உலகக் கோப்பையில் சொதப்பிய இந்திய அணி: யுவ்ராஜ் சிங் விமரிசனம்
ராயுடுவின் நீக்கத்தால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஒரு வருடத்துக்கும் மேலாக 4-ம் நிலை வீரராக விளையாடினார்...


கடந்த 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் யுவ்ராஜ் சிங். ஆல்ரவுண்டரான அவர், புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்டு வந்தார். அதற்குப் பிறகு சரிவர விளையாடவில்லை. ஐபிஎல் போட்டியிலும் சோபிக்கவில்லை. இதனால் இந்திய அணியில் இவருக்கான வாய்ப்புகள் கிடைக்காததால் கடந்த ஜூன் மாதம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் இந்திய அணியின் 2019 உலகக் கோப்பை திட்டங்களை விமரிசித்துள்ளார் யுவ்ராஜ் சிங். அவர் கூறியதாவது:
உலகக் கோப்பைக்கு முன்பு ராயுடுவை நீக்கினார்கள். விஜய் சங்கருக்குக் காயம் ஏற்பட்டதால் ரிஷப் பந்த் உள்ளே வந்தார். அவர்கள் மீது எனக்கு எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை. ஆனால் இருவரும் 5 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார்கள். இதுபோன்ற குறைந்த ஆட்டங்களில் விளையாடியுள்ள வீரர்கள் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
இந்திய அணி நிர்வாகம் என்ன செய்தது? போட்டியின்போது இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தினேஷ் கார்த்திக், திடீரென அரையிறுதியில் விளையாடுகிறார். தோனி போன்ற ஒரு வீரர் 7-ம் நிலையில் களமிறங்குகிறார். எல்லாமே குழப்பமான மனநிலை. முக்கிய ஆட்டங்களில் இதுபோன்ற தவறைச் செய்யக்கூடாது. 4-ம் நிலை வீரரின் அதிகபட்ச ரன்கள் - 48 தான். எனவே அணியை அமைப்பதில் சரியாகத் திட்டமிடவில்லை.
ராயுடுவின் நீக்கத்தால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஒரு வருடத்துக்கும் மேலாக 4-ம் நிலை வீரராக விளையாடினார். நியூஸிலாந்தில் 90 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். 2003 உலகக் கோப்பைக்கு முன்பு விளையாடிய தொடர்களில் கிட்டத்தட்ட அதே அணி தான் விளையாடியது. அனுபவம் கொண்ட வீரர்கள் இருந்தார்கள். நானும் கயிஃப்பும் 35-40 ஆட்டங்களில் விளையாடியிருந்தோம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...