/

ஐபிஎல் ப்ளேஆஃப்: 5 அணிகளும் என்ன செய்யவேண்டும்?

இப்போது ப்ளேஆஃப்பில் பங்குபெற 5 அணிகள் கடுமையாகப் போராடுவது திடீர் பரபரப்பையும் சுவாரசியத்தையும் உண்டுபண்ணியுள்ளது.  

News image
Updated On :22 ஜூலை 2025, 10:26 am

சநகன்

இந்த ஐபிஎல்-லில் பல போட்டிகள் சுவாரசியம் இல்லாமல் இருந்தன. ஆனால், இப்போது ப்ளேஆஃப்பில் பங்குபெற 5 அணிகள் கடுமையாகப் போராடுவது திடீர் பரபரப்பையும் சுவாரசியத்தையும் உண்டுபண்ணியுள்ளது.  

லீக் சுற்றில் இன்னமும் 5 போட்டிகள் மட்டும்தான் உள்ளன. இதில் 4 போட்டிகள் அதிமுக்கியமானவை. அவைதான் ப்ளேஆஃப்புக்குச் செல்லும் 3 அணிகளைத் தீர்மானிக்கும். சென்னை அணி ஏற்கெனவே ப்ளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிட்டதால் நாளை மாலை 4 மணிக்கு நடக்கும் சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லை. ஆனால் இதர 4 போட்டிகளிலும் தீப்பொறி பறக்கும் என்று சொன்னால் நிச்சயம் மிகையேயில்லை.

கொல்கத்தா,  ராஜஸ்தான், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 5 அணிகளும் மீதமுள்ள 3 இடங்களுக்குப் போட்டியிடுகின்றன.

கொல்கத்தாவின் சிக்கல்:

இந்த ஐபிஎல்-லில் சிறப்பாக ஆடிவரும் கொல்கத்தா பல எதிர்பாராத தோல்விகளையும் சந்தித்தது கடைசிக் கட்டத்தில் சிக்கலுக்கு வழிவகுத்துள்ளது. நாளை 8 மணிக்கு கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி கிட்டத்தட்ட காலிறுதிக்குச் சமமானது. இதில் கொல்கத்தா தோற்றுப்போனால் போட்டியிலிருந்து வெளியேற வேண்டியதுதான். சென்னை உள்பட மற்ற எல்லா அணிகளையும் விட பலம் பொருந்தியதாகத் தோற்றம் தரும் கொல்கத்தா ப்ளேஆஃப்புக்குத் தகுதி பெறாமல் போனால் அது பெரிய இழப்பாகவே இருக்கும்.

சொதப்பிய ராஜஸ்தான்:

இந்த ஐபிஎல்-லில் சென்னையும் ராஜஸ்தானும் தான் மாறி மாறி முதல் இடத்தில் இடம்பெற்றன. ஆனால் ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பத்தில் இருந்த ஜோர், இப்போது குறைந்துவிட்டது. முதலில் தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்ற ராஜஸ்தான், அதன்பிறகு நடந்த 8 போட்டிகளில் ஒன்றில்தான் ஜெயித்தது. இரண்டு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டன. இதனால் இப்போது கொல்கத்தாவுக்கு எதிராக வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் வந்து நிற்கிறது.

ஹைதராபாத்: ஒரு வெற்றி

ப்ளேஆஃப்புக்கான போட்டியில் ஹைதராபாத்தும் இடம்பெற்றிருப்பது ஆச்சரியம்தான். வார்னரின் தனிப்பலத்தில்தான் பெரும்பாலான மேட்சுகளை வென்றது. ஹைதராபாத்தின் பெரிய சொத்து - அதன் பவுலர்கள். அதிலும் புவனேஷ்வர் குமார், உலகக்கோப்பையில் உண்டான ஏமாற்றத்தை ஐபிஎல்-லில் போக்கியுள்ளார்.

கடந்த 8 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று ஐபிஎல்-ஐ மிகவும் சுவாரசியமாக்கியதில் ஹைதராபாத்துக்கு அதிக பங்குண்டு. ஹைதராபாத்தின் இந்த வெற்றிகளால் மற்ற அணிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.

ஹைதராபாத்துக்கு இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன. பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய முக்கியமான அணிகளுடன் போட்டி போடுகிறது. இந்த இரண்டில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட ஃப்ளேஆப்புக்குத் தகுதி பெற்றுவிடும்.

சுவாரசிய போட்டியில் மும்பை!

14 புள்ளிகளுடன் இன்னும் ஒரு வெற்றியாவது தேவை என்கிற நிலையில் உள்ளது மும்பை. ஆனால் மீதம் ஒரு போட்டி மட்டும்தான் இருக்கிறது என்பது மும்பையின் பெரிய சிக்கல். அதுவும் ஹைதராபாத்தோடு. மும்பையின் சில வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளதாலும் கொல்கத்தாவைத் தோற்கடித்த ஒரு குஷியில் உள்ளதாலும் லீக் சுற்றின் இறுதிப் போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கப் போகிறது.

நெருக்கடியில் பெங்களூரு

கெய்ல் ஃபார்மில் இல்லாததால் ஆரம்பத்தில் அதிகம் தடுமாறிய பெங்களூரு, இப்போது பழைய ஃபார்முக்கு வந்துவிட்டது. கெய்ல், கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோர் கொண்ட ஒரு யானை பலத்துடன் ப்ளேஆஃப்புக்குச் செல்ல போராடிக்கொண்டிருக்கிறது. கடந்த 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றது சாதகமான பலன்களைக் கொடுத்துள்ளது. பஞ்சாப்பிடம் தோற்றுப் போனது எதிர்பாராதது. அடுத்த 2 போட்டிகளில் ஹைதராபாத் மற்றும் டெல்லியுடன் மோதுகிறது. 13 புள்ளிகளுடன் உள்ளதால் இந்த இரண்டிலும் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.