சென்னையில் ஐபிஎல் போட்டிகள் எதுவும் கிடையாது!
இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு எந்தவொரு ஆட்டமும் ஒதுக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.


இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு எந்தவொரு ஆட்டமும் ஒதுக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
2016ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின்போது, சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு ஆடவர் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறப்படும் 3 கேலரிகளை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதைக் காரணம் காட்டி சென்னையில் ஆடவர் பிரிவு உலக கோப்பை போட்டி எதுவும் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் மகளிர் பிரிவில் 4 ஆட்டங்கள் சென்னைக்கு ஒதுக்கப்பட்டன. அதில் இந்திய அணி மோதும் ஆட்டம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்தியாவில் பெருவாரியான கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்ட நகரங்களில் ஒன்றான சென்னைக்கு ஆடவர் பிரிவு போட்டி ஒதுக்கப்படாததால் ரசிகர்கள் மிகுந்த கவலை கொண்டார்கள்.
சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஐ, ஜே, கே ஆகிய மாடங்களில் அமர பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதற்கான ஒப்புகைச் சான்றிதழை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பெற்றிருக்கவில்லை. ஆகவே, அந்த 3 பார்வையாளர் மாடங்களில் ரசிகர்கள் அமர அனுமதி இல்லை. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் விதிகளின்படி, மைதானத்தில் உள்ள அந்த பார்வையாளர் மாடங்களுக்கு இடையிலானஇடைவெளி 8 மீட்டராக இருக்க வேண்டும். ஆனால், ஐ,ஜே,கே ஆகிய மூன்று மாடங்களுக்கு இடையிலான இடைவெளி 5.4 மீட்டர்களாக மட்டுமே உள்ளது. அதனால், அந்த மாடங்களுக்கு சிஎம்டிஏ அனுமதி வழங்கவில்லை. மேலும், சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை அணி விளையாட முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, இந்தக் காரணங்களால் டி20 உலகக் கோப்பையின் ஆடவர் போட்டிகள் சென்னையில் நடைபெறவில்லை.
அதேநேரத்தில் பார்வையாளர்கள் மாடங்கள் காலியாக இருக்கும் நிலையிலும், சென்னையில் பல ஆண்டுகளாகவே சர்வதேசப் போட்டிகளும் ஐபிஎல் போட்டிகளும் நடைபெற்றுள்ளன. ஆனாலும் ஆடவர் உலகக் கோப்பை போட்டிகள் மட்டுமில்லாது சென்னை சேப்பாக்கத்துக்கு ஐபிஎல் போட்டிகளும் ஒதுக்கப்படவில்லை.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம், ஸ்பாட் ஃபிக்ஸிங் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி லோதா குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் ஐபிஎல் போட்டிகளில் இரண்டு ஆண்டுகள் பங்கேற்கக் கூடாது என்று கூறி தடை விதித்தது. இதனையடுத்து புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புணே, ராஜ்கோட் அணிகள் தங்களுக்கான வீரர்களை ஏலம் வழியாகத் தேர்வு செய்தன. இதில், தோனி, கெவின் பீட்டர்சன், மிட்செல் மார்ஷ், அஸ்வின், ரஹானே போன்ற வீரர்கள் புணே அணியில் இடம்பெற்றுள்ளார்கள். புணே அணியை கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் நியூ ரைசிங் நிறுவனம் வாங்கியது. அதேபோல், இண்டெக்ஸ் நிறுவனம் ராஜ்கோட் அணியைத் தன் வசமாக்கிக் கொண்டுள்ளது. ராஜ்கோட் அணிக்கு குஜராத் லயன்ஸ் (Gujarat Lions) என்று பெயரிடப்பட்டது. இந்த அணியில் ரெய்னா, பிரண்டன் மெக்கல்லம், டிவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஃபாக்னர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இந்த வருட ஐபிஎல் போட்டிகள் - பெங்களூர், டெல்லி, ஹைதரபாத், கொல்கத்தா, மொஹலி, மும்பை, நாக்பூர், ராய்பூர், புணே, ராஜ்கோட் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. இதில் ஐபிஎல் போட்டிகள் வழக்கமாக நடைபெற்ற சென்னை, ஜெய்பூர் ஆகிய நகரங்களுக்கு மட்டுமே ஐபிஎல் போட்டிகள் ஒதுக்கப்படவில்லை.
நாக்பூர், ராய்பூர் என ஐபிஎல் அணிகளுக்குத் தொடர்பில்லாத நகரங்களிலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதேபோல சென்னையிலும் ஐபிஎல் போட்டியை நடத்தியிருக்கலாம் என்று ரசிகர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
ஏற்கெனவே சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல்-லில் இருந்தபோதே சென்னையில் போட்டி நடத்துவது சிக்கலாக இருந்தது. இலங்கை வீரர்கள் சென்னையில் நடைபெறுகிற போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத சூழல் இருந்ததால் அணிகள் அதிருப்தியைத் தெரிவித்தன. இதனால் இந்த வருடம் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை என்று அறியப்படுகிறது. இரண்டு வருடங்கள் கழித்து, 2018-ம் வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐபிஎல்-லில் மீண்டும் காணமுடியும். அப்போது சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் திரும்ப வாய்ப்புள்ளன. அதுவரை ரசிகர்கள் பொறுமையாக இருந்தே ஆகவேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...