நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மொஹாலி டெஸ்ட்: அஸ்வின், புஜாரா அசத்தல்! இந்தியா 142 ரன்கள் முன்னிலை!

பவுலர்களின் ஆதிக்கம் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியில் தேநீர் இடைவேளைக்குப் பிறகான பகுதியில்தான் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:29 am

சநகன்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 184 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியாவின் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மொஹாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 68 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக எல்கர் 8 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்தது. டியான் எல்கர் 13, ஆம்லா 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

தென் ஆப்பிரிக்க அணி இந்திய சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை எல்கரும் ஆம்லாவும் சிறப்பாக ஆடினார்கள். அதிலும் ஆம்லாவின் ஆட்டம், இதுபோன்ற ஒரு ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று பாடம் கற்பிப்பதுபோல இருந்தது. 38-வது ஓவரில் எல்கரின் விக்கெட்டைப் பறித்தார் அஸ்வின். எல்கர் 37 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு மிகவும் வலுவான தடுப்பாட்டத்தினால் இந்திய அணியினரை சோர்வு கொள்ள வைத்த ஆம்லா, அஸ்வினின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். அவர் 43 ரன்கள் மட்டுமே எடுத்தாலும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருந்தது. பலருடைய பாராட்டுகளைப் பெற்றது.

அதே ஓவரில், 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் விலாஸின் விக்கெட் அஸ்வினுக்குக் கிடைத்தது.

இந்தப் போட்டியிலும் அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்ள டி வில்லியர்ஸ் மிகவும் தடுமாறினார். இதனால் சிலமுறை அவர் தன் அதிரடி ஆட்டத்தை உபயோகப்படுத்தவேண்டிய நிலைமையும் உருவானது. டி வில்லியர்ஸ் 7 ரன்களில் இருந்தபோது ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் அது நோ பாலாக ஆனதால் டி வில்லியர்ஸ் தப்பிப் பிழைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா வீசிய முதல் நோ பால் என்பதுதான் இன்னும் துரதிர்ஷ்டம்.

உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி, 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 26, பிளாண்டர் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

அதன்பிறகு, 3 ரன்களில் பிளாண்டரின் விக்கெட்டை வீழ்த்தினார் ஜடேஜா. ஓரளவு தாக்குப்பிடித்த ஹார்மர், 7 ரன்களில் மிஸ்ராவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்தச் சில ஓவர்களில் டேல் ஸ்டெயினின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். அடுத்த ஓவரில் டி வில்லியர்ஸ் மிஸ்ராவின் அருமையான பந்தில் போல்ட் ஆகி அவுட் ஆனார். அவர் 63 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா அணி கவுரமான ஸ்கோரை எட்ட உதவினார். 68-வது ஓவரின் கடைசிப் பந்தில் இம்ரான் தாஹிரின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். இது அஸ்வினின் 5-வது விக்கெட் மட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 150-வது விக்கெட் ஆகும்.

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 184 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 17 ரன்கள் பின்தங்கியுள்ளது.

பிறகு ஆட வந்த இந்திய அணிக்குத் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்த இன்னிங்ஸிலும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார் தவன். இந்திய அணியில் இடம்பிடிக்கக் கடுமையான போட்டி நிலவும் இந்தச் சூழலில் இரு டக் அவுட்களால் அடுத்த டெஸ்டில் தவன் விளையாடுவது சந்தேகம் என்றே கணிக்கப்படுகிறது.

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில், 7 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்துள்ளது.

அதன்பிறகு முரளி விஜய்யும் புஜாராவும் மிகவும் கவனமாக ஆடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக விளங்கும் விஜய்யை வீழ்த்த தென் ஆப்பிரிக்க பவுலர்கள் மிகவும் போராடினார்கள். எவ்விதமான பந்துவீச்சையும் அவரால் எளிதாக அணுகமுடிந்தது.

பவுலர்களின் ஆதிக்கம் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியில் தேநீர் இடைவேளைக்குப் பிறகான பகுதியில்தான் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஆட்டம் முடிய சில ஓவர்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் 34-வது ஓவரில் அருமையான கேட்ச்சால் விக்கெட்டைப் பறிகொடுத்தார் விஜய். அவர் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஆட்டமுடியும்வரை இந்திய அணி விக்கெட்டை இழக்கவில்லை. கடைசி ஓவரின் 5-வது பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் புஜாரா.

2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 40 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 63 ரன்கள், கோலி 11 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.