/

ஐபிஎல் ரன்களைக் கொண்டு ஒருநாள் போட்டிக்குத் தேர்வு செய்வதா? கம்பீரின் நேர்மையான கேள்வி!

கம்பீர் மிகவும் தன்னடக்கத்துடன் பேசினார் என்று எடுத்துக் கொள்ளமுடியுமா? கிடையாது...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:28 pm

சநகன்

ஒரு கிரிக்கெட் வீரர் இந்தளவுக்கு நேர்மையாகப் பேசமுடியுமா?

ஐபிஎல்-லில் ரன்கள், விக்கெட்டுகள் எடுக்கும் அனைத்து வீரர்களும் தன்னை உடனடியாக இந்திய அணிக்குத் தேர்வு செய்யவேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். ஐபிஎல் போட்டியில் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்திய வீரர்களை உடனடியாக டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்யப்படவேண்டும் என்கிற கோரிக்கைகள் எல்லாம் கிரிக்கெட் நிபுணர்களிடமிருந்து எழுந்துள்ளன.

ஆனால் கம்பீர் இந்த விஷயத்தில் மிகவும் நேர்மையாகப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

டி20 போட்டியில் ஆடியதை வைத்து ஒருநாள் போட்டிக்குத் தேர்வு செய்வது சரியல்ல. ஐபிஎல்-லில் நன்றாக விளையாடுவதால் நான் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவேன் என நினைக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபியை மனத்தில் கொண்டு ஐபிஎல்-லில் ஆடுவது சுயநலமாகும்.

டி20, ஒருநாள் என இரண்டு வெவ்வெறு வகையான கிரிக்கெட் போட்டிகள். இரண்டுக்கும் வெவ்வேறு திறமைகள் தேவைப்படுகின்றன. டி20 போட்டியில் நன்றாக விளையாடினால் டி20 அணிக்குத்தான் தேர்வு செய்யப்படவேண்டும். டி20 போட்டியில் விளையாடியதை வைத்து ஒருநாள் போட்டிக்குத் தேர்வு செய்தால் பிறகு உள்ளூர் ஒருநாள் போட்டிக்கு அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.

சாம்பியன் டிராபியை மனத்தில் கொண்டு விளையாடினால் அணியில் நலன் பின்னுக்குத் தள்ளப்படும். தனிப்பட்டமுறையில் ரன்கள் குவிப்பதில் மட்டுமே வீரர்கள் கவனம் செலுத்துவார்கள். அது சரியல்ல. நான் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்காக விளையாடுவதில்லை. கிரிக்கெட் போட்டியில் ஜெயிப்பதற்காகவே விளையாடுகிறேன்.

ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்துக்கும் தனித்தனி திறமைகள் தேவைப்படுகின்றன. மூன்றும் ஒன்றல்ல. ஒருநாள் போட்டிக்கு என தனி உத்திகள் தேவைப்படும். டி20-யில் பயமில்லாமல் ஆடுவதுபோல அதில் விளையாடமுடியாது. முதல் 10 ஓவரில் தாக்குப்பிடிக்க உங்களுக்குத் தனித்திறமை, நுட்பம் தேவைப்படும் என்று மிகவும் பக்குவத்துடன் பேட்டியளித்துள்ளார்.

கம்பீர், கடைசியாக ஜனவரி 2013-ல் இந்திய அணிக்காக விளையாடினார். இந்த ஐபிஎல் போட்டியில், 12 ஆட்டங்களில் 425 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளார். ஸ்டிரைக் ரேட் - 132. சமீபத்தில் பேட்டியளித்த கங்குலி, கெளதம் கம்பீர் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குத் தேர்வு செய்யப்படவேண்டும் என்று கூறினார். இப்படி அவருக்கு ஏற்றவாறு எல்லாமே சாதகாக இருந்த சமயத்தில் இப்படிப் பேட்டியளித்துள்ளார்.

சரி, கம்பீர் மிகவும் தன்னடக்கத்துடன் பேசினார் என்று எடுத்துக் கொள்ளமுடியுமா? கிடையாது. இந்திய உள்ளூர் ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரா போட்டியில், கம்பீர் 5 ஆட்டங்களில் 166 ரன்களே எடுத்தார் (சராசரி - 33.20). எனவே கம்பீர் சொன்னபடி பார்த்தால் அவரை இந்திய அணியில் சேர்த்துக்கொள்ளக்கூடாது. 

இதுவரை, என்னை ஏன் இந்திய அணியில் சேர்க்கவில்லை என்றுதான் வீரர்கள் கொடிபிடித்திருக்கிறார்களே தவிர, தான் ஒருநாள் போட்டியில் சரியாக ஆடாதபோதும், டி20 போட்டியில் சிறப்பாக ஆடிவருகிறபோதும், பிரபல முன்னாள் வீரர் தனக்காகப் பரிந்துரைத்தபோதும் - டி20 போட்டியில் ஆடியதைக் கொண்டு ஒருநாள் போட்டிக்குத் தேர்வு செய்யக்கூடாது என்று யாரும் பேசியது கிடையாது. கம்பீரின் இந்தப் பேச்சு அவருடைய நேர்மையை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் காணமுடியாத அரிய குணம் இது.

குறிப்பு: இன்று அறிவிக்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணியில் கெளதம் கம்பீர் தேர்வு செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.