நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பிலிப் ஹியூஸ் மரணமடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு: மரியாதை செலுத்திய கிரிக்கெட் உலகம்!

கடந்த வருடம் இதேநாளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் பவுன்சர் பந்தால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். ஓராண்டு நிறைவையொட்டி, கிரிக்கெட் உலகம் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:39 am

சநகன்

கடந்த வருடம் இதேநாளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் பவுன்சர் பந்தால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். ஓராண்டு நிறைவையொட்டி, கிரிக்கெட் உலகம் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளது.

சென்ற வருடம், ஷெப்பீல்டு ஷீல்டு கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வந்த பிலிப் ஹியூஸ், நியூ சவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அபாட் வீசிய பவுன்சரை அடித்து ஆட முயன்றபோது படுகாயமடைந்தார். பந்து அவருடைய இடது கழுத்துப் பகுதியில் பலமாகத் தாக்கியது. இதனால் நிலைகுலைந்த ஹியூஸ் மைதானத்தில் சரிந்தார். உடனடியாக அவர் செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் கோமா நிலையிலேயே இருந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் சென்ற வருடம் இதே தினத்தில் (நவம்பர் 27) மரணம் அடைந்தார். இந்தச் சம்பவம் கிரிக்கெட் உலகை மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

பிலிப் ஹியூஸின் உடல் அவருடைய சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சி அவர் படித்த மேக்ஸ்வில்லே உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்றபோது, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், ஹியூஸின் நெருங்கிய நண்பருமான மைக்கேல் கிளார்க் புகழஞ்சலி செலுத்தினார். அவருடைய பேச்சு மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்தது. ‘ஹுயூஸை நான் எப்போதும் தேடுவேன். இது பைத்தியகாரத்தனமாகத் தெரிந்தாலும் அவருடைய தொலைப்பேசி அழைப்புக்காக நான் எப்போதும் காத்திருப்பேன். அவர் முகத்தைக் காணவும் ஆசைப்படுகிறேன். இதைத்தான் ஆன்மா என்பதா? அப்படியென்றால் அவர் ஆன்மா இன்னமும் என்னிடம் உள்ளது. அது ஒருபோதும் என்னைவிட்டுப் போகாது’ என்றார். பிலிப் ஹியூஸின் இறுதிச்சடங்கு நடைபெற்றதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் ட்விட்டரில் தங்களது இரங்கலையும், வருத்தத்தையும் பகிர்ந்துகொண்டார்கள்.

ஹியூஸின் மரணத்துக்குப் பிறகு கிரிக்கெட்டில் பாதுகாப்பு உபகரணங்கள் மேலும் பலப்படுத்தப்பட்டன. தலையின் பின்பகுதியை நன்கு மறைக்கும் புதுவிதமான ஹெல்மெட்டை வீரர்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். கிரிக்கெட் போட்டிகளில் பவுன்சர் பந்தால் வீரர்கள் தாக்கப்படும்போது உடனே வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஹியூஸின் நினைவு வருகிற அளவுக்குப் பலத்த தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் அது.

பிலிப் ஹியூஸ் மறைந்த தினமான இன்று கிரிக்கெட் உலகம் ஹியூஸை நினைவுகூர்ந்தது. கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஹியூஸின் புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். இன்று அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட்டின் போட்டியின்போதும் ஹியூஸூக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சரியாக மாலை 4.08 மணிக்கு மைதானத்தில் உள்ள பெரிய திரையில் ஹியூஸ் தொடர்பான 20 நிமிட வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. (408 என்பது பிலிப் ஹியூஸ், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இணைந்த 408-ஆவது வீரர் என்பதைக் குறிக்கிறது.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.