ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தோனியின் தாக்கத்தால் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த கிரிக்கெட் மேட்ச்!

சட்டப்படி சரியாக இருக்கலாம். ஆனால் விளையாட்டு உணர்வின்படி பார்த்தால் சரியல்ல...

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:41 am

சநகன்

ஒரு கிரிக்கெட் போட்டிக்கு விக்கெட் கீப்பர் என்பது எவ்வளவு முக்கியம். அணியிலுள்ள ஃபீல்டர்களை எங்கு இடம் மாற்றினாலும் விக்கெட் கீப்பர் மட்டும் அதே இடத்தில் தான் நின்றாகவேண்டும். ஸ்டம்புகளுக்கு அருகே அல்லது சற்று தொலைவில் நின்றுகொள்ளலாமே தவிர விக்கெட் கீப்பரின் இடம் என்பது ஸ்டம்புகளின் பின்னால் தான். இன்றைய நவீன கிரிக்கெட் யுகத்தில் எல்லாமே மாற்றங்களுக்கு உரியது. இதில் விக்கெட் கீப்பரை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன!

நேற்று இங்கிலாந்தில் நடந்த வொர்செஸ்டர்ஷைர் - நார்தாம்ப்டன்ஷைர் அணிகளுக்கு இடையே நடந்த டி20 போட்டியில்தான் இந்த அதிசயம் நடந்தது. முதலில் ஆடிய வொர்செஸ்டர்ஷைர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை மிக வேகமாகத் துரத்த ஆரம்பித்தது நார்தாம்ப்டன்ஷைர். 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் குவித்து வெற்றிக்கு அருகில் சென்றபோது வொர்செஸ்டர்ஷைர் அணி கேப்டன் டேரில் மிட்செல் புதிய உத்தியைக் கையாண்டார். மொயின் அலி வீசிய 16-வது ஓவரின்போது விக்கெட் கீப்பர் பென் காக்ஸின் கால்காப்பு, கிளவ்களைக் கழற்றச் சொன்னார். அவரை ஃப்ளை ஸ்லிப் என்கிற பொஸிஸனில் நிற்கச் சொன்னார். (ஃப்ளை ஸ்லிப்: ஸ்லிப்பின் பின் பகுதியில் வட்டத்தின் ஓரத்தில் நிற்பது; ஷார்ட் தேர்ட் மேன் அருகே).

இதனால் பேட்ஸ்மேன், ஸ்டம்புகளுக்குப்  பின்னால் யாரும் நிற்காத சூழல் ஏற்பட்டது. எப்படியும் எல்லாப் பந்துகளையும் சிக்ஸரும் ஃபோருமாக விரட்டுவதால் எதற்காக விக்கெட் கீப்பர் வீணாக ஸ்டம்புகளின் பின்னால் நிற்கவேண்டும் என்று கேப்டன் எண்ணினார். விக்கெட் கீப்பர், ஃப்ளை ஸ்லிப் பகுதியில் நிற்பதைக்  கண்ட நடுவர்கள் நிக் குக் மற்றும் கிரகாம் லாயிட் ஆகிய இருவரும் விதிமுறைப்படி இது சரியா என நீண்டநேரம் விவாதித்தார்கள். பிறகு விதிமுறைப்படி சரியானதுதான் என முடிவு எடுத்து ஆட்டத்தைத் தொடரச் செய்தார்கள்.

இதனால் அந்த ஓவரில் அதிக ரன்கள் எடுக்கமுடியாமல் போனது. ஒரே ஒரு ரன் மட்டும் விக்கெட் கீப்பர் இல்லாததால் பை ரன் ஆனது. 16-வது ஓவரில் ஆரம்பித்து 18-வது ஓவர் வரை விக்கெட் கீப்பர், ஃப்ளை ஸ்லிப் பகுதியில்தான் நின்றுகொண்டிருந்தார். அப்போது சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசியதால் ஸ்டம்புக்குப் பின்னால் பந்து செல்லவில்லை.

இந்த உத்தி பற்றி வொர்செஸ்டர்ஷைர் அணியின் இயக்குநர் ரோட்ஸ் கூறும்போது,  இது விதிமுறைப்படி சரியானதுதான். எதிரணி ரன்கள் குவிப்பதைத் தடுப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்திய அணி கேப்டன் தோனி, சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும்போது ஸ்டம்புக்குப் பின்னால் நின்றுகொள்வார். அதைப் பார்த்தபோது அருமையான யோசனையாகப் பட்டது. ப்ளை ஸ்லிப் பகுதியில் ஒரு ஃபீல்டர் தேவைப்படது. அதனால் விக்கெட் கீப்பரை நிற்கச் சொன்னோம் என்றார்.

இதுபற்றி அந்த ஓவரில் பேட்டிங் செய்ய நார்தாம்ப்டன்ஷைர் வீரர் ஜோஸ் காப் கூறும்போது, கேப்டன் மிட்செல், பென் காக்ஸைப் பின்னால் போக சொன்னபோது ஸ்டம்புக்குப் பின்னால் நிற்கப் போகிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் கால்காப்பு, கிளவுஸ் இல்லாமல் நிற்பதைப் பார்த்தேன். சட்டப்படி சரியாக இருக்கலாம். ஆனால் விளையாட்டு உணர்வின்படி பார்த்தால் சரியல்ல என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.