி லேசில் எடை போட முடியாது என்கிற முடிவுக்கு வந்தன. அடுத்ததாக மேலும் இரு வெற்றிகள்.ஜம்ஷெட்பூரையும் கேரளாவையும் வீழ்த்தி ரசிகர்களை பிளேஆஃப் கனவு காணச் செய்தது சென்னை அணி. இதன்பிறகு பெங்களூருடன் டிரா செய்தது. இதன்பிறகு ஏடிகேவையும் மும்பையையும் அடுத்தடுத்து வீழ்த்தி தற்போது பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளது. ஒரு பெரிய மழை பெய்து ஓய்ந்தது போலுள்ளது சென்னை ரசிகர்களுக்கு. இந்தத் தருணத்துக்காகத்தானே கடந்த இரண்டு வருடங்களாக ஏங்கிக்கொண்டிருந்தார்கள்!

நேற்றைய ஆட்டத்தில் கோலடித்து சென்னைக்கு வெற்றி தேடித்தந்தவர், லுசியன் கோயன். கடந்த 16 வருடங்களில் 362 ஆட்டங்களில் விளையாடி மொத்தமே 11 கோல் தான் அடித்துள்ளார். அவர்தான் நேற்று சந்தர்ப்பம் பார்த்து அழகாக கோலடித்து சென்னை அணியின் வெற்றிக்கும் பிளேஆஃப்-புக்கும் உத்தரவாதம் அளித்தார். அதிலும் தற்போது இரு வருடங்கள் கழித்து தனது முதல் கோலை அடித்துள்ளார். இப்படி ஒருவர் கோலடித்து சென்னை அணி பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற வேண்டும் என்பதெல்லாம் நம்பமுடியாத கதையாகத்தானே உள்ளது!

கிரகோரியின் பயிற்சிக்கும் ஓவன் கோயலிக்கும் பயிற்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்லப்படுகிறது. வீரர்களின் திறமையில் சிறிய மாற்றங்களை மட்டுமே உருவாக்கியுள்ளார். மற்றபடி ஜெயிக்கவேண்டும் என்கிற வெறியை வீரர்களிடம் ஏற்படுத்தியுள்ளார். தோற்றுவிடுவோம் என்கிற அச்சத்துடன் முந்தைய தோல்விகளை எண்ணிக்கொண்டு விளையாட வேண்டாம் என்பதுபோன்ற அறிவுரைகளால் மனமாற்றங்களை வீரர்களிடம் உருவாக்கினார். இதற்கு முன்பு எத்தனை தோல்விகளைக் கண்டிருந்தாலும் தொடர்ந்து வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றை வசப்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்தார். இதனால் வீரர்களின் ஆட்டத்திலும் அணியின் ஆட்ட முடிவுகளிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. தற்காப்பு ஆட்டத்தை விடவும் ஆக்ரோஷமாக விளையாடி கோல் அடிக்கும் மனப்பான்மையை வீரர்களிடையே உருவாக்கினார். இதனால் லீக் சுற்றின் கடைசி  ஆட்டங்களில் சென்னை அணியே போட்டியின் மிகச்சிறந்த அணியாக உருவெடுத்துள்ளது. வெற்றி அடைவது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆட்டத்தையும் சென்னை அணி வெற்றி பெறுகிற விதம் தான் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஜம்ஷெட்பூரை 4-1 என்றும் கேரளாவை 6-3 என்றும் வீழ்த்தி மற்ற அணிகளுக்குக் கிலி ஏற்படுத்தியது. அதிலும் கடந்த 4 ஆட்டங்களையும் எதிரணியின் மண்ணில் (ஹைதராபாத், கேரளா, கொல்கத்தா, மும்பை) விளையாடி வெற்றி பெற்றிருப்பது சென்னை மீதான மதிப்பை மேலும் அதிகரித்துள்ளது.  

ஓர் ஆட்டம் மீதமுள்ள நிலையில் சென்னை அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும் என்று ஜனவரி 10-ம் தேதிக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் சென்னை ரசிகர்க்ளே விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள். ஆனால் புதிய பயிற்சியாளர், புதிய அணுகுமுறை, ரசிகர்களின் பிரார்த்தனை போன்றவற்றால் சென்னை அணி, எட்டமுடியாத உயரத்தைத் தொட்டுள்ளது. இனி, ஐஎஸ்எல் போட்டியை வென்றால் மட்டுமே இந்த மாற்றங்களுக்கு முழு அர்த்தம் கிடைக்கும்.

வென்று வாருங்கள் தோழர்களே. அனைவருக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.