/

சாய் சுதர்ஷன் அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

News image
சாய் சுதர்ஷன்- படம் | ஐபிஎல்
Updated On :29 மார்ச் 2025, 4:11 pm

DIN

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் விளையாடியது.

சாய் சுதர்ஷன் அரைசதம்; 197 ரன்கள் இலக்கு

குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்ஷன் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்கினர். இந்த இணை குஜராத் டைட்டன்ஸுக்கு மிகவும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 78 ரன்கள் சேர்த்தது. ஷுப்மன் கில் 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன் பின் களமிறங்கிய ஜோஸ் பட்லர் 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்கள் அடங்கும். ஷாருக்கான் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சாய் சுதர்ஷன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 41 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 18 ரன்கள், ரஷித் கான் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் கேப்டன் ஹார்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிரெண்ட் போல்ட், தீபக் சஹார், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் சத்யநாராயண ராஜு தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.