/

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் - சவுரவ் கங்குலி?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக சவுரவ் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :22 ஜூலை 2025, 10:25 am

சநகன்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சரின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளராக சவுரவ் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகக்கோப்பை போட்டியோடு பயிற்சியாளர் டங்கன் பிளட்சரின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து அடுத்தப் பயிற்சியாளருக்கான தேடல் தொடங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துவிட முடியாது. முறையாக வாரியத்துக்கு விண்ணப்பம் அனுப்பவேண்டும். அதை வாரியத்தின் தேர்வுக்குழு ஆராய்ந்து புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும்.

இந்திய அணியின் முதல் வெளிநாட்டுப் பயிற்சியாளராகத் தேர்வானவர், ஜான் ரைட் (அதற்கு முன்பு, பாப் சிம்சன், இந்திய அணியின் ஆலோசகராக குறுகிய காலம் இருந்தார்). அதன்பிறகு, கிரேக் சேப்பல், கேரி கிர்ஸ்டன், டங்கன் பிளட்சர் ஆகியோர் இந்திய அணியை நிர்வகித்த வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள்.

பிளட்சருக்குப் பிறகு மீண்டுமொரு வெளிநாட்டுப் பயிற்சியாளர் தேவையில்லை. இந்தியப் பயிற்சியாளரையே நியமிக்கலாம் என்றொரு கருத்து நிலவுகிறது. அதனால்,இப்போது முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பெயர் அடிபடுகிறது. இதுகுறித்து பிசிசிஐயின் தலைவர் ஜக்மோகன் டால்மியாவிடம் சமீபத்தில் கங்குலி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. வங்காள கிரிக்கெட் வாரியத்தில் துணைச் செயலாளராகவும் ஐபிஎல் கவுன்சிலில் உறுப்பினராகவும் கங்குலி உள்ளார்.  அதனால் அவர் தேர்வாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

கங்குலி தேர்வானால் ரவி சாஸ்திரி அணியின் இயக்குநராக நீடிப்பதில் சிக்கல் ஏற்படும். இல்லாவிட்டால், சஞ்சய் பங்கர் அல்லது பிரவீன் ஆம்ரே போல பிரபலமில்லாத பயிற்சியாளர்களைத் தேர்வு செய்துவிட்டு, ரவி சாஸ்திரியை அணியின் இயக்குநராக நீடிக்க வைக்கவும் திட்டங்கள் உள்ளன. யார் பயிற்சியாளர் ஆனாலும், அவருக்கு வழங்கப்படக்கூடிய முதல் அசைண்மெண்ட் - வெளிநாடுகளில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்பதே. சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியால் ஒரு போட்டியிலும் வெல்லமுடியவில்லை. இந்தக் களங்கத்தை மாற்ற புதிய பயிற்சியாளர் முயற்சி எடுக்கவேண்டும். இதை வைத்துத்தான் அவருடைய பணிக்காலம் மேலும் நீட்டிக்கப்படும். இவ்வாறு பிசிசிஐ, புதிய பயிற்சியாளருக்கென சில தகுதிகளை பிசிசிஐ வரையறை செய்துள்ளது.

டால்மியாவிடம் கங்குலி பேசிவிட்டதால், விரைவில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு அவர் விண்ணப்பிப்பார் எனத் தெரிகிறது. ஆனால், தன்னால் எந்தவித உத்தரவாதமும் தரமுடியாது. இதைப் பற்றி தேர்வுக்குழுதான் முடிவு செய்யும் என கங்குலியிடம் டால்மியா பேசியிருப்பதாகவும் வங்காள கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர், முதலில் விண்ணப்பத்தை பிசிசிஐக்கு அளிக்கவேண்டும். குழுவிடம் தன்னைப் பற்றிய பிரசண்டேஷனை அளிக்கவேண்டும். அதன்பிறகு நேர்காணல் நடைபெறும். இதற்குப் பிறகு சிறந்த நபர் யார் என்பதை தேர்வுக்குழு முடிவு செய்யும்.

"வெகுவிரைவில் இது பற்றி முடிவு செய்யப்படும். பல விஷயங்களையும் ஆராய்ந்த பிறகுதான் பயிற்சியாளரைத் தேர்வு செய்யமுடியும். வெளிநாட்டுப் பயிற்சியாளரைத் தேர்வு செய்வது பற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டும். ஓர் இந்தியரைத் தேர்ந்தெடுப்பதிலும் எனக்கு ஆட்சேபம் இல்லை. இந்திய அணியின் வளர்ச்சிக்கு உகந்தவாறு புதிய பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்" என்று பிசிசிஐ தலைவர் டால்மியா, பயிற்சியாளர் தேர்வு பற்றி பேட்டியளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.